samedi 11 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 90]




காதல் ஆயிரம் [பகுதி - 90]

821.
பாடும் குயில்களே! பச்சைக் கிளிகளே!
ஆடும் மயில்களே! அன்னங்காள்! - கூடுகவே
வாடும் நிலைநீக்கும் வஞ்சி வருகின்றாள்!
காடும் கமழும் கனிந்து!

822.
கனிந்த முகம்கண்டால் காதல் பெருகும்!
குனிந்த மனமோ கொழிக்கும்! - முனிந்த
இடத்தை இனிமையுற ஏற்றும்! நறுந்தேன்
குடத்தைக் குடித்தேன் குளிர்ந்து!

823.
குளிர்ந்த மணக்காற்றே! கொஞ்சுதமிழ் ஊற்று!
மலா்ந்த மலா்வனமே! மானே! - வளா்ந்த
முழுமதியே! முக்கனியே! மோகக் கடலே!
தொழுமழகே! என்னைத் தொடு!

824.
தொடுகின்ற பாக்கள் கொடுகின்ற இன்பம்
தடுக்கின்ற துன்பைத் தகா்த்தும்! - எடுக்கும்
பிறபெல்லாம் என்னவளைப் பின்னிக் களிக்கச்
சிறப்பெல்லாம் சேரும் செழித்து!

825.
செழித்த வயலாகச் சிந்தனை ஆடும்!
விழித்த விழியுனை வேண்டும்! - பழிக்காதே
விண்தவழும் வெண்மதியே! விந்தை ஒளியேந்திக்
கண்கவரும் மூக்குத்திக் கல்!

பதிற்று அந்தாதி [816 இருந்து 825 வரை] 

(தொடரும்)


8 commentaires:

  1. தமிழ் ஊற்றை ருசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஊற்றாய்த் சுரக்கின்றாள்! என்னுயிர்க் கூடியங்கும்
      காற்றாய்க் கமழ்கின்றாள்! பொன்வயல் - நாற்றானாள்!
      ஆற்றாய் அருந்தமிழைப் பாய்ச்சிகிறாள்! என்மனனே
      போற்றாய் அவளைப் புகழ்ந்து!

      Supprimer
  2. அழகான மயில்களும் அருமையான கவிதையும் பார்த்தேன் படித்தேன்.அருமை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மயிலென்ன? துள்ளிவரும் மானேன்ன? பாடும்
      குயிலென்ன? கொஞ்சும் கிளியென்ன? அப்பப்பா
      வாய்த்த அழகெல்லாம் வஞ்சிமுன் ஓா்துளியே!
      சாய்ந்தேன் அவளிடம் தான்

      Supprimer

  3. ஐயா
    அனைத்து வெண்பாக்களையும் ரசித்து படித்தேன்!
    சற்றே பொறாமையாகவும் உள்ளது!
    உங்களால் மட்டும் எப்படி இப்படி எழுத முடிகிறது?

    அந்தாதி பாடல் அகத்தைப் பறித்ததுவே!
    தந்த கருத்துக்கள் தந்தனவே - செந்தேனை!
    எந்தக் காலமும் இருந்து புகழ்வீசும்
    சந்தக் கவியுன் தமிழ்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அந்தாதி போன்றே அவள்அழகு நீண்டுசெலும்!
      பந்தாடி என்னைப் பறக்கவிடும்! - சிந்துபல
      இந்தாடி என்றே எழுதி அளித்திட்டால்
      வந்தோதிச் செய்வாள் வளம்!

      Supprimer

  4. வலைத்தமிழ் உறவுகளுக்ககு வணக்கம்!

    என்னவள் ஈந்த இனியதமிழ்க் கற்கண்டு!
    பொன்னவள் என்றவளைப் போற்றுகிறேன்! - சின்னவள்
    தந்திட்ட சிந்தனைகள்! தண்டமிழின் பாட்டாறாய்
    வந்திட்ட நல்வளங்கள்! வாழ்த்து!

    RépondreSupprimer