வெண்பா மேடை - 115
இரட்டைத் தொடை வெண்பா!
நாற்சீரடியால் ஓரடி முடியும் அளவும் ஒரேசீரே நடப்பது இரட்டைத் தொடையாகும். அச்சீர் ஒரே பொருளிலும் வரும். வேறு வேறு பொருளிலும் வரும். ஈற்றுச்சீர் ஒன்று ஓர் எழுத்துக் குறைந்து வரினும் ஒக்கும்.
எங்குமே! எங்குமே! எங்குமே! எங்குமே!
பொங்குமே கண்ணன் புகழோசை! - தங்குமே
நெஞ்சுள் நெடுமால் நிறையழகு! பாடுகவே
கொஞ்சும் தமிழைக் குவித்து!
'எங்குமே' என்ற சொல் ஒரே பொருளில் அடி ஈற்றுவரை வந்துள்ளது.
பஞ்சியே உன்மேனி! பால்சுவையே உன்பார்வை!
பிஞ்சியே மென்விரல்! பித்தேறிக் - கெஞ்சுகிறேன்
வஞ்சியே! வஞ்சியே! வஞ்சியே! வஞ்சியே!
விஞ்சியே ஈவாய் விருந்து!
'வஞ்சியே' என்ற சொல் வேறு வேறு பொருளில் வந்தது [பெண், கொடி, பாட்டு, நகர்]
கூடுமே மேகம்! குளிருமே நெஞ்சகம்!
ஆடுமே! ஆடுமே! ஆடுமே! - ஆடும்!
மயிலாடும்! காற்றில் மரமாடும்! என்றன்
உயிராடும் பாக்கள் உரைத்து!
'ஆடும்' என ஈற்றில் ஓரெழுத்து மாறி வந்தது.
ஓரடி, ஒரு முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வரின், அத்தொடையினை, இருமுற்றிரட்டை என்ப. ஒரு சாராரால் நிரல்நிறையும் இரட்டைத் தொடைப்பாற் படுத்து வழங்கப்படும்.
கூடுமே இன்பம் குறள்வழியால்! முன்வினை
ஓடுமே! ஓடுமே! ஓடுமே! - ஓடுமே!
உண்மையே! உண்மையே! உண்மையே! உண்மையே!
திண்மையே ஊட்டும் தெளிந்து!
இஃது, இருமுற்றிரட்டைத் தொடையால் அமைந்த வெண்பாவாகும்.
விரும்பிய பொருளில் 'இரட்டைத் தொடை வெண்பா ' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து இரட்டைத் தொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்ற
Aucun commentaire:
Enregistrer un commentaire