mardi 7 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 86]



காதல் ஆயிரம் [பகுதி 86]

801.
காலை விடியல் கவியாய் மலர்ந்தாடும்!
மாலை மயக்கம் மகிழ்ந்தாடும் - சோலைக்
கிளியிரண்டு சொக்கிக் கிடந்தாடும்! காதல்
ஒளிதிரண்டு ஓங்கும் உயா்ந்து!  

802.
விடுமுறை நாளை வெறுகின்றேன்! பொல்லாக்
கொடும்முறை செய்து கொளுத்தும் - மிடுக்காய்
ஒருமுறை உன்றன் உருகண்[டு] உவக்கத்
திருமரைப் பெண்ணே திரும்பு!

803.
இன்பத்தேன் ஊறுதடா! என்னிளமை பொங்குதடா!
துன்பமேன்? நெஞ்சம் துடிக்குதடா! - அன்பே..நீ
மெல்லத் தடவிடுக! மேனி குளிர்ந்திடவே!
சொல்லச் சுரக்கும் சுகம்!

804.
திகட்டாத தேன்தரும் தேவியுன் பூ..வாய்!
மிகுத்தாடச் செய்யுமுன் மேனி! - தொகுத்தாட
வேண்டும் இளமை விழாக்கோலம்! ஒன்றாகச்
துாண்டும்  இளமை துணிந்து!

805.
உன்னிலை எண்ணி உருகுதடி! நீயுற்ற
துன்னிலை நீங்கித் துணிவுறுக! - என்னிலை
இன்னிலை காணும்! இளையவளே! உன்மனத்துள்
பொன்னிலை பூக்கும் பொழுது!

(தொடரும்)

9 commentaires:

  1. ரசிச்சி எழுதிடீங்க...

    அருமை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுவைமிகு பாட்டில்நான் சொன்னவை கொஞ்சமே!
      அவைமிகும் வானின் அளவை! - இவைதமிழ்
      என்றே இயம்புவார் இன்றமிழ்க் காதலா்!
      நன்றே இயம்புவார் நல்கு!

      Supprimer
  2. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் +1 இணைத்தாயிற்று... நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்மணம் கொண்ட தளிர்பொடியைக், கொஞ்சும்
      தமிழ்மணம் பாட்டினில் தந்தேன்! - தமிழ்மணம்
      மின்னும் வலையில் விரைந்தே இணைத்துவந்தீா்!
      மன்னும் மகிழ்வில் மலைத்து!

      Supprimer
  3. மிக நேர்த்தியாக ஒவ்வொரு வரியும் செதுக்கப்பட்டிருக்கிறது. "திகட்டாத தேன்தரும் தேவியுன் பூ..வாய்!" உங்கள் கவி கூட திகட்டவில்லை, எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அல்லும் பகலும் அலையெனத் துள்ளிவரும்!
      கல்லும் இனிக்கும்அவள் கால்பாட்டே! - உள்ளத்துள்
      என்றும் இனிக்கும் இனியதமிழ் போல்அன்னாள்
      என்னுள் இனிக்கும் எழில்!

      Supprimer

  4. அப்பப்பா! இன்றேனை அள்ளிப் படைத்துள்ளீா்!
    சப்போட்டா சாறாகத் தந்துள்ளீா்! - எப்படி
    உங்கள் தமிழ்மட்டும் ஓங்கி இனிக்கிறது?
    பொங்கல் சுவையைப் பொழிந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொங்கல் சுவையும் புதுமலா் தேனும்,என்
      மங்கை இதழ்முன் மயங்கிடுமே!- செங்கரும்பின்
      சாறும் தலைவணங்கும்! தாரகையின் தங்கஉடற்
      கூறும் கலைவழங்கும்! கூறு!

      Supprimer

  5. மின்வலை உறவுகளுக்கு வணக்கம்!

    காதல் ஆயிரத்தைக் கற்றுக் களிப்போரே!
    ஈதல் இனிமை எனவுணா்வீா்! - மோதல்
    விழிகள் மொழிந்த கருத்தேந்தித் தந்தஉம்
    மொழிகள் அகற்றுமே மூப்பு!

    RépondreSupprimer