mercredi 22 janvier 2014

மாதவ மங்கையர் - பகுதி 6




கவியரங்கம்


மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

மாசிலா மாணிக்கம் மணிமேகலை!

கோவலன் விரும்பிய கொஞ்சும் புறாவாம்
பாவலம் மிக்க பாவை மாதவி!
இந்த இணையர் இனிதாய்ப் பெற்ற
செந்தா மரையாம் சீர்மணி மேகலை!
அன்பு மாதவி அழகை மறந்து
மன்னன் ஆணையால் மாய்ந்தான் கோவலன்!
மாதவி அதன்பின் மணிமே கலையொடு
தோதுறத் துறவற நெறியைத் தொடர்ந்தாள்!

தாயைப் போலவே தமிழ்க்கலை யாவிலும்
தோய பட்டவள் தூய்மணி மேகலை!
ஆடலைப் பாடலை அறவே விட்டாள்!
மாட மாளிகை மனத்தை வெறுத்தாள்!
இந்திர விழாவையும் ஏற்கா(து) அவள்தன்
சிந்தையில் துறவறம் சிறக்க நின்றாள்!

கலைசேர் சுதமதி காவலாய்ச் செல்ல
மலர்கள் பறிக்க மணிமே கலையாள்
பூந்தோட்டம் ஒன்றில் புகுந்த காலை
வேந்தன் மகனாய் விளங்கிய உதயன்
மேகலை அழகில் விருப்பம் உற்று
வேகமாய் அவளை விரட்ட லானான்!
பளிங்கறை உள்ளே பதுங்கினாள் மேகலை!
கண்ணகி போலக் கற்புக் கரசியாய்
அன்னையைப் போல அரண்நெறி செல்வியாய்
மண்ணில் வாழ்ந்த மாசறு மாணிக்கம்
கன்னல் மொழியாள் கவின்மிகு மேகலை!

மணிபல் லவத்திலும் மணிமே கலையாள்
அணிந்தது துறவற அறநெறி ஒன்றே!
அழகை ஆடலைப் பாடலை மறந்து
வழுவிலாத் துறவற வாழ்வைக் கண்டாள்!

அன்பின் வடிவம்! அறத்தின் கோயில்
துன்பம் துடைத்த சுடர்மணி மேகலை
அமுத சுரபியால் அன்னம் அளித்து
குமுகம் உற்ற கொடுமை தீர்த்தாள்!

பசிப்பிணி நீக்கிய பாவையை எண்ணிக்
கசிந்துளம் நெகிழப் பாடினேன் கவியே!

தொடரும்

6 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    கசிந்துள்ளம் பாடிய கவிப்பாக்கள் எங்கள் உள்ளங்களையும் கசியவைத்தது.... ஐயா..வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. ஆகா... சிறப்பான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. மணிமேகலை உற்ற சிறப்பு
    அழகுறத் தந்த பாக்களினால் அறிந்தேன்!

    மிக அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. சுடர் மணி மேகலை சுடர்ந்தாள்
    மேலும் உம் கவிதையால்

    அருமை அருமை ....!
    நன்றி தொடர வாழ்த்துக்கள்......!

    RépondreSupprimer
  5. அழகான வரிகள்
    தொடருங்கள் ஐயா!

    RépondreSupprimer
  6. மணிமே கலையின் மாண்பு கண்டேன்
    மனதில் உறைந்த மயக்கம் களைந்து !

    அழகு அருமை
    இனிய வாழ்த்து கவிஞரே
    வாழ்க வளமுடன்
    7

    RépondreSupprimer