vendredi 11 avril 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28
நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

புத்தம் புதிய இலக்கணத்தைத் தீட்டிடுக!
நித்தம் இனிமை நிலைத்து!

29.01.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

நல்ல நெறிகளை நல்கினை! நற்றிறனில்
இல்லை இணையே இனி!

01.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

இக்கவிதை உங்கள் வாழ்வின் நிகழ்வாக இருப்பின்
துணிந்து போராடுங்கள்!

முன்பு சில முறை உங்கள் வலைக்கு வந்திருக்கிறேன்
இனித் தொடா்ந்து வருவேன்!

கவிதைக் கலையில் நீங்கள் அடுத்த 
படிம வளா்ச்சியைக் காண வேண்டும்!

தாண்டாதே! தாண்டாதே! வாசற் தன்னை!
    தகிதகித்துத் தந்துள்ள கவிதை கண்டேன்!
வேண்டாதே என்றிருக்கும் என்றன் உள்ளம்
    வேலவனைத் தாழ்பணிந்து வேண்டி நிற்கும்!
துாண்டாதே கோபத்தை! துணிவை ஊட்டு!
    துாயமனக் காதலரை ஒன்றாய் ஆக்கு!
ஆண்டவனே! அல்லாவே! அம்மை அப்பா!
    அனைவரையும் தொழுகின்றேன்! ரூபன் வெல்க!

02.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

தேன்துளி தொட்டுச் செழுந்தமிழ் தீட்டியுள்ளீா்!
நான்துளி தொட்டு நலமுற்றேன்! - மான்!கிளி
வண்ண வடிவழகை வார்க்கின்ற சீராளன்
எண்ண வடிவழகை ஏத்து!

03.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

உங்கள் தமிழ்ப்பணிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன்
தற்போது எந்த நாட்டில் வாழ்கின்றீா்

உங்கள் கவிதைகள்  எனக்கு மிகவும் பிடித்திருந்தது மேலும் கவிதைக் கலையைக் கற்றுக்கொடுக்கவே உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கேட்டேன்!

வலையில் நிறைய ஒற்றுப் பிழைகள் மலிந்து இருந்தன!
விரைவில் பிழையின்றி எழுதகின்ற இலக்கணத்தைச் சொல்லித் தருகிறேன்

ற்ப்போது - இது பிழை
இரண்டு வல்லின ஒற்றுகள் சோ்ந்து தமிழ்மொழியில் வரா
எந்த இடத்திலும் வரா
விற்பனை
கற்பனை
கற்போம்
இந்த விதியை எளிதாக மனத்துள் நிறுத்திக்கொள்ளலாம்

தொடா்ந்து என்வலையைப் படிக்கவும்!
கவிதைக் கலை தானே வந்தடையும்

சொல்லும் இலக்கணத்தைச் சூடிக் களிப்பதுவே
வெல்லும் கவிதை விதி!
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்

சின்னக் குழந்தையே! சித்திரமே! செந்தமிழைத்
தின்னத் துடிக்கும் செழும்மனமே!- உன்பதிவு
ஆகா அருமை! மிகஅருமை! நீயன்றோ
ஓகோ எனஒளிரும் பல்பு!

04.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

வனப்பு வலைக்குள்ளே வந்து படித்தேன்!
மனப்பூ மலா்ந்து மணந்தது! நற்றோழி
சந்திர கௌரியின் சிந்தனை அத்தனையும்
செந்தமிழ் நல்கும் செழிப்பு! 
----------------------------------------------------------------------------------------------------
இனிய நண்பா் சீராளன் அவா்களுக்கு வணக்கம்!

சீராளா! செந்தமிழ்த் தேன்பருகிப் பாட்டுலகின்
பேராளக் காண்கவே பீடு!

05.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

வாழ்த்து நன்றாக இருக்கிறது

இந்தப் பிறவியிலே இன்பத் தமிழ்மொழியைச்
சொந்தமெனக் கொண்டு சுடா்கின்றாய்! - சந்தமுடன்
வண்ணமும் சித்திரமும் வார்த்துப் புகழெய்தத்
திண்ணமுடன் ஏற்பாய் திறம்

07.02.2013
----------------------------------------------------------------------------------------------------
கம்பன் உறவுகளே!

பல்லாணடு வாழ்க! பலகோடி இன்பங்கள்
வில்லாண்ட வேந்தன் விளைக்கட்டும்! - நல்லதமிழ்
மல்லனும் மல்லிகையும்  மங்கல மாண்புகளை
வெல்லனும் வாழ்வில் விரைந்து!

10.02.2013
----------------------------------------------------------------------------------------------------

9 commentaires:

 1. பிழையின்றி எழுதுகின்ற இலக்கணத்தை தொடருங்கள் ஐயா... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காலம் கனிந்தால் கமழும் தமிழொளிரக்
   கோலம் வரைவேன் குழைத்து!

   Supprimer
 2. பண்ணோடு பா விசைப்பீர் பற்பலரின்
  பாவனைத்தும் பார்த்து ரசிப்பீர்
  நற்றமிழை கற்றிடவே பரிந்துரைப்பீர்
  நற்பாவை கண்டாலும் தவறாது போற்றிப் பாட்டிசைப்பீர் !

  பெருந்தகையே பெற்றிடுவாய் நலம் அனைத்தும் நற்புகழும் நிலையாய்...!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   என்றன் இயல்புகளை ஏத்தி இசைத்துள்ளீா்
   உன்றன் உள்ளத்து உயா்வு!

   Supprimer
 3. வணக்கம் !
  பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா .

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அம்பாள் வரவெண்ணி அன்பன் மகிழ்கின்றேன்
   செம்பால் கருத்தைச் செதுக்கு!

   Supprimer

 4. வணக்கம்!

  மின்வலை கண்டு விளைந்த கருத்துக்கள்
  பொன்மலை போன்று பொலிந்தனவே! - என்னிலை
  இன்னிலை மேவுதே! நன்னிலை மாண்பூட்டிப்
  பன்னிலைப் பாக்களைப் பாடு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பொன்மடல் பூத்துப் பொலிகின்ற காட்சியென
   உன்மடல் வெண்பா ஒளிா்கிறது! - என்தோழா!
   நன்மடல் நாளும் நவில்கின்றாய்! வாழ்த்துகிறேன்
   இன்மடல் வெண்பா இசைத்து!

   Supprimer
 5. வணக்கம்
  ஐயா.

  சந்தத்தமிழில் இசை பாடும்
  தங்கள் கவியின் இரசிகன்...ஐயா..
  இணையம் வந்து....1¹/²மாதங்கள் ஆகி விட்டது....வெகு விரைவில்....தொடர்வேன்....ஐயா.

  வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28 இல் என் கவி பற்றிய அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி......பகிர்வுக்கு நன்றி...ஐயா
  தங்களின் வழிகாட்டி ஆலோசனை என்னை விரைவு படுத்தும்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்
  RépondreSupprimer