jeudi 24 avril 2014

கண்ணதாசன் - பகுதி 1
கவிதைத் தலைவன்

1.
பாலொழுகும் முகமுடையார்! புலமை பொங்கிப்
           பாட்டொழுகும் அகமுடையார்! பசுமை கொண்ட
ஆலொழுகும் பால்போன்று பாசம் மேவி
           அன்பொழுகும் வடிவுடையார்! உழைக்கும் மக்கள்
மேலொழுகும் வேர்வையெனச் சந்தப் பாக்கள்
           விரைந்தெழுதும் திறனுடையார்! எழுதும் வண்ணத்
தாளொழுகும் மையினிலே கொஞ்சும் இன்பத்
           தமிழொழுகும் கவியரசர் கண்ண தாசர்! 

2.
இனிக்கின்ற உரையாளர்! ஆய்ந்து நன்றே
           எழுதுகின்ற உரையாளர்! திகட்டாத் தேனில்
நனைக்கின்ற இதழாளர்! பலவும் ஏற்று
           நடிக்கின்ற திரையாளர்! மக்கள் வாழ
நினைக்கின்ற திருவாளர்! நெடியோன் சீர்பால்
           நெகிழ்கின்ற அருளாளர்! வாழ்வில் நாளும்
கனக்கின்ற துயரத்தைக் கண்ட போதும்
           கலங்காத கவியரசர் கண்ண தாசர்! 

3.
கொட்டிவைத்த பெரும்புதையல்! கவிதைக் கோட்டை!
           கொஞ்சுதமிழ் சுரக்கின்ற ஊற்று! மெல்லக்
கட்டிவைத்த மொட்டாக மணக்கும் இன்பம்!
           கனிந்தொழுகும் தேனாக இனிக்கும் உள்ளம்!
வட்டிவைத்த குடும்பத்தில் பிறந்த போதும்
           வாரிவாரித் தமிழளித்த வள்ளல்! முன்னோர்
எட்டிவைத்த யாப்பழகை ஏழை நெஞ்சுள்
           இட்டுவைத்த கவியரசர் கண்ண தாசர்! 
4.
போதையிலே இருந்தாலும் புலம்பும் சொற்கள்
           பூங்கவிதை மணம்வீசம்! நடந்து சென்ற
பாதையிலே தாள்பட்ட கல்லும் முள்ளும்
           பண்பேந்திப் பா..பேசும்! விசயன் கேட்கக்
கீதையிலே சொன்னவுரை நெஞ்சுக் குள்ளே
           கீர்த்தனையாய்ச் சுவைகொடுக்கும்! அடியார் பாடும்
கோதையிலே மெய்யுருகும் வினைபோல், பாக்கள்
           கொடுத்துயர்ந்த கவியரசர் கண்ண தாசர்!

5.
கண்ணன்தன் பேரழகில் காதல் கொண்டார்!
           கம்பன்தன் சீரழகில் மோகம் கண்டார்!
அண்ணன்தன் சொல்லழகில் ஆசை வைத்தார்!
           அருங்காம ராசரிடம் அன்பைப் பூத்தார்!
எண்ணம்பொன் சூடிடவே பாக்கள் நல்கும்
           இனியதமிழ் அன்னையிடம் தம்மை ஈந்தார்!
வண்ணம்,மென் சந்தமெலாம் மழைபோல் நல்கும்
           வளமுடைய கவியரசர் கண்ண தாசர்!

தொடரும்

26 commentaires:

 1. Réponses

  1. வணக்கம்!

   ஓடிவந்து தந்த கருத்திற்கும் வாக்கிற்கும்
   கோடி வணக்கங்கள் கொள்!

   Supprimer
 2. கவிதைத் தலைவன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பற்றிய தொடர் கவிதையை சுவைத்தேன். இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கவிதைத் தலைவனைக் காட்டும் தமிழைப்
   புவியோா் உரைப்பார் புகழ்ந்து!

   Supprimer
 3. மிக அழகிய தமிழில் சரசரவென்று ஓடும் குளிர்ந்த ஓடையைப் போல் கவிஞரைப் பற்றி கவிதை யாத்திருக்கிறீர்கள். \\உழைக்கும் மக்கள்
  மேலொழுகும் வேர்வையெனச் சந்தப் பாக்கள்\\ என்ற வரிகள் மிகவும் ரசிக்கவைத்தன. வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பூத்த மலா்போல் பொலிகின்ற சொல்லெடுத்துச்
   சோ்த்த கவிதைச் சிறப்பு!

   Supprimer
 4. கவிஞருகே விதை அருமை

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   கண்ணனின் தாசனைக் காட்டும் கவிபடித்துக்
   கண்ணனே தந்தான் கருத்து

   Supprimer
 5. வணக்கம்
  ஐயா.

  கவித்தலைவன்பற்றி கவி புனைந்த கவிப்பாக்கள்சிறப்பு....வாழ்த்துக்கள் ஐயா..

  சில நாட்கள் இணையம் வர முடியாமல் போனது... இனி வருகை தொடரும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இனிய கருத்திற்கும் ஈந்தவாக் கிற்கும்
   நனிநன்றி சொல்லுமென் நா!

   Supprimer
 6. வணக்கம்
  த.ம8வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எட்டாம் நிலையில் எழுதிய வாக்கிற்குக்
   கொட்டுகிறேன் நன்றி குவித்து!

   Supprimer
 7. கண்ணதாசன் குறித்த கவிதை வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அருமைக் கவிஞன் அழகினைப் பாடப்
   பெருமை பெருகும் பெருத்து!

   Supprimer

 8. வணக்கம்!

  சில கருத்துக்களைக் கவனக் குறைவால் நீக்கி விட்டேன்
  அன்பா்கள் பொறுத்தாற்றுமாறு வேண்டுகிறேன்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கவனக் குறைவால் களைத்தேன் கருத்தை!
   இவனின் செயல்செய் இயல்பு!

   Supprimer

 9. கன்னல் கவிகொடுத்த நம்கண்ண தாசனை
  இன்பத் தமிழில் இசைத்துள்ளீா்! - என்றென்றும்
  உன்றன் வலைபடித்து உள்ளம் உருகுதையா!
  நன்றுன் கவிதை நடை!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!!

   கன்னல் கவிகளைக் கட்டித் தருபவன்!
   மின்னல் அடிகளை வீசுபவன்! - என்றென்றும்
   என்னுள் இருந்தே இனியதமிழ் பேசுபவன்!
   குன்றாப் புகழ்க்கவிக் கோ!

   Supprimer
 10. அற்புத கவி கண்ணதாசனைப் போற்றும் இனிய கவிதை அற்புதம் . மனதை மயக்கியது கவிதை

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அற்புதப் பாவலன் அள்ளி அளித்தகவி
   பொற்புடைப் பூந்தமிழ் போற்று!

   Supprimer
 11. வணக்கம் !
  கண்ணதாசனைப் போற்றிப் பாடும் பாடல் கண்டேன்
  கனியில் ஊறிய சுவையாய் எண்ணிப் பருகிச் சென்றேன்
  இன்னல் தவிர்த்த சொல்லின் வளங்கள் ஓங்குக என்றும்
  ஈடு இணையற்ற கவி நீ என்று உலகம் போற்ற !

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இன்னல் அனைத்தும் இவா்கவி கேட்டவுடன்
   மின்னலென ஓடும் விரைந்து!

   Supprimer
 12. தாங்கள் காதலைப்பற்றியே கனிவிருத்தம் தொடர் எழுதுபவர. அவரோ பன்னூறு பாடல்களைப் பண்ணோடு தந்தவர். சொல்லவா வேண்டும்? கனிவிருத்தத்தைத் தூக்கிச் சாப்பிட்டு கண்ணதாச விருத்தக் கொடி உயரே பறக்கிறது! அதுவும் முதல்விருத்தச் சொல்லழகில் சொக்கிப்போனேன். இதைத் தொடருங்கள் அய்யா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பண்ணோடு வாழ்ந்திட்ட பாவலனை என்னுடைய
   கண்ணோடு கொண்டேன் கனிந்து!

   Supprimer
 13. கண்ணதாசனின் எண்ணக் குவியல்களை எடுத்து
  இயம்பிய ஏந்தலே நிலைக்கட்டும் உம் புகழும் புவி உள்ளவரை...! வாழ்த்துக்கள் ...!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எண்ணம் மிளிரும் இனிய கவியனைத்தும்
   வண்ணம் மிளிரும் வடிவு!

   Supprimer