கவியரங்கம்
மாதவ மங்கையர்
கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]
மாண்புடை மாதவி
நாடெலாம் போற்றும் நங்கை யாக
ஆடலில் பாடலில் அழகினில் சிறந்த
கணிகையர் குலத்தில் கண்ணெனத் தோன்றி
மணியாய் விளங்கிய மாதறு மாதவி!
அகவை ஐந்திலே ஆடத் தொடங்கி
அகவை,பன் னிரண்டில் அரங்கம் கண்டாள்!
நாடு நகரெலாம் நற்புகழ் பெற்றே
ஆடல் கலையின் அரசி யானாள்!
மன்னன் அவையில் மாதவி ஆடி
பன்மதிப் புள்ள பச்சை மாலையைப்
பரிசாய்ப் பெற்றாள் பாரோர் போற்றவே!
அரிதாய்க் கிடைத்த அந்த மாலையை
வாங்கினால் அடையலாம் மாதவி மங்கையை!
பாங்குடைக் கோவலன் பாசத் தோடு
தீதறும் கண்ணகி சிறப்பினை மறந்து
மாதவி அடைந்தான் மாலையை வாங்கியே!
காதல் மேலுற கலையின் அரசி
மாதவி ஆடலில் பாடலில் மகிழ்ந்தான்!
முழுநிலாப் பொழுதில் மூண்டது சொற்போர்!
அழகியை விட்டே அகன்றான் கோவலன்!
வாடினாள் மாதவி! மடலும் விடுத்தாள்
நாடி வருவான் என்றே! நற்பயன்
ஏதும் இல்லை! இனியவள் வாழ்வில்
தீது வந்ததாய்த் தேம்பி அழுதாள்!
கண்கண்ட தெய்வமாய்க் கருதினாள் மாதவி
புண்படச் செய்தான் பொல்லாக் கோவலன்!
அன்புக் கடிமை ஆன மாதவி
துன்பப் பட்டது தொடர்கதை யானது!
மகிழ்ந்து பெற்ற மணிமே கலையொடு
திகழ்ந்தாள் மாதவி தேற்றுவார் இன்றியே!
மறைநெறி மாறா மாதவி பின்னர்த்
துறவறம் ஏற்றாள் தூய்பணி தொடரவே!
தொடரும்
அருமை
RépondreSupprimerதங்களின் கவிப் பணியும் தொடரட்டும்
த.ம.2
அருமை ஐயா... தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerமாதவியின் துன்பம் கூறும் வரிகள்...
RépondreSupprimerபகிர்விற்கு நன்றி ஐயா!
அருமை.... அருமை ஐயா.
RépondreSupprimerதமிழமுதம் பருகத் தந்தீர்கள்...
அருமை.
வணக்கம்
RépondreSupprimerஐயா.
சிறப்பான கருத்தாடல் மிக்க வரிகள்.. ஐயா.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
மறைநெறி மாறா மாதவி பின்னர்த்
RépondreSupprimerதுறவறம் ஏற்றாள் தூய்பணி தொடரவே
ஆகா அருமை உண்மையில் உயர்ந்தவள் மாதவி
அழகு தமிழை அள்ளிப் பருகினேன்.
நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
மகிழவைக்கும் மாதவியின் மனம் வருந்தியதை
RépondreSupprimerமனதில் பதிக்கும் கவிதை வடிவம் அற்புதம்!
வாழ்த்துக்கள் கவிஞரே!
மாதவியில் மயக்கம் கொண்டே
RépondreSupprimerமயங்கினான் கோவலன் அன்றே
வாதிடும் தன்மை அற்றாள்
வழிமாறி துறவும் கொண்டாள்
சீருடன் பெற்றாள் மகளை
சிறப்புற அடைந்தாள் புகழை .!
அத்தனையும் அருமை
படித்தேன் ரசித்தேன் பயன்பெற்றேன் கவிஞர் அண்ணா
வாழ்க வளமுடன்
8