கலிவிருத்தம் (அ)
கனிவிருத்தம் - பகுதி 16
86.
வளமெடுத்துச் செழிப்பதுபோல் வந்தொளிரும் கலைவாணி!
அளவெடுத்துச் செய்ததுபோல் அழகொளிரும் திருமேனி!
குளமெடுத்து வைத்ததுபோல் உளமூரும் சுகக்கேணி!
விளமெடுத்துக் கனிகொழுத்து விளைகின்ற கவிக்காணி!
87.
உடையொளிரும் அணியொளிரும் உமையவளின் கூட்டாகி!
இடையொளிரும் தொடையொளிரும் இளமைதரும் பாட்டாகி!
நடையொளிரும் நயமொளிரும் நடனமிடும் நாற்றாகி!
கொடையொளிரும் குலமொளிரும் கொஞ்சுதமிழ் ஊற்றாகி!
88.
மடைபாயும்! மான்பாயும்! மனமிங்குப் பாய்கிறதே!
உடைகாயும்! உலைகாயும்! உயிரிங்குக் காய்கிறதே!
நடைதேயும்! நலந்தேயும்! உடலிங்குத் தேய்கிறதே!
படைஓயும்! பகைஓயும்! அவள்பார்வை ஓய்ந்திடுமோ?
89.
பொன்னென்றே போற்றுவதோ? பூவென்றே சாற்றுவதோ?
மின்னென்றே அஞ்சுவதோ? மீனென்றே கொஞ்சுவதோ?
இன்பென்றே எழுதுவதோ? இசையென்றே மீட்டுவதோ?
என்றென்றே இயம்பிடுவேன் என்னவளின் பேரழகை!
90.
ஆடுகிறேன்! பாடுகிறேன்! அரிமாபோல் செல்லுகிறேன்!
கூடுகிறேன்! கொஞ்சுகிறேன்! குளிர்கவிகள் சொல்லுகிறேன்!
சூடுகிறேன் கனவுகளை! சூழலுகிறேன் மயக்கத்தில்!
தேடுகிறேன் தென்னவளின் திறம்பாடச் சொல்களையே!
தொடரும்
தொடர்ந்து தங்கள் கவிதைகளை
RépondreSupprimerபடித்து வந்தாலே கவிதையின்
மேன்மை குறித்தப் புரிதலும்
கவிதைப் புனையும் திறனும் நிச்சயம் வளரும்
தங்களைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம்
பகிர்வுக்கு மிக்க நன்றி
வர்ணனை வரிகள் பிரமாதம் ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
வணக்கம்,
RépondreSupprimerநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
அருமையான விருத்தப்பாடல்! சந்த சுவை அழகு! நன்றி!
RépondreSupprimerஆடுகிறேன்! பாடுகிறேன்! அரிமாபோல் செல்லுகிறேன்!
RépondreSupprimerகூடுகிறேன்! கொஞ்சுகிறேன்! குளிர்கவிகள் சொல்லுகிறேன்!
சூடுகிறேன் கனவுகளை! சூழலுகிறேன் மயக்கத்தில்!
தேடுகிறேன் தென்னவளின் திறம்பாடச் சொல்களையே//வார்த்தைகளின் ஜாலம் கண்டு மிகவும் பிரமிப்பாக ஐயா.
வில்விழியாள் உள்ளத்தில் வேர்விட்ட நாள்தொட்டு
RépondreSupprimerஇல்லத்தில் இல்லை இருள் -!
அழகிய கனிவிருத்தம் ரசித்தேன் கவிஞரே
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
7
RépondreSupprimerமடைபாயும் நீராக வண்ண விருத்தத்
தொடைபாயும் பாக்களைச் சூடிக் - கொடைகொடுக்கும்
வள்ளலென வாரிக் கவிகொடுக்கும் பாவலனே!!
உள்ளமுனைப் போற்றும் உவந்து!
என்னென்று சொல்வேன்
RépondreSupprimerமுன்னின்று மின்னும்
உன்னின்று பாயும் வரிகள்.
கன்னலோ! கவிப்பின்னல்
என்னிலை மறந்தேன்.
இன்னும் என் நன்றிகள்.
இனிய வாழ்த்துடன்.
வேதா. இலங்காதிலகம்.