வெண்பா மேடை - 109
நான்கு மண்டில வெண்பா
இவ்வகை வெண்பா என்னுடைய உருவாக்கம்
பாடவரும் பண்குயிலே! பார்பெறுமே கோடிநலம்!
தேடிவரும் பண்பமுதே! தேர்வடிவே! - பாடுநலம்
மின்மொழியே சேர்த்திடுவாய்! தேடுபுகழ் திண்மையுறப்
பொன்னாகப் பார்வை பொழி!
பண்குயிலே! பார்பெறுமே கோடிநலம்! தேடிவரும்
பண்பமுதே! தேர்வடிவே! பாடுநலம் - மின்மொழியே!
சேர்த்திடுவாய்! தேடுபுகழ் திண்மையுறப் பொன்காகப்
பார்வைபொழி பாட வரும்!
பார்பெறுமே கோடிநலம்! தேடிவரும் பண்பமுதே!
தேர்வடிவே! பாடுநலம் மின்மொழியே - சேர்த்திடுவாய்!
தேடுபுகழ் திண்மையுறப் பொன்னாகப் பார்வைபொழி
பாடவரும்! பண்குயி லே!
கோடிநலம் தேடிவரும் பண்பமுதே! தேர்வடிவே!
வீடுநலம் மின்மொழியே சேர்த்திடுவாய்! - தேடுபுகழ்
திண்மையுறப் பொன்னாகப் பார்வைபொழி பாடவரும்!
பண்குயிலே! பார்பெறு மே!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
நான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இரண்டாம் வெண்பாவின் முதல் சீர் மூன்றாம் வெண்பாவில் இறுதியாக வரும். மூன்றாம் வெண்பாவின் முதல் சீர் நான்காம் வெண்பாவில் இறுதியாக வரும். முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். நான்கு வெண்பாக்களிலும் எதுகை, மோனை, அமைதல் வேண்டும். மோனை அமையா அடிகளில் எதுகை வரலாம்.
விரும்பிய பொருளில் 'நான்கு மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நான்கு மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire