mercredi 29 août 2018

வெண்பா மேடை - 118



வெண்பா
மேடை - 118
  
ஒரூஉ வெண்பா
  
கூத்தாள் விழிக[ள்]நெடுங் கூர்வேலாம்! கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்! - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்! ஆத்தள்தன்
ஆத்தாள் விழிகளிரண்[டு] அம்பு!
  
[காளமேகம்]
  
இவ்வெண்பா நான்கடிகளும் ஓரெதுகையைப் பெற்று முதல் மூன்றடிகள் ஒரூஉ எதுகை கொண்டுள்ளன. [முதல் சீரும் நான்காம் சீரும் எதுகை பெறுவது ஒரூஉ எதுகையாகும்] மேற்கண்ட வெண்பாவில் எல்லா அடிகளிலும் இரண்டாம் சீரும் ஒரே எதுகையில் அமைந்துள்ளது.
  
சின்னவள் என்பேன்! சிரிக்கின்ற சின்னவள்பேர்
பொன்னவள் என்பேன்! பொழிலென்பேன்! - பொன்னவள்..சீர்த்
தென்னவள் என்பேன்! செழிப்பென்பேன்! தென்னவள்இங்[கு]
என்னவள் என்பேன் இனித்து!
  
பாடுதடி நெஞ்சம்! பகலிரவாய்ப் பாடியே
ஆடுதடி நெஞ்சம்! அருங்கனவில் - ஆடியே
கூடுதடி நெஞ்சம்! குழைந்தழகாய்க் கூடியே
சூடுதடி நெஞ்சம் சுவை!
  
அன்பூட்டும் செல்லமே! ஆசையுற என்நெஞ்சுள்
இன்பூட்டும் செல்லமே! இன்றேனே! - பொன்விழியால்
பண்மீட்டும் செல்லமே! பாட்டரசன் வண்ணமுறப்
பண்பூட்டும் செல்லமே! பார்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வாறு அமைந்த ஒரூஉ வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire