jeudi 17 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 13



கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 13

66.
தேவிவரும் நடைகண்டு திகைக்குதடி பூந்தென்றல்!
தாவிவரும் குரங்காகத் தவிக்குதடி என்நெஞ்சம்!
சீவிவரும் குழலழகைச் சீர்கமழும் மொழியழகை
ஓவியரும் வரைந்தாரோ? காவியரும் படைத்தாரோ?


67.
அக்கால ஓவியங்கள் அத்தனையும் தோற்றோடும்!
இக்கால ஓவியங்கள் ஏன்வம்பு? பயமேற்கும்!
எக்காலம் ஆனாலும் இவளைப்போல் படமேது?
கொக்காக நிற்கின்றேன் கொள்ளையிடல் எந்நாளோ?

68.
பொற்குழைத்து வடித்தானா? பூத்தொகுத்துப் புனைந்தானா?
நற்குளத்து நாயகியை? நறுமணத்துத் தேவதையை?
சொற்குழைத்து நம்கம்பன் சொன்னகவி ஒன்றேனும்
சற்றுரைத்து நின்றிடுமோ தக..தகக்கும் அவள்அழகை?

69.
குகையிடத்தில் அமர்ந்துள்ள குறுமுனிக்கும் ஆசைவரும்!
புகைப்படத்துக் கருவிக்கும் உனைக்கண்டு போதைவரும்!
நகைக்கடைக்கு நீவந்தால் நல்லணிகள் சண்டையிடும்!
திகையிடத்தில் கிடக்கின்றேன் தென்னவளே எனைத்தேற்று!

70.
வரைகின்ற தூரிகைக்கு மதுமயக்கம் வருவதுமேன்?
விரைகின்ற விண்கலமாய் எண்ணங்கள் செல்வதுமேன்?
நிரைகின்ற ஆசையலை நெகிழ்ந்துருகிப் பொங்குவதேன்?
நரைகின்ற பருவத்தும் நறுங்காதல் பொழிபவளே!

தொடரும்

5 commentaires:

  1. அருமையான சந்த நயம் மிக்க கவிதை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  2. அக்கால கம்பனையும் அடக்கிவிட்டாய் உன்கவியில்!
    இக்கால வர்ணனையும் இதற்குமுன் தோற்றோடும்!
    முக்காலம் வளர்காதல் முடிவின்றித் தொடர்வதுபோல்
    எக்காலம் அழியாமல் எழிற்காதல் கவிவாழ்க!

    RépondreSupprimer
  3. //குகையிடத்தில் அமர்ந்துள்ள குறுமுனிக்கும் ஆசைவரும்///
    அற்புதம் ஐயா

    RépondreSupprimer
  4. தக..தகக்கும் வரிகளை ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer

  5. விண்கலம் போன்று வியன்தமிழின் சீரேந்திப்
    பண்கலம் ஏவும்நற் பாவலனே! - மண்களம்
    எங்கும் புகழ்வீசும் இந்தக் கனிவிருத்தம்
    சங்கத் தமிழாய்த் தழைத்து!

    RépondreSupprimer