dimanche 12 août 2018

வெண்பா மேடை - 101

வெண்பா மேடை - 101
  
அடி மறி இன்னிசை வெண்பா!
  
நேரசையில் தொடங்கும் வெண்பா!
  
கற்றிட வேண்டும் கனிந்து கவியமுதை!
பற்றிட வேண்டும் பணிந்து படர்புகழை!
பெற்றிட வேண்டும் பிணைந்து திருவருளை!
ஊற்றிட வேண்டும் உவந்து!
  
மேற்கண்ட வெண்பாவின் முதன் மூன்றடிகளை முன் பின் மாற்றி அமைத்தாலும் பொருளும், யாப்பும் குன்றாமல் வருவதைக் காணலாம். ஈற்றடி முன்னுள்ள மூன்றடிகளின் வந்தமைந்தாலும் பொருளும், யாப்பும் குன்றாமல் வருவதைக் கீழுள்ள வெண்பாக்களின் வாழியாக அறியலாம்.
  
ஈற்றடி முதலடியாய்,
    
ஊற்றிட வேண்டும் உவந்து கவியமுதை!
பற்றிட வேண்டும் பணிந்து படர்புகழை!
பெற்றிட வேண்டும் பிணைந்து திருவருளை!
கற்றிட வேண்டும் கனிந்து!
  
ஈற்றடி இரண்டாம் அடியாய்!
  
கற்றிட வேண்டும் கனிந்து கவியமுதை!
ஊற்றிட வேண்டும் உவந்து படர்புகழை!
பெற்றிட வேண்டும் பிணைந்து திருவருளை!
பற்றிட வேண்டும் பணிந்து!
  
ஈற்றடி மூன்றாம் அடியாய்!
  
கற்றிட வேண்டும் கனிந்து கவியமுதை!
பற்றிட வேண்டும் பணிந்து படர்புகழை!
ஊற்றிட வேண்டும் உவந்து திருவருளை!
பெற்றிட வேண்டும் பிணைந்து!
  
நிரையசையில் தொடங்கும் வெண்பா!
  
கவிபாட வேண்டும் களித்து! தமிழே!
புவிபாட வேண்டும் புகழ்ந்து! தவமே!
செவிகூட வேண்டும் செழித்து! தகையே!
சுவைகூட வேண்டும் சுரந்து!
  
ஈற்றடி முதலடியாய்,
  
சுவைகூட வேண்டும் சுரந்து! தமிழே!
புவிபாட வேண்டும் புகழ்ந்து! தவமே!
செவிகூட வேண்டும் செழித்து! தகையே!
கவிபாட வேண்டும் களித்து!
  
ஈற்றடி இரண்டாம் அடியாய்!
  
கவிபாட வேண்டும் களித்து! தமிழே!
சுவைகூட வேண்டும் சுரந்து! தவமே!
செவிகூட வேண்டும் செழித்து! தகையே!
புவிபாட வேண்டும் புகழ்ந்து!
  
ஈற்றடி மூன்றாம் அடியாய்!
  
கவிபாட வேண்டும் களித்து! தமிழே!
புவிபாட வேண்டும் புகழ்ந்து! தவமே!
சுவைகூட வேண்டும் சுரந்து! தகையே!
செவிகூட வேண்டும் செழித்து!
  
அடி மறி மண்டில ஆசிரியப்பா போன்றே, இவ்வெண்பாவும் அடிகளை இடம் மாற்றிப் பாடினாலும், பொருள் குன்றாமல், வெண்பாவின் இலக்கணம் குலையாமல் அமைதல் வேண்டும்.
  
[வெண்பா மேடை 100, தமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா, வெண்பா மேடை 101, அடி மறி வெண்பா, இவ்விரண்டும் என்னுடைய உருவாக்கம்.]
  
விரும்பிய பொருளில் 'அடி மறி இன்னிசை வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி இன்னிசை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire