lundi 14 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 10




கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 10

51.
வானத்துத் தேவதையே! வண்ணமயில் ஆடுகின்ற
கானத்துப் பூங்காற்றே! கண்ணிரண்டும் ஏங்குதடி!
ஞானத்துப் பெருவாழ்வும் நல்கிடுமோ உன்னினிப்பை!
தேனொத்துக் கொள்கிறது செவ்விதழே சுவையென்று!

52.
இதயவான் வெண்ணிலவே! இளங்கொடியே! உன்பார்வை
புதியவான் பயணத்தைப் புத்திக்குள் புகுத்துதடி!
உதயவான் போல்மயக்கும் ஊர்வசியே! உன்னழகு
மதியவான் கோடையினை மாய்தோடச் செய்யுதடி!

53.
மண்மீதில் நிலவொன்று வந்தகதை அறிந்திடவும்
பெண்மீதில் பேரின்பம் பெருகுவதை உணர்ந்திடவும்
விண்மீனின் கூட்டங்கள் வெம்பியழும்! உன்னுடைய
கண்மீனின் எழிற்கண்டு கால்முளைத்துச் சிலஓடும்!

54.
கார்வளமாய்த் தவழ்கின்ற கருங்கூந்தல் மணம்வீசும்!
ஏர்வளமாய்த் தழைக்கின்ற இனியதமிழ்க் கவிபேசும்!
தேர்வலமாய்ச் செல்பவளே! சிந்தனையை வெல்பவளே!
ஊர்வலமாய் எனக்குள்ளே உன்னினைவே ஊருதடி!

55.
மாதுன்றன் மேல்பட்ட மழைநீரும் மயங்குதடி!
சாதுன்றன் கால்பட்ட தரைகூட இனிக்குதடி!
ஏதுன்றன் கைப்பட்ட இடமெல்லாம் மணக்குதடி!
போதுன்றன் ஆட்டங்கள்! மோதியெனைப் புரட்டுதடி!

தொடரும்

8 commentaires:

  1. அருமை ஐயா... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. ///ஊர்வலமாய் எனக்குள்ளே உன்னினைவே ஊருதடி!//
    அருமை ஐயா
    நன்றி

    RépondreSupprimer
  3. விண்மீனின் கூட்டங்கள் வெம்பியழும்! உன்னுடைய
    கண்மீனின் எழிற்கண்டு கால்முளைத்துச் சிலஓடும்!

    தங்கள் கவியழகை கண்டு
    நானும் தான் வெம்புகிறேன்
    காலிருந்தும் ஓட இயலாது
    கவி வலையில் சிக்கிவிட்டேன்!
    அருமை அருமை ! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
  4. வணக்கம் !
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .தேனூறும் கவிதைப் பூக்களை
    எந்நாளும் தந்து மகிழ வைக்க வாழ்த்துகின்றேன் .

    RépondreSupprimer
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer

  7. வான்வெளியில் நீந்துகின்ற வண்ணக் கவிபடித்தேன்!
    தேன்மழையில் நீராடி நான்களித்தேன்! - ஊன்நெகிழ்ந்து
    என்றன் உயிா்நெகிழ்ந்து இன்புற்றேன்! எந்நாளும்
    உன்றன் தமிழ்எனக்கு ஓது!

    RépondreSupprimer