ஈருடல் ஓருயிர்
சின்னவள் என்றே எண்ணிச்
சிந்தையில் கொள்ள வேண்டாம்!
என்னவள் சாதி யாலே
எங்களைப் பிரிக்க வேண்டாம்!
தென்னவள் மொழியோ தேனாம்!
தேவியின் விழியோ மீனாம்!
பொன்னவள் மாதும் நானும்
புதியதோர் உலகைக் காண்போம்!
ஈருடல் ஒன்றே யாகி
ஓருயி ராக வாழ்வோம்!
பேருடன் புகழுஞ் சேரப்
பெருநெறிக் குறளை ஏற்போம்!
பாருடன் கூடி நாளும்
பைந்தமிழ்த் தாயைக் காப்போம்!
சீருடன் பணிகள் செய்து
சிறப்பெலாம் சூழக் காண்போம்!
அன்பெனும் அமிழ்தி னாலே
அழகுடன் திகழ்வோம்! நல்ல
பண்பெனும் பயிர்வி ளைத்துப்
பாரினில் உயர்வோம்! வாழ்வில்
துன்பெனும் பேயை யோட்டித்
துணிவுடன் நிற்போம்! என்றும்
இன்பெனும் தமிழைப் போற்றி
ஈடிலாப் புகழைக் காண்போம்!
முத்தமிழ் நல்கும் தேனாய்
முக்கனி சேர்ந்த சாறாய்ச்
சித்திரைத் தென்றல் காற்றாய்ச்
சிந்தனை சுரக்கும் ஊற்றாய்
முத்திரை பதித்த பொன்னாய்
மூதுரை கூறும் பண்பாய்
இத்தரை வாழ்வோர் போற்ற
இணையிலா வாழ்வைக் காண்போம்!
18.01.1985
வாழ்வில்
RépondreSupprimerதுன்பெனும் பேயை யோட்டித்
துணிவுடன் நிற்போம்!
...அருமை அய்யா
Supprimerவணக்கம்!
உண்மை ஒளிரும் உயா்காதல் எந்நொடியும்
தண்மை அளிக்கும் தழைத்து!
தென்னவள் மொழியோ தேனாம்!
RépondreSupprimerதேவியின் விழியோ மீனாம்!
அழகு வரிகள்..!
Supprimerவணக்கம்!
அவள்விழி மீனாம்! அருந்தமிழ் நெஞ்சே!
அவள்மொழி தேனாம் அருந்து!
ஐயா... மிக அருமை! என்றோ எழுதிய பாக்கள். இன்றும் இனிமை! இளமை!
RépondreSupprimerஎன் பணிவான வணக்மும் வாழ்த்துக்களும் ஐயா!
வற்றாத நதியைப்போல வழங்கும் பாக்கள்
முற்றாத இளநீரின் மிகுசுவை கொற்றவர்
பைந்தமிழ் அணங்கை போற்றும் அழகு
நெய்யில் கலந்த நறுமண அமுதே!
த ம.1
Supprimerவணக்கம்!
நெய்யில் வறுத்த பொருளாய்! அவள்நினைவு
மெய்யில் மணக்கும் மிதந்து!
வணக்கம் ஐயா !
RépondreSupprimerஇப்படித் தான் வாழ வேண்டும்
இனிய நல் வாழ்க்கை என்று
சொற் சிலம்பேந்தி வந்து இங்கே
சொன்னதோர் கவிதை நன்று !...
வாழ்த்துக்கள் இன்பக் கவிதை மழை இவை போல்
இனிதே தொடரட்டும் தங்கள் வாழ்வில் என்றும் .
Supprimerவணக்கம்!
நற்சிலம்பு ஆடும் மறவனுளம்! நங்கையுடன்
செற்சிலம்பு ஆடும் சுவைத்து!
முத்திரை பதித்த பொன்னாய்
RépondreSupprimerமூதுரை கூறும் பண்பாய்
இத்தரை வாழ்வோர் போற்ற
இணையிலா வாழ்வைக் காண்போம்!
எதற்கும் ஈடு இணையில்லா தங்கள் வரிகள் ... நன்றி ஐயா.
Supprimerவணக்கம்!
முத்திரையாய் மின்னும் முழுமதி எண்ணங்கள்!
புத்துரையாய் மின்னும் பொழிந்து!
Ce commentaire a été supprimé par un administrateur du blog.
RépondreSupprimer