samedi 5 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 5




கலிவிருத்தம் () கனிவிருத்தம்

21.
உன்குரலைக் கேட்டிடவே என்னுள்ளம் ஏங்குதடி!
பொன்னுடலைப் பெற்றவளே! பொழுதெல்லாம் வாட்டாதே!
இன்கடலைக் கடந்திடுவோம்! இளமையினை எழுதிடுவோம்!
என்மடலைக் கண்டவுடன் என்னவளே வந்துவிடு!

22.
எனக்கென்ன என்றே..நீ இருப்பதுவும் சரியோ..சொல்?
கணக்கென்ன நானறியேன்? கண்ணே..நீ வாட்டாதே!
தனக்கென்ன நிலையென்று தடுமாறிக் கிடக்கின்றேன்!
உனக்கென்ன குறைந்திடுமோ? ஓடோடி வந்துவிடு!

23.
குடிக்கின்ற நீரும்..நீ! குளிர்கின்ற காற்றும்..நீ!
வடிக்கின்ற கவியும்..நீ! வளர்கின்ற கனவும்..நீ!
படிக்கின்ற ஏட்டில்..நீ! படர்கின்ற ஆசை..நீ!
துடிக்கின்ற துடிப்பும்..நீ! தூயவளே வந்துவிடு!

24.
கட்டழகே! கனிக்குலையே! கற்கண்டே! கவிச்சரமே!
பட்டழகே! பசும்பாலே! பலாச்சுளையே! பன்மலரே!
சிட்டழகே! சிரிப்பழகே! சிங்காரச் சிலையழகே!
மொட்டழகே! தொட்டழகு பெற்றிடவே வந்துவிடு!

25.
எப்படித்தான் படைத்தானோ? ஈடில்லாப் பேரழகே!
செப்படித்தான்! சீரடித்தான்! சின்னவளே உன்பாதம்!
அப்படித்தான் நிற்கின்றாய்! அடியவனைக் கொல்வதுமேன்?
இப்படித்தான் வாட்டுவதோ? இளையவளே வந்துவிடு!

தொடரும்

11 commentaires:

  1. இவ்வளவு சொன்ன பின்பும் ஓடோடி வராமல் இருக்க மாட்டார்கள் ஐயா...

    ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓடோடி வந்தால் உயா்புலவன் ஆசையெல்லாம்
      ஈடேறி மின்னும் இசைத்து!

      Supprimer
  2. சிங்காரத் தமிழ் அழகை கண்டு
    சிந்தித்து சிலிர்க்கின்றேன்
    வாழ்க வளமுடன்....!.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிங்காரச் செந்தமிழைச் சிந்தை தாித்திட்டால்
      மங்காத பாக்கள் வரும்!

      Supprimer
  3. குறைந்தா போய் விடுவாள்..ஓடி வருவாள்..
    அருமை ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓடி வருவாள்! உயா்புலவன் கற்பனையில்
      பாடி வருவாள் பறந்து!

      Supprimer
  4. அடடடடடடடா......
    ரொம்பத்தான் ஏங்குறீங்க...?
    ஆமா... யார் அவள்? என்னிடம் மட்டும் சொல்லுங்கள். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் கவிஞர்.
    த.ம. 5

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொல்லாத பெண்ணவள்! பொங்குமது கண்ணவள்!
      சொல்லாதே யாாிடமும் சூழ்ந்து!

      Supprimer
  5. என்ன சொல்லி பாட்டெழுத அத்தனையும் இங்கிருக்க... அகம் குளிரும் வரிகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அகங்குளிரும் சொற்களை அள்ளி அளிக்கும்
      முகமொளிரும் மூக்குத்தி முத்து!

      Supprimer

  6. என்றன் மனத்தை இழுத்துப் பறிக்கின்ற
    இன்தேன் கவிகள் இவையனைத்தும்! - உன்றன்
    கனிவிருத்தம் என்னும் கலிவிருத்தம் உண்டேன்
    இனிவருத்தம் இல்லை எனக்கு

    RépondreSupprimer