samedi 19 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 15




கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 15
 
76.
பூக்களுக்குள் போட்டிவரும் பொன்மகள்உன் குழல்தழுவ!
பாக்களுக்குள் போட்டிவரும் பண்மகள்உன் சீர்தழுவ!
ஈக்களுக்குள் போட்டிவரும் எழில்மகள்உன் சுவைதழுவ!
மாக்களுக்குள் போட்டிவரும் மதுமகள்உன் கைத்தழுவ!

77.
மல்லிமலர் மகளென்றே மாதுன்னைக் கூறுதடி!
அல்லிமலர் தாயென்றே அன்பேந்தி ஆடுதடி!
மெல்லிமலர் உறவென்றே வியந்துன்னைப் பாடுதடி!
சுள்ளிமலர் நட்பென்றே சொல்லிமணம் சூடுதடி!

78.
வாழைப்பூ வளத்தழகி! வஞ்சிப்பூ நலத்தழகி!
தாழைப்பூ மணத்தழகி! தண்குவளை முகத்தழகி!
ஏழைப்பூ என்றாடும் எழில்தும்பை உளத்தழகி!
பேழைப்பூ குறிஞ்சியெனப் பேறுடைய நல்லழகி!

79.
அனிச்சம்பூ அகமுடையாள்! அவரைப்பூ அழகுடையாள்!
இனிக்கும்பூ அத்தனையும் இதயப்பூ எனவுடையாள்!
நுனிக்கும்பூ முக்குடையாள்! நுண்மைப்பூ இதழுடையாள்!
பனிக்கும்பூ போல்குளிரைப் பாய்ச்சுகிற பண்புடையாள்!

80.
விரல்காந்தம்! விழிக்குவளை! வெண்பற்கள் ஒளிர்முல்லை!
திரள்மேகக் குழல்மணக்கும் தேனருப்பு! மூக்கெள்பூ!
குரல்இதழ்கள் குங்குமப்பூ! குளிர்கன்னம் கோவைப்பூ!
பெருமார்பு கோங்காகும்! அருந்தாள்கள் தாமரையே!

81.
புன்னகையில் பூத்தாடும் முளரிப்பூ! என்னவளின்
மென்னுடலில் கூத்தாடும் ஒண்பொற்பூ! சின்னவளின்
நன்னடையில் நயந்தாடும் அல்லிப்பூ! தென்னவளின்
மின்னிடையில் பிறந்தாடும் வெள்ளிப்பூ! அப்பப்பா!

82.
பாக்காடு மலந்தாடப் பைந்தமிழின் சீர்பாடப்
பூக்காடு போன்றவளே! புலவன்முன் பொலிந்தாடு!
நோக்காடு துளியில்லை! நொடிப்பொழுதும் பிரிவில்லை!
சாக்காடு எனும்சொல்லே சத்தியமாய் நமக்கில்லை!

83.
பூந்தாது மஞ்சத்தில் புரண்டாடும் வண்டானேன்!
மாந்தாது கொத்தாக மனமாடும் நிலையானேன்!
சேர்ந்தாடும் கற்பனைகள் செழித்தாடும் பொழிலானேன்!
கூர்ந்தாளும் என்புலமை குதித்தாடும் கவியானேன்!

84.
கோடிமலர் பேரழகைக் கொண்டொளிரும் பொற்கோதை
பாடிமலர் பறிக்கின்றாள்! பஞ்சாகப் பறக்கின்றேன்!
வாடிமலர் சாய்ந்தாலும் வஞ்சியிவள் கைப்பட்டாள்
தேடி..மலர் சொர்க்கத்தைச் சென்றடைந்த இன்பெய்தும்!

85.
சிந்தைப்பூ மணக்குதடி! செந்தமிழ்ப்பூ செழிக்குதடி!
விந்தைப்பூ பலபூத்து வேடிக்கை காட்டுதடி!
சந்தைப்பூ உனைப்பார்த்துச் சந்தப்பூ சாற்றுதடி!
முந்தைப்பூ அத்தனையும் மூச்சடைந்து தோற்றதடி!

தொடரும்

9 commentaires:

  1. வணக்கம் !
    முத்து முத்தான வார்த்தைகள் அத்தனையும் இன்பத்
    தேன் சுரக்கும் ! வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  2. தேன் வரிகளை சுவைக்க நாங்களும் வண்டானோம்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. பூக்களுக்குள்ளேயே போட்டியா
    அருமை ஐயா

    RépondreSupprimer

  4. அப்பப்பா எத்தனைப்பூ! அத்தனையும் பொன்விாிப்பு!
    செப்பப்பா செந்தமிழின் சீா்சிறப்பு! - ஒப்பப்பா
    சங்கக் கவியினிப்பு! தந்தாய் பெரும்வியப்பு!
    பொங்கும் இனியபுகழ்ப் பூ!

    RépondreSupprimer
  5. பூப்பூவாய் பூத்திருக்கும் பூமகளின் வர்ணிப்பு...

    RépondreSupprimer
  6. ஈக்களெல்லாம் மொய்த்திடும் பூக்கள் மயங்கும்!உன்
    பாக்களிலே தன்அழகைப் பார்த்து!

    அனைத்து பாடல்களும் அருமை. அருமை. மிகஅருமை கவிஞர்.

    RépondreSupprimer
  7. மழைக்காற்றில் உதிரும் மலர்களை போல என்ன ஒரு தெள்ளிய நடை !
    அழகு !

    RépondreSupprimer
  8. பூவெல்லாம் உம்பாட்டில் புன்னகைக்கும் இதழ்கோர்த்து
    பாவெல்லாம் புகழ்பாடும் பைந்தமிழின் எழில்சேர்த்து
    நாவெல்லாம் தேன்சுரக்கும் நற்கவிகள் மீள்படித்து
    மாவெல்லாம் தானாக மணல்கோலம் போடுதையா..!

    அழகோ அழகு அத்தனையும் அருமை
    வாழ்த்துக்கள் கவிஞரே
    வாழ்க தமிழ் வளர்க உன் பணி
    வாழட்டும் தலை முறை

    RépondreSupprimer
  9. கனி விருத்தம் தேன் கவிதைகள்....
    வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer