அக்கர வருத்தனம்
அக்கரம் - எழுத்து, வருத்தனை - பெருக்குதல். எழுத்துகளைப் பெருக்கி மொழியாக்கிப் பொருள் கொள்ளலால் 'அக்கர வருத்தனம்' எனப்பட்டது.
அக்கர வர்த்தனம், எழுத்துப் பெருக்கம், எழுத்து வருத்தனம் என்பன ஒருபொருள் குறிப்பன.
எழுத்து வருத்தனம் என்பது, ஓரெழுத்தான் ஒரு மொழியாய்ப் பொருள் பயந்து, பின் ஓரெழுத்தைச் சேர்க்கப் பிறிதொரு மொழியாய்ப் பொருள் பயந்து [ஈரெழுத்து ஒருமொழி], அவ்வாறே முறையாக ஒவ்வொரு எழுத்தாகச் சேர்க்க ஒவ்வொரு மொழியாய்ப் பொருள் பயப்பப் பாடுவது.
ஓதும் பெயர்குன்றி ஓங்கும் அயற்போதை!
ஓதும் கலிப்பா உறுமீறு! - ஊதும்
இதழ்ச்சந்து! நன்விளக்[கு] ஏற்றும் ஒளிநாள்!
மது,போக்கு, தொள்ளை மதி!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
ஓதும் பெயர் - ராம்,
ராம் என்ற சொல் குன்றின் 'ரம்' என்று வரும்
ரம் - மது
ஓதும் கலிப்பாவில் ஈற்றில் வரும் உறுப்பு - வாரம்
வாரம் - போக்கு, சுரிதகம், அடக்கியல், வைப்பு என்பன ஒரு பொருள் குறிப்பன.
ஊதும் இதழ்ச்சந்து, - தொளை
தொளை - தொள்ளை என்றும் பெயர்பெறும்.
விளக்கு ஏற்றும் நாள் - வெள்ளி
வெள்ளி - மதி என்றும் பெயர் பெறும்.
ரம் என்ற சொல்லுடன் 'வா' எழுத்தைச் சேர்க்க 'வாரம்' என்ற சொல் பெறப்படும். வாரம் என்ற சொல்லுடன் 'து' எழுத்தைச் சேர்க்கத் 'துவாரம்' என்ற சொல் பெறப்படும். துவாரம் என்ற சொல்லுடன் 'ஊ' எழுத்தைச் சேர்க்க 'ஊதுவாரம்' என்ற சொல் பெறப்படும். [ ஊதுவாரம் - வெள்ளி என்று பொருள் பெறும்]
வெண்பாவில் ரம் என்ற சொல் 'மது' என்றும், வாரம் என்ற சொல் 'போக்கு' என்றும், துவாரம் என்ற சொல் 'தொள்ளை' என்றும், ஊதுவாரம் என்ற சொல் 'மதி' என்றும், மாற்றுப் பெயர்களைக் கொண்டிருக்கும்.
இப்பாடலின் வழியாக 'ஊதுவாரம்' என்ற சொல் பெறப்பட்டது. [ஊ+து+வா+ரம்] [ரம், வாரம், துவாரம், ஊதுவாரம்]
[ஓரெழுத்து ஒரு மொழியாய் வரவேண்டும் என்ற விதியிருக்க 'ரம்' என்று ஈரெழுத்தைப் பெற்றது, மெய்யெழுத்துக் கணக்குப் பெறாத நிலையில் ஓரெழுத்து ஒருமொழியாயிற்று என அமைவு கொள்க]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.08.2018
அருமை
RépondreSupprimer