தயங்காதே
சாதிப் பெயரைச் சொல்லாதே!
சமயச்
சண்டை செய்யாதே!
நீதி நெறியைக் கொல்லாதே!
நேர்மை
மறந்து செல்லாதே!
விதியை எண்ணி வேகாதே!
வெந்து
நாளும் சாகாதே!
மதியை இழந்து போகாதே!
வாழ்வை
வெறுத்து நோகாதே!
அடிமை யாக வாழாதே!
ஆற்றல்
மறந்து தாழாதே!
மிடிமை யாலே வாடாதே!
வீண
ருடனே கூடாதே!
துன்பம் வந்தால் துவளாதே!
துணிவை
மனதில் இழக்காதே!
இன்பஞ் சேர இளிக்காதே!
இளமை
வீணாய்க் கழிக்காதே!
தீமை என்றும் புரியாதே!
தீயோ
ரிடத்தே பழகாதே!
ஊமை போல இருக்காதே!
உரிமை
கேட்கத் தயங்காதே!
வறுமை கண்டால் ஏங்காதே!
வாழ்வை
வெறுத்துத் தூங்காதே!
சிறுமை அழிக்க அஞ்சாதே!
சிறப்பைப்
படைக்கத் துஞ்சாதே!
அனைத்தும் சிறப்பான வரிகள்...
RépondreSupprimerமிகவும் பிடித்த வரிகள்...
/// துன்பம் வந்தால் துவளாதே!
துணிவை மனதில் இழக்காதே! ///
வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
Supprimerவணக்கம்!
துணிவே துணையாய் அடைந்தவா் தம்வாழ்வில்
பிணியே இலையெனப் பேணு!
அர்த்தமுள்ள வரிகள்!!!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பொருள்நிறைந்த பூந்தமிழைப் போற்றி மகிழ்ந்தீா்
அருள்நிறைந்த தாயின் அழகு!
தயங்காமல் வந்தேன்ன் மீ த 1ஸ்ட்டாக:))... அதென்ன தலைப்பு மட்டும்தான் எனக்கு தெரியுது ஆனா வீடியோவில் கவிதை கேட்டேன்ன்... தமிழில் பேச பொங்குகவே.. நன்றாக இருக்கு கவிதை.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தயங்காமல் வந்திங்குத் தந்த கருத்தில்
மயங்காமல் போகுமோ என்மனம்! நற்றோழி!
உன்றன் வருகையால் உள்ளம் மகிழ்கின்றேன்
நன்றி நவில்கின்றேன் நான்!
RépondreSupprimerவலைத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
அன்பால் அளித்த அருமைக் கருத்துக்கும்
என்பால் உடைய இனியதமிழ் நட்புக்கும்
பண்பால் பகா்கின்றேன் பாரதிநான் நன்றியினை
தண்பால் தமிழைத் தரித்து!
துன்பம் வந்தால் துவளாதே!
RépondreSupprimerதுணிவை மனதில் இழக்காதே!
இன்பஞ் சேர இளிக்காதே!
இளமை வீணாய்க் கழிக்காதே!//உண்மைதான் அய்யா
Supprimerவணக்கம்!
பதவி வருகையில் பண்பைப் பணிவை
முதலெனக் கொள்வோம் முயன்று!
ஓர் புதிய ஆத்திச் சூடியைப் படித்த உணர்வு அய்யா.நன்றி
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நல்லாத்தி சூடி நலமெலாம் நல்குமே!
சொல்லாட்சி ஏற்கும் சுடா்ந்து!
மனித வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்து அறிவுரைகளும் அடங்கியிருக்கிறது இக்கவிதையில். எளிமையான வார்த்தைகளால் இனிமையான சந்த நயத்தோடு அமைந்திருக்கும் கவிதை படிப்பதற்கும் இனிமையாக உள்ளது. குறிப்பாக வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமிகு வரிகளாக, உற்சாகத்தை வரவழைக்கும் வரிகளாக உள்ளது. அவர்கள் சோர்ந்திருக்கும்போது கவிதையை வாசித்தால் மீண்டும் துள்ளலிட்டு உற்சாகம் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
RépondreSupprimerபகிர்வினிக்கு மிக்க நன்றி கவிஞர் ஐயா..!
Supprimerவணக்கம்!
தங்கம் பழனி தரும்சொற்கள் அத்தனையும்
அங்கம் குளிரும் அழகு!
தீமை என்றும் புரியாதே!
RépondreSupprimerதீயோ ரிடத்தே பழகாதே!
ஊமை போல இருக்காதே!
உரிமை கேட்கத் தயங்காதே!
நல்லாரைக்காண்பதுவும் நன்றே
அதை என்றோ கண்டேன் அழகிய கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே
Supprimerவணக்கம்!
நல்லாரைக் காண்பதுவும் நன்றென்றார்! எந்நாளும்
வல்லோர்தம் வண்டமிழை வாழ்த்து!