கவிதைத் தலைவன்
6.
பார்க்கின்ற காட்சியெலாம் பாட்டாய் மாறும்!
பகைவருக்கும் பண்பூட்டிப் பாடம் கூறும்!
சேர்க்கின்ற செல்வத்தைத் துரும்பாய் எண்ணித்
தீர்த்தகதை வாழ்கின்ற வழியைச் சொல்லும்!
ஈர்க்கின்ற காந்தமென ஈந்த நூல்கள்
இவ்வுலகைத் தம்வயமாய் ஆக்கிக் கொள்ளும்!
வேர்க்கின்ற வேர்வையிலும் தமிழின் வாசம்
விளைக்கின்ற கவியரசர் கண்ண தாசர்!
7.
பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற போதும்
படைப்புலகை நன்காய்ந்து மாற்றம் கொண்டார்!
தொகுத்தறிவு சூட்டுகின்ற ஆக்கம் தந்தார்!
தூய்மையிலா அரசியலைத் தூற்றி நின்றார்!
வகுத்தறிவு கூட்டுகின்ற முன்னோர் மாண்பை
வான்மழைபோல் பொழிகின்ற வரத்தைப் பெற்றார்!
மிகுத்தறிவு மேவியவர் வியக்கத் தென்றல்
வீசியவர் கவியரசர் கண்ண தாசர்!
8.
வீடுவரை உறவென்றார்! வாழ்ந்த வாழ்வால்
வீதிவரை துணையென்றார்! முடிவில் சேரும்
காடுவரை மகனென்றார்! ஆன்மா வோடு
கடைச்சிவரை யார்என்றார்! இந்தப் பாடல்
ஏடுவரை நிற்காமல் இதயம் என்னும்
கூடுவரை பாய்ந்திடுமே! வறுமை வாட்டத்
தோடுவரை விற்றுழலும் வறியோர் வாழத்
துணிவூட்டும் கவியரசர் கண்ண தாசர்!
9.
கல்லாரும் கற்றவரும் களிக்கும் பாடல்!
இல்லாரும் உள்ளாரும் இசைக்கும் பாடல்!
நல்லாரும் பொல்லாரும் நவிலும் பாடல்!
வல்லாரும் வளைந்தோரும் வாழ்த்தும் பாடல்!
பல்லாரும் பசிமறந்து பாடும் பாடல்!
பாவலரும் நாவலரும் நாடும் பாடல்!
எல்லாரும் இன்பமுறும் இதயப் பாடல்
ஈந்தளித்த கவியரசர் கண்ண தாசர்!
10.
திரையுலகின் கவிநிலவாய் உதித்த தாசர்!
தீம்புனலாய்ச் சொற்பெருக்கை அளித்த தாசர்!
தரையுலகில் தாமுற்ற வாழ்வைப் பாடிக்
தமிழுலகின் தனிச்சுடராய் மின்னும் தாசர்!
மரைமலரில் அமர்ந்தொளிரும் மாதைத் தம்மின்
மனமலரில் எழுந்தொளிரச் செய்த தாசர்!
அரை..மனத்தில் குடிகொண்ட மிருகம் தன்னை
அடக்கியவர் கவியரசர் கண்ண தாசர்!
தொடரும்
// பல்லாரும் பசிமறந்து பாடும் பாடல்... //
RépondreSupprimerஉண்மை தான் ஐயா...
Supprimerவணக்கம்!
பாமரரும் பாடிப் பரவுகின்ற செந்தமிழ்
மாமணி தாசனை வாழ்த்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
தாசர் பற்றிய கவி மாலை என் நெஞ்சை அள்ளி எடுத்தது ஐயா.
அவர் மறைந்தாலும் அவர் கவி வடிவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
தமிழுக் குழைத்தோர் சாவதில்லை! எல்லா
நிமிடமும் வாழ்வாா் நிலத்து!
கவியரசு பற்றிய கவிமாலை அருமை...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
புவிமாலை வாடி வதங்கும்! புகழார்
கவிமாலை வாடாது காண்!
அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முத்தையைா நீ..கொடுத்த முத்தமிழ் அத்தனையும்
சொத்தையா என்போம் தொடா்ந்து!
RépondreSupprimer//கல்லாரும் கற்றவரும் களிக்கும் பாடல்!
இல்லாரும் உள்ளாரும் இசைக்கும் பாடல்!//
அருமை அருமை. சரியாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
திரைப்பட வானில் திகழும் நிலவு!
மரைமண தாசனை வாழ்த்து!
அருமை.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கன்னல் கவியால் கலக்கும் கவியரசா்
என்றும் இருப்பார் இனித்து!
பார்க்கின்ற காட்சியை எல்லாம் பாட்டாய் எழுத கண்ணதாசனால்மட்டுமே முடியும்
RépondreSupprimerநன்றி ஐயா
Supprimerவணக்கம்!
பாா்க்கின்ற காட்சிகளைப் பாட்டாய்ப் படைத்திங்குச்
சோ்த்தார் புகழைச் செழித்து!
இரவெல்லாம் தாலாட்டாய் ஒலிக்கும் கண்ணதாசனின் வரிகள் இளைஞர்களை ஊக்குவிக்கவும் செய்யும். கண்ணதாசனின் பாடலைப்போல் உங்கள் பாடலும் அருமை!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தாலாட்டுப் பாட்டின் தகையறிந்து தாய்மனம்
காலாட்டிக் கேட்கும் கவி!
RépondreSupprimerசோ்ந்த மொழியழகும் சீா்த்த நடையழகும்
கூா்ந்த கருத்தழகும் கூத்தாடும்! - ஓா்ந்தே
புவியை மறக்கும் புதுச்சுவை கூட்டும்!
கவிதைத் தலைவன் கவி!
Supprimerவணக்கம்!
பட்டியிலும் தொட்டியிலும் பா..மணக்கும்! மூளையெனும்
பெட்டியிலும் நின்று சுவைபெருக்கும்! - திட்டமிட்டு
எண்ணிப் படைத்தவையோ? எங்கிருந்தோ வந்தவையோ?
கண்ணன் அறிவான் கணக்கு!