mercredi 1 mai 2013

மேதினம்




மேதினி போற்றும் மேதினமே!

ஏடுபுகழ்ந் தேத்துகின்ற ஏற்றமிகு பொன்னாளாம்!
நாடுபுகழ்ப் பாட்டாளி நன்னாளாம்! - வாடி
உழைக்கின்ற மக்களின் ஒப்பற்ற நாளாம்!
தழைக்கின்ற மேதினமே தான்!

ஊதியத்தைக் கூட்டி உரிமையைக் காப்பதற்கு
நாதியற்ற வர்க்கெல்லாம் நற்றினமாம்! - மேதினியில்
பூத்த புகழ்ச்சுடராய்ப் போற்றித் தொழிலாளர்
காத்த திருநாளாம் காண்!

போதிய ஓய்வு! பொழுதெல்லாம் நல்லின்பம்!
நீதியாய் நல்வசதி நேர்ந்ததுவே! - மேதினம்
ஏங்கிக் கிடந்த எளியவர்க்கு நற்பயன்கள்
வாங்கித் தருநாளாம் வாழ்த்து!

ஆயிரத்தெண் ணூற்றெண்பத் தாறாம் வருடம்..பல்
லாயிரம் மக்கள் அகமகிழ்வர்! - தாயென்[று] 
அமெரிக்க நாட்டின் அழகு சிகாகோ
நமக்களித்த திட்டம்'மே' நாள்!

முதலாளி ஆணவத்தை மூலையிலே வீழ்த்தி
மிதவாதப் போக்கை மிதித்து - நிதமும்
உரிமை கிடைக்க உழைப்போர் மகிழப்
பெருமை யளித்த'மே' பேறு!

சுற்றுசெக்கு மாடெனவே துன்புற்ற தோழர்க்கு
வெற்றியுடன் ஓய்வளித்த மேதினமே - கற்றுணர்ந்த
எந்தமத வாதிகட்கும் இங்கெவர்க்கும் இன்றமிழ்போல்
வந்தினிக்கும் பொன்தினமே வா!

22.6.1985

10 commentaires:

  1. மே - தின வரலாறும் உரைத்து
    வரவேற்ற கவிதை மிக அழகு ஐயா ....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மேதினம்! மேன்மை தரும்தினம்! நல்லுழைப்பின்
      மாதினம் என்போம் மகிழ்ந்து!

      Supprimer
  2. உழைப்பாளர் தினத்தன்று மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கத்தை தினந்தோறும் மதித்துக் கொண்டாடுவோம். உழைப்பவரைப் போற்றும் உன்னதக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தொழிலாளா் வாழ்வில் துயரம் அகன்றால்
      எழிலாடும் எங்கும் இனித்து!

      Supprimer
  3. சிறப்பான கவிதை ஐயா...

    தொழிலாளர் தின வாழ்த்துக்கள் என்றுமே...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உழைப்பவா் நாட்டின் முதுகெலும்பு! உண்மை!
      விழைந்தவா் சீரை விளம்பு!

      Supprimer
  4. சுற்றுசெக்கு மாடெனவே துன்புற்ற தோழர்க்கு
    வெற்றியுடன் ஓய்வளித்த மேதினமே - கற்றுணர்ந்த
    எந்தமத வாதிகட்கும் இங்கெவர்க்கும் இன்றமிழ்போல்
    வந்தினிக்கும் பொன்தினமே வா!

    இனியன உரைத்த கவிதை வரிகள் கண்டு
    மகிழ்வுற்றது என் மனமும் இன்று .மிக்க
    நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வோ்வை மணத்தில் வினைந்த..மே! பாடிப்
      போர்வை அளித்தேன் புகழ்ந்து!

      Supprimer

  5. மின்வலை உறவுகளுக்கு வணக்கம்!

    மேதினி போற்றிமகிழ் மேதினத்தை நானிங்குப்
    பாவினில் போற்றிப் பரவுகிறேன்! - நாவினில்
    நற்றேன் சுரந்துாறும்! நல்லுழைப்பின் வெற்றியினை
    உற்றேன் கவியென் உளத்து!

    RépondreSupprimer
  6. மேதினம் பற்றிய கவிதை அருமை.

    RépondreSupprimer