கவியரங்கம்
மாதவ மங்கையர்
கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]
தமிழ் வணக்கம்!
ஒன்றும் அறியாச் சிறுவனெனை
உயர்த்தி வைத்த
என்தாயே!
கன்றும் பிரிந்து கலங்குவதாய்க்
கவிதைக் காட்டில் நிற்கின்றேன்!
அன்றுன் அருளை
ஆழ்வார்கள்
அடைந்து பாக்கள் அளித்ததுபோல்
இன்றுன் அருளை
எனக்கருள்க!
இன்பத் தமிழே!
என்னுயிரே!
இறை வணக்கம்
அரங்கா! அழகா! ஆரமுதா!
அடியேன் வேண்டும் குரல்கேட்டும்
இரங்கா திருந்தால் என்செய்வேன்?
என்றும் உனக்கே
ஆட்பட்டேன்!
குரங்கா பிறந்த
சுக்ரீவன்
கொண்டான் ஆட்சி
உன்னருளால்!
வரம்..தா எனக்கும்! இவ்வரங்கில்
வண்ணக் கவிதை
பொழிந்திடவே!
அவை அடக்கம்
வீரம் பொங்கும் நிலத்தினிலே
விளைந்த நெஞ்சன்! என்னிடத்தில்
காரம் பொங்கும் சொல்லிருக்கும்!
கத்தும் தொண்டைப் பறையிருக்கும்!
ஈரம் பொங்கும் மனமில்லை!
எதற்கும் அடங்கும் குணமில்லை!
வார ஈற்றில் தமிழ்கேட்க
வந்தோர் முன்னே
அடங்குகிறேன்!
பிரான்சு தமிழ்ச்சங்கம்
பொங்கும் தமிழர்
புத்தாண்டைப்
போற்றும் எங்கள்
தமிழ்ச்சங்கம்!
எங்கும் தமிழர்
எழுச்சிபெற
ஏற்ற பணிகள்
ஆற்றுகவே!
தொங்கும் பொல்லா
வேற்றுமையைத்
துரத்தி விட்டால், நம்வாழ்வில்
தங்கும் இனிமை!
பொற்காலம்
தானே பூத்துத் தழைத்திடுமே!
தலைவர் பா. தசரதன்
அந்தக் கால தசரசர்க்கோ
அணிய தலைமேல் முடியுண்டு!
இந்தக் காலத் தசரசர்க்கோ
ஏனோ தலையில் முடியில்லை!
முந்தும் கணித
மாண்புகளை
முன்னைத் தமிழின் மாட்சிகளை
சொந்த மாக தலைக்குள்ளே
சூடிக் கொண்டார்! பின்..முடி..ஏன்?
செயலாளர் முடியப்பநாதர்
சங்கம் காக்கும் செயலாளர்
தமிழை அணிந்த
முடியப்பர்!
பொங்கும் கவிதை
மதுபருகிப்
புகழில் ஆடும்
குடியப்பர்!
இங்கும் எங்கும் தமிழ்ப்பகையை
எதிர்த்தே எரிக்கும் இடியப்பர்!
அங்கம் யாவும் அன்புருகும்
அண்ணார் அடிக்கே என்வணக்கம்!
பொருளாளர் கோகுலன்
கண்ணன் வளர்ந்த கோகுலமே!
கருத்தைக் கவரும்
தமிழ்வளமே!
அண்ணன் தம்பி கொண்டுள்ள
அன்பைப் பொழியும் நல்லகமே!
எண்ணம் இனிக்க இனப்பற்றை
ஏந்தி நிற்கும் காவலனே!
உண்ணும் பொழுதும் கவிபாடும்
உயர்ந்த கவி..நான் வணங்குகிறேன்
அவைக்கண் அமர்ந்த அன்பர்களே!
அகத்துள் அமர்ந்த நண்பர்களே!
சுவைக்கண் பொங்கும் வாழ்த்துக்கள்
சொல்லித் தலைப்பில் செல்கின்றேன்!
தவக்கண் கொண்டு
வாழ்ந்திட்ட
தங்க மகளிர்
புகழ்கேட்கச்
செவிக்கண் சிறந்து வைத்திடுவீர்!
செந்தேன் பாயும்
குளிர்ந்திடவீர்!
கவிதை வானின் கதவுகளைக்
கவிஞன் மெல்லத் திறக்கின்றேன்!
புவியைப் புரட்டும் கவிமழையைப்
பொழிந்து நெஞ்சம் சிறக்கின்றேன்!
சிவிகை யாகச் சிந்தனையைச்
செதுக்கித் தமிழைச் சுமக்கின்றேன்!
செவியைத் துளைத்தே என்பாக்கள்
சேர்ந்தால் கைகள்
தட்டிடுவீர்!
12.01.2014
தொடரும்
செந்தேன் மழையைக் கவியாக்கிச்
RépondreSupprimerசேரும் இடத்தில் புகழ் பெறுவீர்
இன்றே எனது வாழ்த்ததனை
இனிக்கத் தந்தேன் கவி மனமே !...
கவியரங்கம் மிகவும் சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerசிறந்த கவிதைத் தொடர்
RépondreSupprimerதொடருங்கள்
தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்
கனல் பறக்கும் கவிப்புயல் சுழன்றடித்ததுவோ...
RépondreSupprimerஅருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerசபையோர் சிறக்கவே சாற்றிய பாக்கள்
சுவையிதற்கு மேலுண்டோ சொல்!
மனதை நிறைக்கின்ற சீர்களுடன்
சிறந்தோங்கும் அறுசீர் விருத்தங்கங்கள். மிக அருமை ஐயா!
தொடருங்கள்!...
என் பனிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
RépondreSupprimerகவித்தொடர் மிக அழகு. தொடருங்கள் ஐயா
RépondreSupprimerதங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
அருமை ஐயா...
RépondreSupprimerதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உண்ணும் பொழுதும்
RépondreSupprimerகவிபாடும் உமை
உயர்ந்த கவியென
உரக்கச் சொல்வர்
அவையில் உவகையில்.
மிக்க நன்றி .....! வாழ்க வளமுடன்......!