காதல் ஆயிரம் [பகுதி - 85]
796.
சீர்பூத்த
வண்ணம் சிறகடிக்கும் சிந்தனைகள்
கார்பூத்த
வண்ணம் கவிபொழியும்! - பார்போற்ற
நேராக்கும்
என்னை நிலைத்தவுன் பேரழகு!
பேராக்கம்
கொள்ளும் பிசைந்து!
797.
பாடுக
பாவலனே! பாவை உயிர்பிணைந்து
ஆடுக
அன்புளனே! ஆனந்தம் - சூடுக!
தேடுக
தேவியின் தேனருளை! சொக்கி..கண்
மூடுக
இன்பம் முகிழ்த்து!
798.
முகத்திலே
முத்தம் பதிக்காமல் கொஞ்சும்
அகத்திலே
அன்பாய்ப் பதித்தால் - சுகத்தின்
இதத்திலே
சொக்கும் இதயம்! காதல்
பதத்திலே
சொக்கும் பணிந்து!
799.
மையிட்ட
கண்களில் மாயத்தை யிட்டாயோ!
கையிட்டுக்
கட்டாமல் கைதானேன்! - வை..யிட்டுக்
கன்னல்
கவிதைகளை! காதல் கனவுகளை!
இன்னல்
அகற்றும் இவை!
800.
கண்ணிரண்டும்
உள்ளன! காட்சிகள் யில்லையே!
மண்ணிருண்டு
உள்ளதென மெய்மறந்தேன்! - எண்ணமெலாம்
உன்னிடம்
தந்ததனால் உண்மை உரைக்கின்றேன்!
என்னிடம்
ஒன்றும் இலை!
(தொடரும்)
ஐயா... மிக அருமை! ரசித்தேன்.
RépondreSupprimerபணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
வித்தை உங்களிடம் வெகுவாகத் தானுண்டு
சத்தைச் சொல்கிறீர் சற்றும் சளைக்காமல்
கொத்தாகத் தமிழில் கூடிவிளையாடும் பாக்கள்
வித்தாகுமே நம்மனதில் விளையுமே சிறந்து...
த ம.2
சொக்குகிறது மனது... (798)
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...