mercredi 15 août 2018

வெண்பா மேடை - 103


வெண்பா மேடை - 103
  
தொன்மை ஒற்று வெண்பா!
  
ஒரு செய்யுளில் எல்லா எழுத்துகளும் புள்ளியுடையனவாக வருவது 'பிந்துமதி' என்று முன்னே வழங்கப்பட்டது.
  
முன்னே எகர ஒகரங்கள் புள்ளி வைத்து எழுதப்பட்டன. ['எ்', 'ஒ்'] , நன்னுால் இதனை உரைக்கிறது.
  
தொல்லை வடிவின எல்லாம் எழுத்தும் ஆண்டு
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி [நன்னுால் - 43]
  
எல்லா எழுத்தும் தொன்மைக்கால முறைப்படி எழுதப்பட்டு வருகின்றன. எகரமும் ஒகரமும் மெய்யெழுத்தும் தலைபோல் புள்ளிவைத்து எழுதப்பெறும். [எ் - குறில்] [எ - நெடில்] [ஒ் - குறில்] [ஒ - நெடில்] இன்று எ, ஏ, ஒ, ஓ, என எழுதுகிறோம். இவ்வாறு மாற்றி எளிமைப்படுத்தியவர் வீரமாமுனியர். இம் மாற்றம் மிக இயல்பானதால் ஏற்கப்பட்டது.
  
எகர இனமும், ஒகர இனமும், மெய்யெழுத்துகளும், இம்மூன்று இனம் மட்டும் இடம் பெறும் பாடலை ஒற்றுப்பாட்டென முன்னோர் வழங்கினர். இவ்வகைப் பாடல் சித்திரக் கவிதையில் மிகத் தொன்மையாக இருக்கலாம். இன்று எகரம் ஒகரம் தலைமேல் புள்ளி பெறுவதில்லை. இதன் தொன்மையைக் கருதி இவ்வகையை எழுதி மகிழ்வோம்.
  
மெய்கொண்டென் தெண்கொண்டென் வெல்கொண்டென் வெண்கொண்டென்
பொய்கொண்டென் பொன்கொண்டென் பெண்கொண்டென் - செய்கொண்டென்
மென்கொண்டென் சொல்கொண்டென் செம்கொண்டென் தொன்தென்எள்
என்கொண்டென் என்கொண்டென் எண்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
பாடல் விளக்கம்
    
உடல் பெற்று என்ன பயன்? தெளிவு பெற்று என்ன பயன்? வெற்றி பெற்று என்ன பயன்? துாய உள்ளம் பெற்று என்ன பயன்? பொய்யால் வாழ்ந்து என்ன பயன்? பொன் பெற்று என்ன பயன்? அழகிய பெண்ணைப் பெற்று என்ன பயன்? நிலத்தைப் பெற்று என்ன பயன்? மென்மையைப் பெற்று என்ன பயன்? உரையாற்றி என்ன பயன்? சிறப்பைப் பெற்று என்ன பயன்? தொன்மையான தென்மொழியாகியத் தமிழைப் பழிக்கின்றவர்கள் என்ன பெற்றும் என்ன பயன்?
  
மேற்கண்ட வெண்பாவில், முன்னை மரபில் தலையில் புள்ளி பெற்ற எகரமும் ஒகரமும், என்றும் தலையில் புள்ளி பெற்றுவரும் மெய்யும் வந்துள்ளன.
  
இவ்வாறு அமைந்த 'தொன்மை ஒற்று வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தொன்மை ஒற்று வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire