mercredi 15 janvier 2014

மாதவ மங்கையர் - பகுதி 3




கவியரங்கம்

மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

கற்புக்கரசி கண்ணகி

மாதவம் பெற்ற மங்கையர் மாண்பைப்
பா..தவத் தமிழில் பாட உள்ளோம்!
கற்பின் அரசி கண்ணகி சீரைப்
பொற்புடன் போற்றுவார் புலவர் சமரசம்!
மாசில் கவிகள் வடிக்கும் பொழுதும்
காசில் இவரின் கண்கள் இருக்கும்!
கம்பன் கழகம் காக்கும் பொருளர்!
இம்மன்று ஏறி இசைக்கும் அருளர்!
உலகம் சுற்றும் உயர்ந்த மனிதர்!
நிலவைக் கூடப் பார்க்க நினைப்பார்!
கண்ணகி மாண்பைக் கன்னல் தமிழில்
பண்ணிப் பாடப் பறந்து வருகவே!

சமரசம் வருகவே!
கம..கமவெனக்
கவிரசம் தருகவே!

கண்ணகி மாட்சியைக் கன்னல் தமிழொழுக
எண்ணம் இனிக்க இசைத்தவரே! - வண்ணமுடன்
பல்லாண்டு வாழ்க சமரசரே! பைந்தமிழ்த்தேன்
சொல்லாண்டு வாழ்க சுடர்ந்து!

மாதரசி மாதவி

பேசரும் தமிழ்போல் பெருமை பெற்றவள்
மாசறும் பொன்னாள்! மங்கை மாதவி!
ஆடல் பாடல் அனைத்துக் கலைகளும்
சூடப் பெற்ற சுந்தரி மாதவி!
மாதவி கொண்ட மாதவ வாழ்வைப்
போதலர் பாட்டில் போற்ற வருகிறார்
தங்கை சண்முக நாத லினோதினி!
தங்க மனத்துத் தாரகை என்பேன்!
மேடை மணக்க மேன்மைத் தமிழைக்
கூடைக் கனிகளாய்க் கொட்டிக் கொடுப்பார்!
பாடும் குயிலாய்ப் பாக்கள் படிப்பார்!
ஆடும் மயிலாய் அகத்தைப் பறிப்பார்!
மாதவி வாழ்வின் மாண்பைத் திரட்டி
ஓத அழைத்தேன் ஓடி வருகவே!

கவிஞர் லினோதினி பெண்மணியே!
கன்னல் தமிழ்தரும் பண்மணியே!
மாதவியைப் பாடுக!
மதுகவியைச் சூடுக!

ஆடும் மலாக்;கொடி அன்பொளிர் மாதவியைப்
பாடும் மலர்க்கொடி பாவலரே! - கூடும்
சுவைக்கவி சூடும் லினோதினியே! வாழ்க
தவக்கவி யாகத் தழைத்து!

மாசிலா மாணிக்கம் மணிமேகலை

வாட்டும் பசியை ஓட்டும் செல்வி
ஆட்டம் பாட்டம் மாட்டேன் என்றே
அறநெறி ஆற்ற துறவறம் பூண்ட
மறத்தமிழ் மங்கை மணிமே கலையின்
மாதவம் கூற மன்றில் வருகிறார்
கா..தவழ் காற்றாயக்; கமழ்சிவ அரியார்!
கவிதை மீது காதல் கொண்டவர்!
புவியின் அழகைப் புனையும் வல்லவர்!
சிவஅரி யார்தம் செந்தமிழ் பாட
அவரின் மனைவி அவை..வர வேண்டும்!
கோமதி கண்கள் கொஞ்சும் தமிழைப்
பாமதி ஒளிரப் படைக்க வேண்டும்!
மணிமே கலையின் மாட்சியை, மின்னும்
அணிமே கலையாய் அளிக்க வருகவே!

சிவஅரி எழுகவே!
செந்தமிழ் நிலத்தில்
தவமொளிர் தமிழை உழுகவே!

அள்ளச் சுரக்கும் அமுத சுரபிபோல்..பா
அள்ளிப் படைத்த அருங்கவியே! - உள்ளம்
ஒளிரும் சிவஅரியே! ஓங்கிடுக! நாளும்
மிளிரும் தமிழை விளைத்து!

கோப்பெரும் தேவியின் மாண்பு

மதுரை ஆண்ட மன்னன் செழியனின்
மதியை ஆண்ட மங்கை கோப்பெரும்
தேவியைப் பாடத் தேன்தமிழ் சூடக்
கூவி அழைத்தேன் கொஞ்சம் தமிழால்
நற்பா மல்லனை! நறும்பா மல்லனை!
பொற்பா மல்லனை! புகழ்ப்பா மல்லனை!
கவிதைக் கலையைக் கற்றுக் களிக்கும்
புவியைத் தமிழால் புனைய நினைக்கும்
வல்ல கவிஞன்! வளர்கலைச் சுவைஞன்!
நல்ல நண்பன்! நற்பணி அன்பன்!
மதுரை கண்ட மாதவ மங்கையை
மதுரத் தமிழால் வடிக்க வருகவே!

எங்கள் பாமல்லன்
பொங்கும் தேன்சொல்லன்!
கொஞ்சம் தமிழால் - நம்
நெஞ்சைக் கொள்ளையிடும் மாகள்ளன்!

பாட..வா பெருந்தகையே! - நன்கு
சூட..வா அருஞ்சுவையே!

கோப்பெரும் தேவியைக் கோலத் தமிழழகில்
பாப்புனைந்த பாமல்ல பாவலனே! - நாப்புகழ்ந்து
வாழ்த்துகிறேன்! வாழ்க வளத்துடன்! உன்..கவிக்குத்
தாழ்த்துகிறேன் என்றன் தலை!

தொடரும்
 

7 commentaires:

  1. வணக்கம் !

    பாவால் அழைத்துப் பாட வந்த நற் கருத்தைக்
    காணக் காத்திருக்கின்றன விழிகள் ! வாழ்த்துக்கள்
    ஐயா தொடர்ந்தும் காப்பிய நாயகிகளின் சுயத்தைப்
    பார்த்து மகிழ தங்களின் கவிதையரங்கம் தொடரட்டும் .

    RépondreSupprimer
  2. நாடித் தினமும் நற்கவிதை படைக்கின்றீர்!
    தேடிவரும் சொற்களுமை! தென்றலெனத் தொடுகின்றீர்!
    பாடும் குயிலானீர்! பைந்தமிழே தாளமிட!
    ஆடும் மயிலானீர்! அரங்கத்தில் தலைமையென!

    RépondreSupprimer
  3. ஒவ்வொரு தலைப்பிலும் வரிகள் தித்திக்கிறது ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!...

    அவையோரைக் கூவியே ஆற்றிய பாக்கள்
    இவைமேலும் ஏற்றும் இனிமை! - சுவையாய்ச்
    சொரியும் கவிமலரால் சூட்டுகிறீர்! கேட்போர்
    புரிந்துடனே சேர்ப்பர் புகழ்!

    மிக அருமை!..
    பாராட்ட என்னிடம் வார்தைகள் இல்லை ஐயா!...
    அத்தனை இனிமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  5. கூவி அழைத்த குரல்
    கேட்டு கூடி வருவர்.
    கொஞ்சிடும் தமிழில் பாவமைத்து
    பாட்டிசைப்பர் பாவறிஞர் புகழ் சூட.....!

    ஒவ்வொரு வரியும் இனிமை தான் நன்றி....!
    தொடர வாழ்த்துக்கள்.....!

    RépondreSupprimer
  6. வணக்கம்
    ஐயா.
    ஒவ்வொரு தலைப்பிலும் வடித்த கவிதை மிக அற்புதமாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம 11வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer