பிரான்சு கம்பன் விழாவில் வெளிவரும்
நட்பால் விளைந்த நறுந்தமிழ்
[நான் எழுதிய மடல்களின் தொகுப்பு]
என்னுரை
அன்னை அருளால் அளித்த மடற்றொகுப்[பு]
என்னை உலகறிய இங்குதவும்! - முன்னைத்
தமிழ்மரபைக் காக்கும்! தவநெறியைப் பூக்கும்!
தமிழுறவைச் சேர்க்கும் தழைத்து!
விற்போர்போன்று சொற்போர் உண்டு. விற்போர் நிலங்காக்கப் புரிவாதாகும்! சொற்போர் துாயதமிழின் நலங்காக்கத் தொடர்வதாகும்!
நெல்லேர் உழவர்போன்று சொல்லோ் உழவர் உழைக்கின்றார். செந்தமிழை விளைக்கின்றார். வாழ்ந்த நிலையை, வாழும் கலையை வருகின்ற தலைமுறைக்கு அளிக்கின்றார். நெல்வயலைக் காப்பதுபோல் சொல்வயலைக் காத்துக் களிக்கின்றார்.
சொற்கலை கற்றவரின் பேச்சும் எழுத்தும், இவ்வுலகின் கல்களையும், முள்களையும் நீக்கும்! பகைவரைத் தாக்கும்! பயன்வழி யாக்கும்! பண்புற ஊக்கும்! தாய்மொழியையும் இனத்தையும் காக்கும்!
கணிப்பொறியின் வழியாக நான் எழுதிய மடல்களின் தொகுப்பே இந்நுால். ஒவ்வொரு மடலின் ஈற்றிலும் மரபுக்கவிதை இடம்பெற்றிருக்கும். அக்கவிதை அம்மடலுக்கு அணியாக அழகு சேர்க்கும்.
இத்தொகுப்பில், அன்பால் விளைந்த அருமை மடல்களும் உள்ளன. வம்பால் வளர்ந்த வன்மை மடல்களும் உள்ளன.
இவ்வேட்டில், நட்பால் மலர்ந்த நன்மடல்களும் உள்ளன. நற்றமிழ்ப் பற்றால் படர்ந்த இன்மடல்களும் உள்ளன.
மின்வலையிலும், முகநுாலிலும் 'கேட்டலும் கிளத்தலும்' என்ற பகுதியில், என் மாணவர்களும், தமிழன்பர்களும் தொடுத்த வினாவிற்கு நான் விடுத்த விடையாகிய மடல்களும் இச்சுவடியில் உள்ளன.
நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் தமிழ்ச் சான்றோர்தமக்கும் தீட்டிய மடல்கள் பிரான்சு நாட்டில் நான் வாழ்ந்த வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும். தமிழர்களின் போக்கை எடுத்தியம்பும். நடைபெற்ற விழாக்களின் நிலையை உணர்த்தும்.
இலக்கண இலக்கிய விடை மடல்கள், வளரும் பாவலர்களுக்கு நற்றுணையாகும். தமிழ்நதியை இரு பக்கமும் காக்கும் பனையாகும். இம்மடல்கள் மிக விரிவாகவும் தெளிவாகவும் நீண்டும் இருப்பன. கற்போர் மனத்தைக் கவர்ந்து பிடிப்பன.
முகநுாலில் சிலர் தமிழ் யாப்பைத் தவறாகக் கற்பிக்கும் நிலையைக் கண்டு, அவர்தம் தவற்றைச் சுட்டி எழுதிய என் மடல்களும், அவர்கள் தலைக்கனம் கொண்டு எழுதிய மடல்களும் இத்தொகுப்பில் உள்ளன.
என் இனிய நண்பர், 'ஊமைக்கனவுகள்' என்ற மின்வலையின் இயக்குநர், இலக்கணச் செல்வர், பேராசிரியர் சோசப் விசீ அவர்கள் எழுதிய மடல்களும், அம்மடல்களுக்கு நான் எழுதிய மறுமடல்களும் இத்தொகுப்பில் உள்ளன. இலக்கணச் செல்வர் எழுதிய மடல்கள் வைர ஆரமாய் இந்நுாலுக்குப் புகழ் அளிப்பன. இலக்கணத் தெளிவும் இலக்கிய எழிலும் அளித்த பேராசிரியர் அவர்களுக்கு என் மனக்குளத்தில் பூத்த தாமரைமலர்களைச் சாற்றி இன்புறுகிறேன்.
நறுந்தமிழுக்குச் சாற்றுகவி வழங்கிய எந்தை, கலைமாமணி, சந்தக்கவிஞர் தே. சனார்த்தனன் என்ற கிருட்டினசாமி அவர்களுக்குச் சொன்மாலையைச் சூட்டி மகிழ்கின்றேன்.
எண்ணும் கருத்தை மின்னும் வண்ணம் முகப்பட்டையை வடிவமைத்த தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு இன்மாலையை அணிந்து களிக்கிறேன்.
அன்பால் விளைந்த நறுந்தமிழைத் தான்பால் சுமந்து பதிப்பித்த மணிமேகலை பிரசுரத்தின் இயக்குநர், முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்களுக்குப் பொன்மாலையைப் போட்டு உவக்கின்றேன். அங்குப் பணியாற்றும் அன்பர்களுக்கு நன்மாலையை நல்கி நலங்கொண்டேன்.
விளைந்த நறுந்தமிழை உண்டு நடமிடுவீர்! தமிழ்த்தேருக்கு வடமிடுவீர். இனமோங்க உரமிடுவீர்!
தீட்டிய ஓலைகளைச் சேர்த்துள்ளேன்! செந்தமிழ்த்தாய்
ஊட்டிய சீரால் உயர்ந்துள்ளேன்! - நாட்டில்
மொழிகாக்க வேண்டி முகிழ்த்த..இந் நுால்
விழிகாக்கச் செய்வீர் விழைந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire