vendredi 24 août 2018

வெண்பா மேடை - 111


வெண்பா மேடை - 111
  
ஏழு மண்டிலக் குறள்!
இவ்வகை என்னுடைய உருவாக்கம்
  
1.
மின்றமிழே! வன்றமிழே! மென்றமிழே! என்னுயிரே!
இன்றமிழே இன்பம் இடு!
  
2.
வன்றமிழே! மென்றமிழே! மின்றமிழே! இன்றமிழே!
என்னுயிரே! இன்பம் இடு!
  
3.
மென்றமிழே!என்னுயிரே! இன்றமிழே! வன்றமிழே!
மின்றமிழே! இன்பம் இடு!
  
4.
என்னுயிரே! மென்றமிழே! இன்றமிழே! மின்றமிழே!
வன்றமிழே! இன்பம் இடு!
  
5.
இன்றமிழே! மின்றமிழே! என்னுயிரே! வன்றமிழே!
மென்றமிழே! இன்பம் இடு!
  
6.
இன்பமிடு மின்றமிழே! வன்றமிழே! மென்றமிழே!
இன்றமிழே! என்னுயி ரே!
  
7
மின்றமிழே! வன்றமிழே! இன்றமிழே! என்னுயிரே!
இன்பமிடு மென்றமி ழே!
  
ஏழு மண்டிலம் என்பது ஒரு குறட்பாவில் வந்த ஏழு சீர்களும் இடம் மாறி ஏழு குறட்பாக்களைப் பெறுவதாகும். குறளில் முன்னின்ற ஆறு சீர்களும் முதலடியின் முதற்சீராக வந்தமைய ஆறு குறள்களைப் பெறலாம். குறளின் ஆறாம் சீரும் ஏழாம் சீரும் சேர்ந்து இரண்டாம் அடியின் முதல் சீராக அமைய ஏழாம் குறளைப் பெறலாம்.
  
வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! ஏழு மண்டிலக் குறள் வழி எதுகையில் மட்மே அமையும். [வழி எதுகை என்பது அனைத்துச் சீர்களும் ஓரெதுகை பெறுவது] [அனைத்துச் சீர்களிலும் எதுகை அமைவதால் மோனை வரவேண்டி கட்டாயம் இல்லை]
  
விரும்பிய பொருளில் 'ஏழு மண்டிலக் குறள் ' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து ஏழு மண்டிலக் குறளைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire