samedi 18 janvier 2014

மாதவ மங்கையர் - பகுதி 4



கவியரங்கம்



மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

கற்புக்கணி கண்ணகி!

பூம்புகார் போற்றும் புகழுடை வணிகன்
தேம்மனச் செல்வன் சீர்மா நாய்கன்
பெற்று வளர்த்த பெருங்குணச் செல்வி!
கற்புக் கரசி கண்ணகி யாவாள்!
பாசத் திருமகள்! பண்பின் பெருமகள்!
வாச மல்லிகை! மாசிலா வீணை!
மின்னும் நெறிகள் விளையும் மனத்தாள்!
பொன்னும் மணியும் பொலியும் குணத்தாள்!

மாசாத் துவான்எனும் வணிகன் வாழ்வைப்
பேசப் புகுந்தால் பெருகும் கடல்போல்!
அன்னோன் குடியை ஆளப் பிறந்த
தன்னேர் இல்லாத் தமிழ்க்கலை வாணன்!
மதிநிறை செல்வன்! நிதிநிறை கோவலன்
பதினா(று) அகவை பயிலும் பொழுதில்
பன்னிரண்(டு) அகவை படர்ந்த பாவை
கன்னல் மொழியாள் கண்ணகி மணந்தாள்!

அன்பாய் இருவரும் அறநெறி யோடு
பண்பாய் வாழ்ந்து பழகுங் காலை
ஆடலும் பாடலும் அழகும் சேர்ந்த
தேடற் கரிய தேவதை மாதவி
அரசன் அவையில் ஆடிப் பாடிப்
பரிசாய்ப் பெற்றாள் பச்சை மாலையை!
அதனை வாங்குவோர் அடையலாம் மாதவி!
இதனை கோவலன் இனிதே அறிந்து
மாலையை வாங்கி மாதவி அடைந்தான்!
மாலை சாய்ந்து மதிசூழ் வேளையில்
இருவர் இடையே வந்தது பிணக்கு!
பிரிவு மெல்லப் பெரிதாய் ஏற்படத்
தன்மனை சேர்ந்தான் தலைவன் கோவலன்!
மன்னனைக் கண்டு மகிழ்ந்தனள் கண்ணகி!
எல்லாப் பொருளும் இழந்த நிலையில்
நல்ல சிலம்பினை நல்கிக் கணவன்
செல்லும் வழியில் சென்றாள் கண்ணகி!
பொல்லாங் காலே பொய்ப்பழி ஏற்றான்!
தலையை இழந்தான் தலைவன்! எரியும்
மலையாய் மாறி மதுரையை அழித்தாள்
கற்புக் கரசி கண்ணகி தேவி!
நற்றவ நங்கையை நாளும் போற்றுவோம்!

தொடரும்

6 commentaires:

  1. மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. மாதவ மங்கையர் மாண்புகளை பாடுகின்றீர்கள்..
    நாம் தவம் செய்து பெற்ற வரத்தால் கேட்கின்றோம்!

    என்ன இனிமை?... அற்புதம் கவிஞரே!
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  3. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான கருத்தாடல் மிக்க வரிகள்....வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 6வது வாக்கு

    RépondreSupprimer
  4. தெரிந்த கதை எனினுமும் தேன்தமிழில்
    கண்டு இன்புற்றேன்....!
    அருமை ...!
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
  5. நன்றே நன்றே சொல்கின்றீர்
    நாவில் இனிமை சேர்க்கின்றீர்
    கன்னல் தமிழில் படைக்கின்றீர்
    கனியாய் இனிக்க தருகின்றீர்
    கண்ணில் கருணை வடிக்கின்றீர்
    காக்கக் கடமை துடிக்கின்றீர்
    அன்னைத் தமிழில் பகர்கின்றீர்
    அரங்கில் ஏற்றி சொரிகின்றீர்


    அழகோ அழகு கவிஞரே
    படித்தேன் ரசித்தேன் பயன்பெற்றேன் அண்ணா

    வாழ்க வளமுடன்
    11

    RépondreSupprimer