mardi 22 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 17




கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 17

91.
பூமகளே எனைப்பாராய்! பூந்தமிழைப் பொழிக்கின்ற
நாமகளே எனைப்பாராய்! நற்றவத்தின் தாய்பெற்ற
மாமகளே எனைப்பாராய்! பண்ணொலிரப் பாடிவரும்
பாமகளே எனைப்பாராய்! பைத்தியமாய் அலைகின்றேன்!

92.
செல்பேசி சிணுங்காதோ? செய்திகளைச் செப்பாதோ?
நல்பேசி என்றதனை நான்வணங்கக் கூடாதோ?
வில்வீசிப் பிடித்தவளே! வீரனெனை மடித்தவளே!
சொல்வீசி வந்துவிடு! சொர்க்கத்தைத் தந்துவிடும்!

93.
காதாடும் அணிகண்டேன்! கண்ணாடும் மீன்கண்டேன்!
மாதாடும் வண்ணத்தில் மாதவியை நான்கண்டேன்!
போதாடும் பூங்கொடிபோல் பொங்கிவரும் மணங்கண்டேன்!
தாதாடும் ..கண்டேன்! தவிக்கின்றேன் தனிமையிலே!

94.
குயிலிரண்டும் கூவுதடி! கிளியிரண்டும் கூடுதடி!
முயலிரண்டும் ஓடுதடி! கயலிரண்டும் ஆடுதடி!
மயிலிரண்டும் மயங்குதடி! மணக்கின்ற மாதே!நம்
உயிரிரண்டும் தனித்தனியே உறவெண்ணி வாடுவதோ?

95.
அருள்கின்ற உள்ளத்தாள்! அமுதூறும் அங்கத்தாள்!
இருள்கின்ற காலத்தில் எனைவாட்டும் செங்காந்தாள்!
வருகின்ற பொழுதினிலே தருகின்ற வாசத்தில்
கரு..ஒன்று உயிர்பெற்றுச் கவிச்சோலை மலர்ந்திடுமே!

தொடரும்

5 commentaires:

  1. ஏங்க வைக்கும் வரிகளை ரசித்தேன் ஐயா...

    RépondreSupprimer
  2. வணக்கம் !
    காதல் காவியமாய் விரிகின்ற அழகிய கவிதை வரிகள் கண்டு மகிழ்ந்தேன்
    வாழ்த்துக்கள் ஐயா .த.ம .5

    RépondreSupprimer
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer

  4. பெண்கொண்ட பேரழகைப் பெற்ற பெருமைகளைப்
    பண்கொண்ட நெஞ்சே படைத்துள்ளாய்! - விண்கொண்ட
    வானவில் வந்தொளிரும் வண்ணத் தமிழ்படித்து
    ஆனந்த கூத்திட்டேன் ஆழ்ந்து!

    RépondreSupprimer