கலிவிருத்தம்
(அ) கனிவிருத்தம்
- பகுதி 9
41.
அன்னத்தின் உறவும்..நீ! அமுதத்தின் பிறப்பும்..நீ!
இன்பத்தின் மகளும்..நீ! இதயத்தின் தமிழும்..நீ!
கன்னத்தில் கமழ்கின்ற சின்னத்தின் அரசும்..நீ!
என்சொத்தின் தலைமை..நீ! எனக்கெல்லாம் ஆனவளே!
42.
என்றுன்னைக் கண்டேனோ அன்றென்னை இழந்தனடி!
வென்றுன்னை மீள்வேனா? விரலழகில் வீழ்வேனா?
நன்றுன்னைப் படைத்தவனின் நல்லாற்றல் வியக்கின்றேன்!
நின்றுன்னைப் பார்த்தபடி நெடுந்தவத்தைச் செய்கின்றேன்!
43.
கழுதையைப்போல் கனவுகளைக் கட்டிமனம் கனக்குதடி!
உழுவதைப்போல் என்னுயிரை உன்னழகு கலக்குதடி!
தொழுவதைப்போல் உளமொன்றித் தொடர்ந்துன்னை நினைக்குதடி!
விழுதினைப்போல் பிடித்தென்னை விளையாடும் வெண்ணிலவே!
44.
நாயாக நான்பிறந்தால் நங்கையிவள் வளர்க்கட்டும்!
பாயாக நான்பிறந்தால் பாவையிவள் படுக்கட்டும்!
பேயாக நான்பிறந்தால் பெண்ணிவளைப் பிடிக்கட்டும்!
சேயாக நான்பிறந்தால் சிறந்திவளைக் காக்கட்டும்!
45.
பூனையென நான்பிறந்தால் பூவையிவள் இடமிருப்பேன்!
யானையென நான்பிறந்தால் அழகியிவள் மேல்சுமப்பேன்!
பானையென நான்பிறந்தால் பாவையிவள் இடுப்பமர்வேன்!
மோனையென நான்பிறந்தால் முல்லையிவள் பாட்டிசைப்பேன்!
46.
பூவாக நான்பிறந்தால் பொற்செல்வி குழல்மணப்பேன்!
பாவாக நான்பிறந்தால் பவளவிரல் சுவைபார்ப்பேன்!
கோவாக நான்பிறந்தால் குவலயத்தைப் பரிசளிப்பேன்!
தேவாக நான்பிறந்தால் தேவியிடம் சரண்புகுவேன்!
47.
ஈயாக நான்பிறந்தால் இனியவளின் மேல்அமர்வேன்!
தீயாக நான்பிறந்தால் தேன்மொழியின் கற்பாவேன்!
வேயாக நான்பிறந்தால் வேல்விழியின் சீர்இசைப்பேன்!
தாயாக நான்பிறந்தால் தளிர்க்கொடியே உனைப்பெறுவேன்!
48.
கல்லாக நான்பிறந்தால் காரிகையின் வீடாவேன்!
புல்லாக நான்பிறந்தால் பொற்பாத வழியாவேன்!
சொல்லாக நான்பிறந்தால் தூயவளின் மொழியாவேன்!
நெல்லாக நான்பிறந்தால் நேரிழைக்கே உணவாவேன்!
49.
உடையாக நான்பிறந்தால் ஊர்வசியின் எழில்சுவைப்பேன்!
குடையாக நான்பிறந்தால் கோதையிடம் பணிபுரிவேன்!
மடையாக நான்பிறந்தால் மாதாட மகிழ்வடைவேன்!
அடையாக நான்பிறந்தால் அணங்கிற்கே இனிப்பாவேன்!
50.
தேனாக நான்பிறந்தால் தேடியிவள் நாப்புகுவேன்!
மீனாக நான்பிறந்தால் வீணையிவள் கண்புகுவேன்!
மானாக நான்பிறந்தால் வஞ்சியிவள் முகும்புகுவேன்!
நானாக நான்பிறந்தால் என்றுமிவள் உயிர்புகுவேன்!
தொடரும்
ஒவ்வொரு வரியும் இனிமை...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
தமிழே இனிமை! தமிழே முதன்மை!
தமிழே பெருமை தரும்!
எப்பிறவி எடுத்தாலும்
RépondreSupprimerஎப்பொழுதும் தமிழை மறவாத வர்ணணைக்குள் எங்களையும் ஆழ்த்திய விதம் சிறப்புங்க ஐயா.
Supprimerவணக்கம்!
எந்தப் பிறவியிலும் சந்தத் தமிழ்பாடி
விந்தை புாிவேன் விழைந்து!
இனிக்கும் வரிகள் அருமை ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
இனிக்கும் தமிழை இசைக்கும் மனமே
மணக்கும் மலா்போல் மலா்ந்து!
RépondreSupprimerபிறக்கும் பிறப்பெல்லாம் பெண்ணவளை வேண்டிச்
சிறக்கும் கவிகளைச் செய்தீா்! - பறக்கின்றேன்
கற்பனை வானில்! களிக்கின்றேன் செந்தேனில்!
தற்பரன் தந்த தமிழ்
Supprimerவணக்கம்!
வெண்பா விருந்தளிக்கும் வெற்றித் தமிழ்ச்செல்வா!
நண்பா! நவில்கின்றேன் நல்வணக்கம்! - பண்பால்..நீ
பாடிப் பரவுகின்றாய்! நன்றியை நெஞ்சமே
கோடி முறையேனும் கூறு