வெண்பா மேடை - 112
வல்லின வெண்பா!
கற்புறு காப்புறு! கற்றிடு காத்திடு!
பற்றறு! பொற்புறப் பாடிடு! - பெற்றிடு
சிற்சபை சக்தி! சிறப்புறச் சாற்றிடு
சொற்சபை சக்தி தொகுத்து!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இவ்வெண்பா வல்லின எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும்.
வெண்பா மேடை - 113
மெல்லின வெண்பா!
மன்னன் மணிநாமம் மாமணம் மன்னுமே!
நன்னன் நனிமேன்மை நண்ணுமே! - மின்னுமே
நுண்மை முனிஞானம்! மண்மானம்! முன்னுமே
நன்மை மனமே! நம!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இவ்வெண்பா மெல்லின எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும்.
வெண்பா மேடை - 114
இடையின வெண்பா!
வல்லவா! யாழெழில் வாயவா! வேல்விழியை
வெல்ல..வா! வல்லியை யள்ள..வா! - வில்லவா!
வீரா..வா! வாழ்வே..வா! வேலா..வா! வீரிய
வைரா..வா! வேள்வியே வா!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இவ்வெண்பா இடையின எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும்.
விரும்பிய பொருளில் மேற்கண்ட வல்லின வெண்பா ஒன்றும், மெல்லின வெண்பா ஒன்றும் இடையின வெண்பா ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாக்களைத தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire