மரபின் மைந்தர் பொன்விழாப் பொலியட்டும்!
வண்ணத் தமிழ்மரபை வன்மையுடன் காத்திடுவார்!
எண்ணம் இனிக்க இசைத்திடுவார்! - தண்மழைபோல்
பண்மழை பெய்திடுவார்! பண்பொளிரும் முத்தையர்
கண்ணிமை காட்டும் கவி!
மேடை மணக்க வியன்தமிழைத் தந்திடுவார்!
கூடைக் கனிகளைக் கூட்டிடுவார்! - ஓடையிலே
பூத்த மலர்மனத்தர்! பொற்பொளிரும் முத்தையர்
யாத்த இதழ்க்கிணை ஏது?
இன்மரபு மைந்தரென ஈடில் புகழ்பெற்றார்!
பொன்னுறவு பாக்கள் புனைகின்றார்! - மின்னுறவு
நன்னுால் வடிக்கின்றார்! நட்பொளிரும் முத்தையர்
பன்னுால் பயின்றார் பரிந்து!
கம்பன் தமிழ்கற்றார்! கண்ணன் அருள்பெற்றார்!
நம்பன் இராமன் நடையுற்றார்! - செம்மனத்தால்
நற்பணிகள் செய்திட்டார்! நன்பொளிரும் முத்தையர்
கற்பனைகள் கன்னல் கனி!
நற்கவிப் பேரரசின் நன்மதிப்பை ஏற்றவராம்!
இப்புவி போற்றும்..பா ஈந்தவராம்! - எப்பொழுதும்
அன்பில் திளைப்பவராம்! ஆய்வொளிரும் முத்தையர்
மன்றில் பொழிவார் மழை!
சீர்பாடும் பொன்விழாப் பேரொங்கக் காணட்டும்!
தார்சூடும் பன்விழாச் சாரட்டும்! - நேர்கமழும்
நெஞ்சர் குலம்வாழி! நேயமொளிர் முத்தையர்
கொஞ்சும் தமிழ்வாழி கோத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
Aucun commentaire:
Enregistrer un commentaire