vendredi 18 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 14



கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 14

71.
பல்லவன்தன் கலைக்கூடம் பைந்தமிழின் புகழ்சொல்லும்!
வல்லவன்என் கவிக்கூடம் மாதேவுன் எழில்சொல்லும்!
வில்லவன்தன் அம்புகளை வேல்விழிகள் தாம்வெல்லும்!
நல்லவன்என் நாமலரில் நாள்முழுதும் தமிழ்துள்ளும்!

72.
மாமல்லக் கடற்கரையில் வளைந்தாடும் சிலையழகே!
பாமல்லன் நான்கொண்ட பசியடக்கும் கலையமுதே!
மாமல்லன் என்னுயிரைச் சிறையிட்ட வான்மதியே!
மாமணியே! மரகதமே! மாங்கனியே! மதுக்குடமே!

73.
கலைவண்ணம் கமழ்ந்திடவே கண்ணே..நீ பிறந்தாயோ?
சிலைவண்ணம் ஒளிர்ந்திடவே சிட்டே..நீ சிறந்தாயோ?
மலைவண்ணம் வடித்திடவே மாதே..நீ வளர்ந்தாயோ?
கொலைவண்ணம் புரிந்திடவே கூர்விழிகள் கொண்டாயோ?

74.
கலைவடிக்கும் உன்னழகைச் சிலைவடிக்க நான்எழுந்தேன்
இலைவடிக்கச் சத்தென்றே இயம்புதடி சிற்றுளியும்!
உலைகொதிக்கும்! ஏனோஎன் உளங்கொழிக்கும் உணர்வேய்தி!
வலைவிரிக்கும் கயற்கண்ணி! வளர்தமிழாய் வா..மின்னி!

75.
கண்ணனுடன் திருராதை கட்டுண்ட நிலையாக
வண்ணமுடன் என்னோடு வந்தாடிக் களிப்பவளே!
திண்ணமுடன் உரைக்கின்றேன்! திருமகளே நீ..வேண்டும்!
உண்ணவுறும் பொருள்தீரும்! உன்னாசை தீர்ந்திடுமோ?

தொடரும்

9 commentaires:


  1. கலைககூடம்! மின்னும் கவிக்கூடம்! உன்றன்
    வலைக்கூடம்! வண்டமிழ்க் கூடம்! - அலையோடம்
    போன்றாடும் என்நெஞ்சம்! பொன்னாய்ப் புகழ்வெண்பா
    ஈன்றாடும் என்நெஞ்சம் ஈங்கு!

    RépondreSupprimer
  2. வணக்கம் !
    தேன் சிந்து வார்த்தை ஜாலம் அருமை !
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  3. நல்லவன்என் நாமலரில் நாள்முழுதும் தமிழ்துள்ளும்!
    உண்மைதான் ஐயா உங்கள் நாவில் துள்ளும் தமிழ் எங்கள் நெஞ்சை அள்ளுகிறது

    RépondreSupprimer
  4. பாவேந்தன் பாட்டில் பழம்மணக்கும் பால்மணக்கும்
    நாவேந்த நற்றமிழும் தேன்மணக்கும் - பூவேந்தி
    நிற்கின்ற பூங்கா வனம்மணக்கும் ! நெஞ்சத்தில்
    ஏற்றால் மணக்கும் எழில் !


    அருமை அருமை கவிஞரே படித்தேன் ரசித்தேன்
    பலதும் கற்றேன்
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
    5

    RépondreSupprimer
  5. ரசிக்க வைக்கும் அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  6. தெவிட்டாத தேன்தமிழை
    தெளித்திடுவீர் எந்நாளும்
    மறுக்காமல் பூசி மகிழ்ந்திடுவேன்
    மணக்கும் உம் மதியழகை மகிழ!
    அருமை வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
  7. பாமல்லன் நான்கொண்ட பசியடக்கும் கலையமுதே!
    உண்மைதான்! தாங்கள் பாமல்லன் தான்! ஐயமில்லை!

    RépondreSupprimer