jeudi 2 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 82]




காதல் ஆயிரம் [பகுதி - 82]
 
781.
உன்மடல் இன்றி உலகே வெறுப்பாகும்!
என்னுடல் வாடும்! இறுகும்உயிர்! ! - பொன்மகளே
ஓா்சொல் எழுதுக! உள்ளம் உவந்தெழச்
சீா்சொல் எழுதுக சோ்த்து!

782.
தேனருந்தும் வண்டாகித் தேவியுனைப் பற்றுகிறேன்!
நானருந்தும் போதை நரம்பேற -  மான்மருண்டு
பார்ப்பதுபோல் பார்க்கின்றாய்! பார்கொண்ட இன்பத்தைச்
சோ்ப்பதுபோல் பார்க்கின்றாய் தோ்ந்து!

783.
உன்குரல் கேட்க உயிரலைந்து ஏங்குதடி!
இன்குரல் மாதே! இளையவளே! - பொன்குரல்
சூடிப் பிறந்தவளே! துாய மனத்தவளே!
ஓடி வருவாய் உடன்!

784.
மாலை மயங்கிவரும்மங்கை நினைவுகளைச்
சோலை மணந்துதரும்! சொக்குகிறேன்! - பாலை
நிகா்த்த மலா்மகளே! நெஞ்சத் துயரைத்
தகா்த்த அமுதினைத் தா!

785.
நான்எழுதும் சொல்லெல்லாம் நங்கையுன் பேரழகால்
தேன்எழுதும் சொல்லாகத் தித்திக்கும்! - மீன்எழுதும்
காட்சியைக் கண்கின்றேன்! உன்முகத்தில் அன்பொளிரும்
ஆட்சியைக் காண்கின்றேன் ஆழ்ந்து!  

(தொடரும்)

5 commentaires:

  1. \\உன்குரல் கேட்க உயிரலைந்து ஏங்குதடி!
    இன்குரல் மாதே! இளையவளே! - பொன்குரல்
    சூடிப் பிறந்தவளே! துாய மனத்தவளே!
    ஓடி வருவாய் உடன்!\\

    காதலியின் குரலில்தான் எத்தனை ஈர்ப்பு. மிகவும் ரசித்த வரிகள். காதல் ஆயிரத்தின் வரிகள் யாவும் காதில் தேனூற்றும் வரிகள். பாராட்டுகள் ஐயா.

    RépondreSupprimer
  2. தித்திக்கும் சொற்கள் தான் ஐயா... சந்தேகமே இல்லை...

    வாழ்த்துக்கள் பல...

    RépondreSupprimer
  3. பார்போற்றும் காதல் உங்கள்
    சீர்மேவும் நற்பாவால் மேலும்
    வேரோடி வளங்கண்டு விழுதூன்றி
    தேர்போலே பவனி கொள்ளும்...

    என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. வெண்பா மழையில் இதமாக நனைந்து கொண்டிருக்கிறோம்.

    RépondreSupprimer