mardi 22 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 18



கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 18

96.
உருண்டோடும் பந்தானேன்! உருகிவிழும் நிலையானேன்!
இருண்டோடும் மேகமென என்னிதயம் அலையுதடி!
திரண்டாடும் எண்ணங்கள் தின்னுதடி என்னுயிரை!
முரண்டாடும் இளங்கொடியே! அரணாகிக் காப்பாயே!

97.
காலையிலே எழுந்தவுடன் கண்முன்னே கமழ்கின்றாய்!
சோலையிலே பூத்தாடும் சுடர்மலரில் ஒளிர்கின்றாய்!
ஆலையிலே சோர்வோட்டும் அரும்நினைவாய் மலர்கின்றாய்!
மாலையிலே மென்காற்றின் மணமாகத் தவழ்கின்றாய்!

98.
பேசிடவே உயிர்துடிக்கும்! பெண்ணே!உன் எழில்பாடி
வீசிடவே தமிழ்துடிக்கும்! வீண்சாதி மதவெறியால்
மாசிடவே மண்துடிக்கும்! மாறாத காதலுக்குச்
தேசிடவே இறைதுடிக்கும்! தெளிவுறுக தேன்மொழியே!

99.
அன்பே..வா! அமுதே..வா! அணியே..வா! ஆருயிரின்
இன்பே..வா! எழிலே..வா! இசையே..வா! இன்கனிகள்
வென்றே..வா! விருந்தே..வா! வியன்தமிழின் வீடே..வா!
நன்றே..வா! நலமே..வா! நாளும்..வா! நான்எழுத!

100.
மான்விழியே! மலர்வனமே! மதுக்குடமே! மகிழ்வூற்றே!
தேன்நதியே! தீங்கனியே! தெள்ளமுதே! தென்மொழியே!
வான்மதியே உனையெண்ணி வடித்திட்ட கவிநூறை
நான்தனியே தினமோதித் தாகத்தைத் தணிக்கின்றேன்!

22.04.2014
 

6 commentaires:


  1. நுாறு விருத்தங்கள் நுட்பமுடன் பாடினை!
    ஊறும் தமிழமுதை ஊட்டினை! - கூறும்
    கருத்தில் கலைகளைக் காட்டினை! நற்றேன்
    பெருக்கில் கிடந்தோம் பிரண்டு!

    RépondreSupprimer
  2. விருத்தங்கள் நூறும்
    தேன் கனிச் சாறு
    நன்றி ஐயா

    RépondreSupprimer
  3. எழில் பாடும் வரிகள் மனதை மிகவும் கவர்ந்தன ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. உங்களுக்கும் உதவக்கூடும் ஐயா :

    சில "பாடல்" வரியுள்ள பாடல் வரிகளுடன், நமது வலைத்தளத்தில் ஆடியோ (mp3) ஃபைலை இணைப்பதற்கான விளக்கமும்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    RépondreSupprimer
  5. அருமை! பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
  6. தேனூறும் தெள்ளுதமிழ்
    பாநூறு வடித்த கவியே
    பாரதி போல் பேரோடும்
    புகழோடும் வாழ்க நிலையாய்...!
    அருமை அருமை...! தங்களுக்கு கருத்தும் வாழ்த்தும் சொல்வதற்கு எனக்கு அறிவும் அனுபவமும் இல்லை கவியே...! இருந்தும் ஏற்றுக் கொள்ளுங்கள்! நன்றி வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer