வெண்பா மேடை - 108
பதினைந்து மண்டில வெண்பா
1.
குருவே மருள்தீர் மருந்து! மரபு
தருமே விருந்து! பெருமை - வருமே
திரண்டு! திருவாம் வரமே சுரந்து!
தெருளே பெருக்கும் பரிந்து!
2.
மருள்தீர் மருந்து மரபு! தருமே
விருந்து! பெருமை வருமே - திரண்டு!
திருவாம் வரமே சுரந்து! தெருளே
பெருக்கும் பரிந்துகுரு வே!
3.
மருந்து மரபு! தருமே விருந்து!
பெருமை வருமே திரண்டு! - திருவாம்
வரமே சுரந்து! தெருளே பெருக்கும்
பரிந்துகுரு வே!மருள் தீர்!
4.
மரபு தருமே விருந்து! பெருமை
வருமே திரண்டு! திருவாம் - வரமே
சுரந்து! தெருளே பெருக்கும் பரிந்து!
குருவே மருள்தீர் மருந்து!
5.
தருமே விருந்து! பெருமை வருமே
திரண்டு! திருவாம் வரமே - சுரந்து!
தெருளே பெருக்கும் பரிந்து! குருவே
மருள்தீர் மருந்து! மரபு!
6.
விருந்து பெருமை வருமே திரண்டு!
திருவாம் வரமே சுரந்து! - தெருளே
பெருக்கும் பரிந்து! குருவே மருள்தீர்
மருந்து! மரபுதரு மே!
7.
பெருமை வருமே திரண்டு! திருவாம்
வரமே சுரந்து! தெருளே பெருக்கும்
பரிந்து! குருவே மருள்தீர் மருந்து!
மரபு தருமே விருந்து!
8.
வருமே திரண்டு! திருவாம் வரமே
சுரந்து! தெருளே பெருக்கும் - பரிந்து!
குருவே மருள்தீர் மருந்து! மரபு
தருமே விருந்துபெரு மை!
9.
திரண்டு திருவாம் வரமே சுரந்து!
தெருளே பெருக்கும் பரிந்து! - குருவே
மருள்தீர் மருந்து! மரபு தருமே
விருந்து பெருமைவரு மே!
10.
திருவாம் வரமே சுரந்து! தெருளே
பெருக்கும் பரிந்து! குருவே - மருள்தீர்
மருந்து! மரபு தருமே விருந்து!
பெருமை வருமே திரண்டு!
11.
வரமே சுரந்து! தெருளே பெருக்கும்
பரிந்து! குருவே மருள்தீர் - மருந்து!
மரபு தருமே விருந்து! பெருமை
வருமே திரண்டுதிரு வாம்!
12.
சுரந்து! தெருளே பெருக்கும் பரிந்து!
குருவே மருள்தீர் மருந்து! - மரபு
தருமே விருந்து! பெருமை வருமே
திரண்டுதிரு வாம்வர மே!
13.
தெருளே பெருக்கும் பரிந்து! குருவே
மருள்தீர் மருந்து! மரபு - தருமே
விருந்து! பெருமை வருமே திரண்டு
திருவாம் வரமே சுரந்து!
14.
பெருக்கும் பரிந்து குருவே மருள்தீர்
மருந்து! மரபு தருமே - விருந்து!
பெருமை வருமே திரண்டு! திருவாம்
வரமே சுரந்து!தெரு ளே!
15.
பரிந்து குருவே மருள்தீர் மருந்து!
மரபு தருமே விருந்து! - பெருமை
வருமே திரண்டு! திருவாம் வரமே
சுரந்துதெரு ளேபெருக் கும்!
பதினைந்து மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். உயிரெழுத்துகளும், வல்லினம் மிகும் சொற்களும் இம்மண்டிலத்தில் வாரா! பதினைந்து மண்டில வெண்பா வழி எதுகையில் மட்மே அமையும். [வழி எதுகை என்பது அனைத்துச் சீர்களும் ஓரெதுகை பெறுவது] [ அனைத்துச்சீர்களிலும் எதுகை அமைவதால் மோனை வரவேண்டி கட்டாயம் இல்லை]
[உயிரெழுத்துகள் வந்தால் புணர்ச்சியில் எழுத்தின் வடிவம் மாறும், வல்லினம் மிகுந்து வந்தால் ஈற்றுச் சீராக வரும் போது வல்லினம் இல்லாமல் போகும்] [முதல் வெண்பாவில் வந்த அனைத்து எழுத்துகளும் மாறாமல் மண்டிலம் அமைதல் வேண்டும்]
பதினான்கு மண்டிலமும், பதினைந்து மண்டிலமும் என்னுடைய உருவாக்கம்.
விரும்பிய பொருளில் 'பதினைந்து மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பதினைந்து மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire