காதல் ஆயிரம் [பகுதி - 91]
826.
மணிமின்னும் வண்ண மலா்மின்னும்! தங்க
அணிமின்னும்! அன்பகம் மின்னும்! - இனிய
கனிமின்னும்! பெய்யும் பனிமின்னும்! அன்பே
இனிமின்னும் உன்னழகு இங்கு!
இனிமின்னும் உன்னழகு இங்கு!
827.
பாட்டும்..நீ! பண்ணும்..நீ! பைந்தமிழ்ப் பாகும்..நீ!
கூட்டும் குளிரும் கொதிப்பும்..நீ! - மூட்டியெனை
வாட்டும் மலரும்..நீ! வண்ண மயிலும்..நீ!
காட்டும் கருணைக் கடல்!
828.
ஏக்கம் எதற்கோ? எழுதிடும் பாட்டெல்லாம்
தேக்கம் தெளிவிக்கும்! தேனூட்டும்! - பூக்காடே!
தூக்கம் தொலையட்டும்! தூண்டும் மனநிலையை
நோக்க வளர்ந்திடும் நூல்!
829.
மோதல் விழிக்கணைகள் முட்டி எனைக்கவ்வக்
காதல் பிறந்ததடி! கண்நான்கும் - வாதமிடும்
எல்லாப் பொழுதும் இனிக்கும் திருநாளே!
பொல்லா இளமையைப் போற்று!
830.
பொல்லாத காதலிது! பொங்கி எனைவாட்டும்!
இல்லாத கற்பனையை ஏலமிடும்! - நல்லழகாய்
சொல்லாமல் சொக்கவிடும்! தூய கவிபாடி
நில்லாமல் நீந்தும் நிலத்து!
(தொடரும்)
அருமை... அதுவும் 830 மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கற்பனை வானில் கவிபாடிக் நீந்துகிறேன்
நற்றுணை ஆனஎன் நங்கையுடன்! - கற்கின்றோம்
காதல் கமழ்கின்ற காவியத்தை!ஊடலெனும்
மோதல் கலையை மொழிந்து!
தாங்கள் எழுதிடும் பாவெல்லாம் எங்களுக்கு
RépondreSupprimerநல்ல வழிகாட்டியாய் உள்ளது
பதிவுக்கு மனமார்ந்த நன்றி
Supprimerவணக்கம்!
பாட்டெழுதி நீந்துகிறேன்! பாவை அழகுடன்
கூட்டெழுதி நீந்துகிறேன்! கொஞ்சுகிறேன்! - ஏட்டெழுதித்
தந்தகவி அத்தனையும் தங்கக் கருவூலம்!
சந்தக் கவிஞனென் சால்பு!
மின்னலைப்போல் வரிகள் மிரள வைக்கின்றன. நன்றி ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மின்னல் கொடியவள்! மீட்டும் இசையவள்!
கன்னல் கனியவள்! காந்தமவள்! - பின்னல்
கலையவள்! இன்பக் கவியவள்! கோவில்
சிலையவள்! என்றவளைச் செப்பு!
தளம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வளமாயக் கவிதைகளை வார்த்திடவே மின்னும்
தளமாய் அமைத்தேன் தழைத்து!
சொல்ல வார்த்தைகள் இல்லை, அத்தனையும் அழகு...!
RépondreSupprimerஎனக்குப் பிடித்தவை:
//பொல்லாத காதலிது! பொங்கி எனைவாட்டும்!
இல்லாத கற்பனையை ஏலமிடும்! - நல்லழகாய்
சொல்லாமல் சொக்கவிடும்! தூய கவிபாடி
நில்லாமல் நீந்தும் நிலத்து!//