vendredi 17 août 2018

தமிழ்த்தென்றல்


பிரான்சு கம்பன் விழாவில் வெளிவரும்
அன்பைப் பொழியும் தமிழ்த்தென்றல்
  
என்னுரை
  
மங்கள ஓசையுடன் வண்ணப் புவிப்பந்து
பொங்கருள் போந்து சுழன்றிடுமே! - செங்கதிரும்
நற்காலை வாழ்த்தெழுதும்! நாவாரப் புள்பாடும்!
பொற்சோலை பூக்கும் பொலிந்து!
  
காலைப்பொழுதை வரவேற்றுக் கதிரவன் கைகள் பவளப்பாய் விரிக்கின்றன. கடலலைகள் இசையைக் மீட்டுகின்றன. பறவைகள் பள்ளியெழுச்சி பாடுகின்றன. சோலைகள் மலர்களைப் பரப்புகின்றன. வண்டுகள் பண்களைக் கூட்டுகின்றன. தென்றலின் கவிகேட்டுச் செடி கொடிகள் தலைகளை ஆட்டுகின்றன. இயற்கை மங்கள வாழ்த்தினை ஒவ்வொரு விடியலிலும் வழங்கி மணக்கிறது. புலவனைத் தமிழ்மழையில் நனைக்கிறது.
  
வாழ்த்தொலி நம்மை வாழ்விக்கும்! வல்லமை கூட்டும்! நல்லவை காட்டும்! கவிஞனின் துாய தமிழொலி அமுதினை ஊட்டும்! அணிகளைச் சூட்டும்! 'வாழ்க வளத்துடன்' என்ற பொன்மொழியில் பூத்த உள்ளம், இனிக்கும் வெல்லமென வாழ்க்கையைத் தீட்டும்!
  
கற்றோரின் வாழ்த்தும், பெற்றோரின் வாழ்த்தும், அன்புளம் உற்றோரின் வாழ்த்தும், அருளுளம் கொண்டோரின் வாழ்த்தும், அன்னைத் தமிழ்மொழியை உண்டோரின் வாழ்த்தும் என்றென்றும் நமக்குத் துணையாகும்! காக்கும் அணையாகும்!
  
பிரான்சு நாட்டில், நண்பர்களின் திருமண நிகழ்வுகளிலும், தமிழ் விழாக்களிலும் என்னுடைய வாழ்த்து இடம்பெறுவது நிலைபெற்ற செயலாய்த் தொடர்கிறது. வாழ்த்திய வண்ணம் வாழ்க்கை வளம்பெறுவதாய் அவர்கள் நம்பினார்கள். பிள்ளைகளின் திருமண நடைபெறவேண்டுமென வாழ்த்து கவிதை பெற்றுச் சென்றனர். வாழ்த்திய வண்ணம் திருமணமும் நடைபெற்றது. என்னுடைய வாழ்த்தின் வன்மையெனப் போற்றி மகிழ்ந்தனர். வாழ்த்தின் வன்மை என்று சொல்வதைவிட வண்டமிழ்ச் சொல்லின் தன்மை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.
  
திருமணம், புதுமனை புகுவிழா, பிறந்தநாள், சான்றோர்தம் பொன்விழா, மணிவிழா, முத்துவிழா... ஆகிய நிகழ்வுகளுக்கு எழுதிய வாழ்த்து கவிதைகள் இந்நுாலில் நிறைந்துள்ளன. நுால்களுக்குப் பாடிய சாற்று கவிதைகளும் இத்தொகுப்பில் மணம் பரப்புகின்றன.
  
இராமாயண முற்றோதல், திருக்குறள் முற்றோதல், திருவருட்பா முற்றோதல் எனத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பிரான்சு கம்பன் கழகம் முற்றோதல் நிகழ்வை நடத்தியது. அந்நிகழ்வில் பாடிய வாழ்த்துகளும் காலத்தின் பதிவாக இச்சுவடியில் இடங்கொண்டன.
வாழ்த்து கவி, சாற்று கவி ஆகிய சொற்களை, வன்றொடர்க் குற்றியலுகரமென வல்லினம் மிகுத்து எழுதுவர். இச்சொற்கள் வினைத்தெகையாகும். வன்றொடர்க் குற்றியலுகரமாயினும் வினைத்தொகையாயின் வல்லினம் இயல்பாகும்.
  
இந்நுாலுக்குச் சாற்று கவி வழங்கிய எந்தை, கலைமாமணி, சந்தக்கவிஞர் தே. சனார்த்தனன் என்ற கிருட்டினசாமி அவர்களுக்கு அன்புமலர்களைப் பொழிகின்றேன்.
  
முகப்பட்டை வடிவமைத்த தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு மதுமலர்களைத் துாவுகின்றேன்.
  
கோத்த மணிச்சரமாய் வாழ்த்து கவிதைகளைப் பதிப்பித்த மணிமேகலை பிரசுரத்தின் இயக்குநர், முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு நன்றிமலர்களைச் சொரிகின்றேன். அங்குப் பணியாற்றும் அன்பர்களுக்கு அமுத மலர்களை அள்ளி அளிக்கின்றேன்.
  
வாழ்த்துமலர்களைச் சூடி மகிழ்வீர்! வண்டமிழைப் பாடி மகிழ்வீர்! வண்ண மயில்போல் ஆடி மகிழ்வீர்! தமிழ் காக்கக் கூடி மகிழ்வீர்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire