dimanche 7 octobre 2012

வல்லின வம்புகள் [ பகுதி - 1 ]




வல்லின வம்புகள் [பகுதி - 1]

வல்லின வம்புகள் என்னும் வளா்தமிழின்
சொல்லினக் கூறுகளைச் சூட்டிடவே - நல்லினம்
காட்டி வழிநடத்து! கன்னல் தமிழே!சீா்
கூட்டி வழிநடத்து கூா்ந்து!

க, ச, ட, த, ப, ற வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள இடையினம்.

வல்லின எழுத்துக்கள் ஆறும் நிலைமொழியைத் தொடா்ந்து வரும்மொழியின் முதல் எழுத்தாக வருமிடங்களில் மிகும் மிகா இடங்களை வல்லின வம்புகள் இன்னும் இக்கட்டுரைத் தொடரில் காண்போம்! (நிலைமொழி என்பது முதலில் நிற்கும் சொல், வரும்மொழி என்பது முதலில் நிற்கும் சொல்லைத் தொடா்ந்து இரண்டாவதாக வரும் சொல்)

ஞாயிற்றுக் கிழமைதோறும் இக்கட்டுரையின் வம்புகள் தொடரும்.

இத்தொடா் வளரும் கவிஞா்களுக்கும், எழுத்தாளா்களுக்கும் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

செய்யச் சொன்னான் என்பதைச் செய்ய சொன்னான் என்று பிழையாக எழுதிவிட்டு, ச் மிகவில்லை என்றால் உங்கள் குடியா முழுகிவிடும் என்று கேட்பவா்களும் உள்ளார்!

வந்த பையன் என்பதை வந்தப் பையன் என்று பிழையாக எழுதிவிட்டு, ப் மிகுந்தால் உங்கள் சொத்தா குறைந்துவிடும் என்று சண்டையிடுபவரும் உள்ளார்!

ஏன் இந்த வல்லின வம்புகள் என்று சிலா் இப்படிபட்ட இடங்களில் புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி வைத்துவிடுவார், இன்னும் சிலா் வல்லினச் சொற்களையே மாற்றிவிடுவார்.

ஏன் மிக வேண்டும்? ஏன் மிகக்கூடாது? ஒரு தொடரின் பொருளை மயக்கமின்றித் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு  இப்பகுதியை ஐயமின்றி அறிந்திருக்க வேண்டும்!

கவிஞா்கள் இப்பகுதியை முழுமையாக அறிந்திருந்தால், சந்தக்கவி, வண்ணக்கவி, சிந்துக்கவி, சித்திர கவி ஆகிய கவிதைகளைப் பிழையின்றிப் பாட முடியும்!

கலைக் கழகம் என்றால் கலையை வளா்க்கும் கழகம் என்று பொருள்.

கலை கழகம் என்றால் கலைந்த கழகம் என்று பொருள்.

தந்தப்பலகை என்றால் யானையின் தந்தத்தால் ஆன பலகை என்று பொருள்.

தந்த பலகை என்றால் அவன் நம் கையில் தந்த பலகை என்று பொருள்.

வேலைக்கொடு என்றால் கூரிய கருவியாகிய வேலைக்கொடு என்று பொருள்.

வேலை கொடு என்றால் செய்வதற்கு வேலை கொடு என்று பொருள்.

செடிக்கொடி என்றால்  செடியில் ஏறியுள்ள கொடி என்று பொருள்.

செடி கொடி என்றால்  செடியும் கொடியும் என்று பொருள்.

எளிதாகப் புரிந்துகொள்ளும் இடங்களை முதலிலும், விளக்கமாக எழுதவேண்டிய இடங்களைத் தொடா்ந்தம் எழுதுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

1. ல், ள், ன், ண், ஆகிய நான்கு எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

கால்ச்சிலம்பு, வாள்ப்பட்டறை, மான்க்கொம்பு, நாண்ப்பாய்ந்தது,
எனப் பிழையாக எழுதுவன.

கால் சிலம்பு, வாள் பட்டறை, மான் கொம்பு, நாண் பாய்ந்தது, என இயல்பாக எழுத வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------- 

2. இரண்டு வல்லின ஒற்றுகள் ஒன்றாகச் சோ்ந்து ஒருபொழுதும் வாரா.

அதற்க்கு வேண்டும், ற்ப்பனை என்பன பிழையாக வருவன.

அதற்கு வேண்டு, கற்பனை என்றே எழுத வேண்டும்.

(தொடரும்)

11 commentaires:

  1. வணக்கம், அருமையான விளக்கம் தந்த அய்யாவிற்கு மிகுந்த நன்றிகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      நவின்றேன் நன்றி!

      வல்லின வம்பை வடிவாய்ப் படித்தறிந்தால்
      சொல்லினம் மின்னும் சுடா்ந்து!

      உங்கள் முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல், ஆகிய செய்திகளை
      என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். kambane2007@yahoo.fr

      எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணமுள்ள கவிதை பாடும் இலக்கண நுாலைத் தங்களுக்கு அன்பின் நினைவாய் அனுப்பிவைக்கிறேன்.

      Supprimer
  2. நல்ல விளக்கம் ஐயா... தொடர்கிறேன்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      தனபாலன்!இன்பத் தமிழ்ப்பாலன்! பண்பின்
      இனபாலன் என்றே இயம்பு!

      Supprimer
  3. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

    உங்களின் வலைப்பூவை அம்பாளடியாள்
    அவர்கள் அழகுத் தமிழில்
    அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள்.

    நீங்களும் அங்கே சென்று பார்க்க அன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      நற்செய்தி சொன்ன நறும்தோழி நல்லருணா!
      பொற்கவி என்பேன் புகழ்ந்து!

      இனியதமிழ் அம்மாளடியாள்

      முன்னே என்றன் முகமறியார்!
      முத்தாய் மின்னும் அகமறியார்!
      பின்னே நிற்கும் என்படையின்
      பெருமை என்ன அவரறியார்!
      என்னே அவரின் தமிழுள்ளம்!
      இனிய அம்மாள் அடியார்க்கு!
      பொன்னே! மணியே! பூந்தமிழே!
      புகழைத் தேடி விளைத்தனையே!

      Supprimer
  4. மகிழ்சிக் கடலில் தத்தளிக்கும்
    மனதில் எங்கே வார்த்தை புகும்?...!
    அடியவளும் நின் பாதம் தொட்டு
    வணக்குகின்றேன் ஐயா !............

    தெள்ளு தமில்ழ்ச் சொல்லழகு!....
    தேர்ந்தெடுத்த நடையழகு!.....
    இன்னமுதப் பொருளழகு !....
    ஏற்றம் மிகு கவி அழகு !...
    விண்ணுயரப் பறந்திடவே
    விரும்புகின்றாள் இந்த அடியவளும்
    கண்ணெனவே நான் மதிக்கும் கவி படைக்கும்
    தந்தை உன்னை என்ன சொல்லிப் பாராட்ட !...
    எதைக் கொடுத்து நான் மகிழ ?.......!
    அன்புடனே குசேலரும்தான் அகம் மகிழ்ந்து
    கொடுத்த அவலினைப்போல் இதையே
    ஆவலுடன் பகிர்ந்தளித்தேன் நானும்
    நன்றி நன்றி நன்றி ஐயா !!!!!..................

    RépondreSupprimer
  5. வளரும் சந்ததிக்கு வளமான தங்கள் பணி தொடருங்கள் ஐயா தொடர்கிறோம்.

    RépondreSupprimer
  6. வம்பின் வால் பிடித்தேன் இன்று.
    தும்பல்ல தூணென்றுணர்ந்தேன்.
    நம்பிப் படிக்கிறேன். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  7. வல்லின வம்பறிந்தேன்
    வழுவற்ற தமிழ் எழுத
    கல்லாத மாந்தர்க்கும்
    கனிபோல் தமிழ் தந்தீர்
    அமிழ்துக்கும் அமிழ்தான
    அருங்கவிஞர் உனைப்போற்றி
    என்னசொல்லி வாழ்த்திவிட
    எனதன்பில் தேடுகின்றேன் ..!

    வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களே

    RépondreSupprimer

  8. வல்லின வம்புகளில் மாட்டி வதையாமல்
    நல்லின மாக நடைபயில! - சொல்லினம்
    ஆய்ந்து மதியொளிர! அந்தமிழின் தொன்மையைப்
    பாய்ந்து படைத்தாய் பதிவு!

    RépondreSupprimer