jeudi 9 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 87]




806.
மின்னஞ்சல் கண்டவுடன் மீன்போல் மனம்நீந்தும்!
பொன்னஞ்சல் என்றே புகழ்ந்தேத்தும்! - உன்னஞ்சல்
இல்லாத நாள்கள் இருட்டுலகாய் வாட்டுமெனை!
செல்லாத காசாய்ச் சிதைத்து!

807.
ஒருமுத்தம் தந்தாய்! ஒருகோடி வாழ்நாள்
தரும்முத்தம் என்பேன்! தழைத்த - அரும்முத்த
ஓசையினை எண்ணி உடல்நெகிழும்! வானளவு
ஆசையினை அள்ளி அணைத்து!

808.
மையிட்டு வந்த மலா்க்கிளியே! உன்னுடைய
கையிட்டுத் தந்த சிறுகஞ்சி - தையிட்டுப்
பொங்கும் இனிமை! புலவன் உயிர்குளிர
எங்கும் இனிமை எழுது!

809.
பனைத்தோள் புடைத்தெழும்! பாவலன் உள்ளம்
உனைக்கேள் எனவுருகும்! உண்மை! - எனைவெறுத்து
பொய்யிட்டு வாழ்வதோ? போற்றுமுயா் காதலில்
மெய்யிட்டு வாழ்வோம் மிளிர்ந்து!

810.
மாலை  மயக்கம்  மறுநாள் தொடா்ந்துய்யும்!
ஆலை தறியென ஆசைநெய்யும்! காலை
உதயத்தில்  உன்குரல்  கேட்டிட,  என்றன்
இதயத்தில் ஊறும் இனிப்பு!

(தொடரும்)

11 commentaires:

  1. பொங்கி வரும் காதலை ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொங்கிவரும் வெள்ளமெனப் பாயும்! அவள்அழகு
      மங்கிவரும் வாழ்வை வளமாக்கும்! - தங்கிவரும்
      அன்னவளின் உள்ளத்துள் என்னினிய எண்ணங்கள்!
      பொன்னவளின் சீரைப் பொழிந்து!

      Supprimer
  2. கம்பன் மகன் அம்பிகாபதியின் நினைவு
    தங்கள் கவிதைகளைப் படிக்கையில் வந்து போவதைத்
    தவிர்க்க இயலவில்லை.காதல் கலக்காத நூறை விட
    வேறு ஏதும் கலக்காத அருமையான
    காதல் கவிதைகள் நிச்சயம் மிகக் கடினமே
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல கவிஅம்பி காவும் அமராவும்
      வல்ல கவிபாடி வாழ்ந்ததுபோல் - வெல்லுகவி
      பாடிப் பறக்கின்றேன்! பாட்டரசன் என்றபுகழ்
      சூடிப் பறக்கின்றேன் சொல்லு!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      எந்த மணம்நற் றமிழ்மணம் ஏந்திடுமோ?
      சந்தக் கவிச்சுவை தந்திடுமோ? - சிந்தை
      குடிபுகுந்த கோதை குளிர்மொழிபோல்! காதல்
      அடிபுகுந்த சொற்கள் அமுது!

      Supprimer
  4. பனைத்தோள் புடைத்தெழும்! பாவலன் உள்ளம்
    உனைக்கேள் எனவுருகும்! உண்மை! - /// வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தங்கக் கொடிஅவள்! தந்தப் பொலிவுஅவள்!
      சங்கத் தமிழ்அவள்! தண்ணிலவாய் - இங்கே
      ஒளிர்பவள்! இன்ப உரையவள்! என்னுள்
      வளா்பவள் காதல் வகுத்து!

      Supprimer
  5. Réponses

    1. வணக்கம்!

      அமுதச் சுவைமொழியாள்! அன்பால் மலா்ந்த
      குமுத முகவிழியாள்! கோலத் - தமிழ்போல்
      நிறைந்த இனிமை மனமுடையாள்! நெஞ்சம்
      சிறந்த நெறியுடையாள் சீா்!

      Supprimer

  6. மின்வலை உறவுகளுக்கு வணக்கம்!

    தந்த கருத்தெண்ணிச் சிந்தை குளிர்ந்ததுவே!
    தந்த தனதன தாளமுடன்! - வந்த
    வருகையை வாழ்த்தி வரவேற்றேன்! என்றன்
    இரு..கைகள் ஒன்றாய் இணைத்து!

    RépondreSupprimer