mercredi 29 août 2018

அன்னைத் தமிழே!



அன்னைத்
தமிழே!
  
1.
அன்னிய சொற்கள் அமுதன்று! பண்பூறும்
அன்னையின் சொற்கள் அமுது!
  
2.
பன்மொழி காத்தல் தகையன்று! பாங்குடன்
தன்மொழி காத்தல் தகை!
  
3.
புயல்மொழி போற்றல் அறிவன்று! யாப்பில்
அயல்மொழி நீக்கல் அறிவு!
  
4.
கற்ற அயல்மொழி காக்கும் உறவன்று!
உற்ற தமிழே உறவு!
  
5.
விண்வேண்டிக் காத்தல் கடனன்று! தாய்மொழியைக்
கண்போன்று காத்தல் கடன்!
  
6.
பொன்னும் பொருளும் அழகன்று! சேய்..காக்கும்
அன்னை மொழியே அழகு!
  
7.
வன்மை படையும் அரணன்று! நம்மொழி
அன்னையே வாழ்வின் அரண்!
  
8.
வண்ண வளமும் வளமன்று! குன்றாத
வண்டமிழே வாழ்வின் வளம்!
  
9.
ஓங்கி இருத்தல் உயர்வன்று! தண்டமிழைத்
தாங்கித் தழைத்தல் உயர்வு!
  
10.
பொற்புடன் போற்றல் பயனன்று! தாய்மொழியைப்
பற்றுடன் போற்றல் பயன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire