lundi 6 janvier 2014

அச்சம் தவிர் - பகுதி 2



அச்சம் தவிர்

நெற்றிக் கண்ணைத் திறந்தாலும்
     நீதி உரைக்கத் தயங்காதே!
வற்றி வரண்டு கிடந்தாலும்
     வகுத்த நெறியில் மாறாதே!
பற்றிக் கொண்டு எரிந்தாலும்
     பகைவன் காலைப் பிடிக்காதே!
முற்றி நீட்டும் முந்திரிபோல்
     முற்றும் அச்சம் தவிர்ப்பாயே!

கடலே பொங்கி எழுந்தாலும்
     கண்முன் இடியே விழுந்தாலும்
உடலே அறுந்து துடித்தாலும்
     உயிரே குன்றி மடிந்தாலும் 
இடரே நிறைந்து வாழ்வுதனை
     இல்லா தாக்கிப் புதைத்தாலும்
அடலே(று) என்று நின்றெதிர்த்து
     அழுத்தும் அச்சம் தவிர்ப்பாயே!

கோள்கள் சுற்றும் பாதைகளைக்
     கூர்ந்து போட்ட நபர்யாரோ?
நாள்கள் காலை மாலையென
     நடக்கச் செய்த நிலையேனோ?
தோள்கள் கால்கள் நம்முடலில்
     தோன்ற செய்த கலையேனோ?
தாள்கள் பற்று! பரம்பொருள்மேல்
     தரித்த அச்சம் தவிர்ப்பாயே!

ஏழை யாக இருந்திடலாம்
     கோழை யாக இருக்காதே!
கூழைக் குடித்து வாழ்ந்தாலும்
     கூனி குறுகித் தாழாதே!
ஊழைக் கண்டு துவளாதே!
     உன்னை உணர, உயர்வுபெற,
வாழை யாக வளர்ந்தோங்க,
     வாழ்வில் அச்சம் தவிர்ப்பாயே!

உழைப்பில் என்றும் வாழ்ந்திடுக!
     உண்மை பேசி உயர்ந்திடுக!
கொழுப்பில் திரியும் நபரோடு
     கொள்ளும் கூட்டை விலக்கிடுக!
கழுத்தில் கத்தி வைத்தாலும்
     கருத்தைச் சொல்லத் துணிந்திடுக!
எழுத்தில் படிப்பில் எழுந்தாடி
     இளிக்கும் அச்சம் தவிர்ப்பாயே!

கொட்டக் கொட்டக் குனியாதே!
     குதிரை யாகச் சுமக்காதே!
வெட்ட வெட்ட வளர்கின்ற
     விளைவைக் கண்டு விழிப்புறுக!
தட்டத் தட்டப் பொறுமையுடன்
     தாங்கும் மரமா உன்னுடம்பு!
சுட்டப் பொழுதும் தாழாமல்
     துணிந்தே அச்சம் தவிர்ப்பாயே!

ஆளும் ஆட்சி போடுகிற
     ஆட்டம் அடங்கும்! அஞ்சாதே!
வாளும் வேலும் பாய்ந்தாலும்
     வாழ வேண்டிக் கெஞ்சாதே!
ஆளும் வளர, உன்னுடைய
     அறிவும் வளர வேண்டுமடா!
மூளும் கொடுமை முடித்திடவே
     முற்றும் அச்சம் தவிர்ப்பாயே!

சின்ன குழந்தைப் பருவத்தில்
     செய்யும் குறும்பை அடக்கிடவே
சொன்ன சொற்கள்! அஞ்சுகண்சேர்
     சூரன்! கொல்போய்! காட்டேரி!
இன்னும் நெஞ்சம் வேப்பமரம்
     இருக்கும் பக்கம் போகாது!
மன்னும் மடமை மாண்டிடவே
     மனத்துள் அச்சம் தவிர்ப்பாயே!

உச்சம் கொண்டு தீயவர்கள்
     உலவும் பொழுதும்! நம்வாழ்வை
எச்ச மாக இழிந்தெண்ணி 
     ஏதும் பொழுதும்! கொடும்பகைவர்
துச்ச மாக நம்பெயரைத்
     தூற்றும் பொழுதும்! துளியளவும்
அச்சம் இல்லை! இலையென்றே
     ஆடிப் பாடித் துள்ளுகவே!

பச்சை உந்தி எனும்பெயரைப்
     பதிக்க வேண்டாம்! கையேந்திப்
பிச்சை உண்ணும் நிலையுற்றுப்
     பிழைக்க வேண்டாம்! ஓர்நொடியும்
இச்சை கொண்டு இழிச்செயலை
     ஏற்க வேண்டாம்! துகளளவும்
அச்சம் வேண்டாம் என்றுரைத்தே
     அரங்கை நிறைவு செய்கின்றேன்!

04.01.2014 
பிரான்சு கம்பன் கழகத் திங்கள் பாட்டரங்கம்

8 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    கவிதை மிகச் சிறப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. அருமை ஐயா..

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. என்னே வரிகள்...!!!

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. பாரதி என்னும் பெயர் சொன்னாலே
    அச்சம் துச்சம்தான்!

    மிக அருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  5. வணக்கம் !

    உன்னதமான நற் கருத்துக்கள் தாங்கி
    அச்சத்தைப் போக்க வந்த அருமருந்து
    கண்டு வியந்தேன் ! உங்களுக்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

    RépondreSupprimer
  6. மூழுதே வீரம் மொழிகிற பாக்களில்
    தாழும் நிலையைத் தணித்து!

    உள்ளத்தில் புத்துணர்வு பொங்கும் உங்கள் பாக்களால்...

    மிக அருமை ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  7. "வாளும் வேலும் பாய்ந்தாலும்
    வாழ வேண்டிக் கெஞ்சாதே!
    ஆளும் வளர, உன்னுடைய
    அறிவும் வளர வேண்டுமடா!" என்பது
    சிறந்த வழிகாட்டல் ஐயா!
    தொடருங்கள்...
    நல்வழி காட்டுங்கள்!

    RépondreSupprimer
  8. அச்சத்தின் அனர்த்தங்கள் இனி வேண்டா
    என்றினிதாய் எடுத்துரைத்தீர் திண்ணமுடன் வியக்கின்றேன்......!

    வீரமதை விதைத்திட்டீர் வேங்கையாய்.
    அருமை அருமை.....! தொடர வாழ்த்துக்கள்.....!

    RépondreSupprimer