கவிதைத் தலைவன்
16.
வாழ்நிலையை வரலாறை வடிவாய்த் தீட்டி
வருகின்ற தலைமுறைக்கு வைத்தார்! பொல்லாச்
பாழ்நிலையை உருவாக்கும் தீயோர் தம்மின்
பல்லுடைத்துப் பறந்தோடச் செய்தார்! நம்மின்
ஊழ்நிலையை உணர்ந்திட்டால் துன்பம் இல்லை!
உறவியலை உளங்கொண்டால் பகையே இல்லை!
சூழ்நிலையை எதிர்கொண்டு துணிந்து நின்று
தொடர்ந்துழைத்த கவியரசர் கண்ண தாசர்!
17.
ஆசைவரை ஆனவரை பாக்கள் பாடி
அமுதொத்த தமிழ்மொழியைப் பரவச் செய்தார்!
பூசைவரை நாமிட்டுப் போற்றிப் பாடப்
பொற்கண்ணன் புகழ்புனைந்தார்! சுப்பன், சுல்தான்,
சூசைவரை உயிர்கலந்தே சுவைக்கும் பாவால்
சூழ்ந்துள்ள துயர்துடைத்தார்! முன்னோர் கண்ட
ஓசைவரை நிற்காமல் மேலும் மேலும்
உருகொடுத்தார் கவியரசர் கண்ண தாசர்!
18.
பாட்டெழுதப் பயில்வோரின் கையே(டு) ஆனார்!
பகைவா்களும் பணிகின்ற மெய்யே(டு) ஆனார்!
சீட்டெழுதும் பாரதிபோல் சிறந்தோர் வாழ்வின்
சீரெழுதும் கவியானார்! உலகை எய்த்துத்
தீட்டெழுதும் கொடுமைகளைத் தீய்க்க வேண்டிக்
செங்களத்தில் போராடும் மறவர் ஆனார்!
கேட்டெழுதும் சந்தங்கள் கொட்டித் தந்த
கெழுமைமிகு கவியரசர் கண்ண தாசர்!
19.
கூட்டெழுதும் வன்மையென அணிகள் தம்மைக்
குவித்தெழுதும் திறனுடையார்! முன்னே மெட்டுப்
போட்டெழுதும் களத்தினிலே ஈடே இன்றிப்
புகுந்தாடும் மறமுடையார்! பழமை தன்னை
மீட்டெழுதும் மதியுடையார்! பாடும் பாட்டில்
விரைந்தோடும் நதியுடையார்! நெருப்பாய்க் கோபம்
மூட்டெழுதும் பொழுதினிலே முனிவர் ஆனார்!
முதுமொழியார் கவியரசர் கண்ண தாசர்!
20.
எத்திக்காய்ச் சென்றாலும் அமுதை ஊட்டும்
அத்திக்காய்ப் பாட்டொலிக்கும்! வாழ்வை வெல்லும்
சத்துக்காய்ப் படைத்தகவி! புலமை மின்னும்
சான்றுக்காய்க் கிடைத்தகவி! பாடும் நுட்ப
உத்திக்காய் உவப்புக்காய் உதித்த பாக்கள்
உறவுக்காய் உயர்வுக்காய் நெறிகள் ஓதும்!
சொத்துக்காய் உலகோடும்! தமிழ்த்தாய் வாழும்
சொத்தானார் கவியரசர் கண்ண தாசர்!
தொடரும்
வணக்கம்
RépondreSupprimerஐயா.
முடிவில்லா கவிக்கடலே
கவிஞனுக்கு பாடிய கவிப்பாக்கள்
இரசணை மிக்க வரிகள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
முடிவில்லாச் சீருடைய முத்தமிழ்த் தாசன்
அடியெல்லாம் இன்னமுத ஆறு!
///பாட்டெழுதப் பயில்வோரின் கையே(டு) ஆனார்!
RépondreSupprimerபகைவா்களும் பணிகின்ற மெய்யே(டு) ஆனார்!///
சரியாகச் சொன்னீர்கள் ஐயா
அருமை
அருமை
நன்றி
Supprimerவணக்கம்
செம்பொன் சிலையழகாய்ச் சிந்தையை ஈா்த்திடும்
நம்கண்ண தாசனை நாடு!
/// சத்துக்காய்ப் படைத்தகவி! புலமை மின்னும்
RépondreSupprimerசான்றுக்காய்க் கிடைத்தகவி ///
சிறப்பான வரிகள் ஐயா...
வாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
சான்று செலும்பாக்கள் சத்தியத்தின் தேன்பூக்கள்!
ஆன்ற தமிழின் அழகு!
RépondreSupprimerஅத்திக்காய்ப் பாட்டினிலே ஆடும்காய் நம்நெஞ்சம்!
எத்திக்காய் ஏகிநாம் சென்றாலும் - புத்தமுதை
ஊட்டும் கவிதை! உறைந்துள்ள துன்பத்தை
ஓட்டும் கவிதை ஒலித்து!
Supprimerவணக்கம்!
அத்திக்காய் பாட்டினிக்கும்! அன்னைத் தமிழினிக்கும்!
புத்திக்காய் முற்றிப் புகழினிக்கும்! - எத்திக்காய்
வாழ்க்கை இழுத்தாலும் வண்கண்ண தாசனின்
ஆழ்கவிதை காக்கும் அணைத்து!
கண்ணதாசன் காவியம் தித்திப்பாய் இனித்தது! அருமை! தொடருங்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தித்திக்கும் பாட்டிசைத்த தேனிசை பாவலனை
எத்திக்கும் ஏத்தும் எழுந்து
பூசைவரை நாமிட்டுப் போற்றிப் பாடப்
RépondreSupprimerபொற்கண்ணன் புகழ்புனைந்தார்! சுப்பன், சுல்தான்,
சூசைவரை உயிர்கலந்தே சுவைக்கும் பாவால்
சூழ்ந்துள்ள துயர்துடைத்தார்! -- அழகு அய்யா அழகு!
Supprimerவணக்கம்!
மெல்லப் படித்து மிகுசுவை கண்டுரைத்தீா்
நல்ல இடத்தை நவின்று!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ஆசைவரை ஆனவரை பாக்கள் பாடி
RépondreSupprimerஅமுதொத்த தமிழ்மொழியைப் பரவச் செய்தார்!//அருமையான படிமம் ! வாழ்த்துக்கள் ஐயா.
Supprimerவணக்கம்!
அன்னோன் அடிகள் அனைத்தும் மிளிா்கின்ற
பொன்னோ மலரோ புகல்?
அருமை அய்யா..
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அருமைத் தமிழ்பருகி ஆா்த்தகவி யாவும்
பெருமை அளிக்குமெனப் பேசு!
வணக்கம் !
RépondreSupprimerரசனை மிகுந்த வார்த்தைகளினால் சாற்றிய பாமாலை கண்டு மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் தங்கள் பகிர்வு .
Supprimerஇனிய தமிழன்றோ? இன்கவிதை பூத்துக்
கனியும் தமிழன்றோ காப்பு!
ஊழ்நிலையை உணர்ந்திட்டால் துன்பம் இல்லை!
RépondreSupprimerஉறவியலை உளங்கொண்டால் பகையே இல்லை!
முற்றிலும் உலகியல் உண்மையை உணர்த்தும் உன்னத வரிகள்!
Supprimerவணக்கம்!
புலவா் வருகையால் புல்லாிக்கும் உள்ளம்
நிலைக்கும் இனிமை நிறைந்து!
அருமை.
RépondreSupprimerஎந்த வரியைக் குறிப்பிட்டுச் சொல்வது
RépondreSupprimerஎல்லாமே தேனாக இனிக்கையில்...
படித்து பரவசம் மிகக் கொள்கிறோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்