dimanche 5 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 83]




காதல் ஆயிரம் [பகுதி - 83]
 
786.
ஆளை அசத்தும் அழகே! கவிபாடும்
காளை மனத்தைக் கலக்குகிறாய்! - மாலைவரும்
வேளை கோல விழிப்பெண்ணே! போதையிலே
மூளை முழுகும் உருண்டு!

787.
நிறைந்திருக்கும்  வேலையிலும்  உன்நினைவே  நெஞ்சுள்
மறைந்திருக்கும்மானே! மயிலே! குறைந்திருக்கும்
என்றன் துயரங்கள்! என்றென்றும் வேண்டுமடி
உன்றன் உயிரின் உறவு!

788.
என்மடல்  ஏனோ எனதுயிர் உன்னிடமே!
இன்மடல் தீட்டும் எழிற்கோவே! - பொன்மடல்
என்றன் திருமேனி! ஏந்திப் படித்திட..வா!
என்றும் இனிமை இசைத்து!

789.
தேன்குடிக்கும்  பொன்வண்டே! தேகம் சிலுசிலுக்க
நான்குடிக்கும் நற்சுவையை  என்னென்பேன்?  -  வான்குடிக்கும்  
நீரே மழையாகும்! நெஞ்சம் குடிக்கும்உன்
சீரே கவியாகும் சீா்த்து!

790.
ஏக்கம் நிறைந்ததடி! தூக்கம் தொலைந்ததடி!
தாக்கும் நினைவு தழைக்குதடி! - போக்கிட..வா!
வாக்களித்து நிற்கும் வறியவரைாய்க் காத்துள்ளேன்!
நாக்களித்துக் காதல் நடத்து!
 
(தொடரும்)

6 commentaires:

  1. ஏக்கம் நிறைந்ததடி! தூக்கம் தொலைந்ததடி!
    தாக்கும் நினைவு தழைக்குதடி! - போக்கிட..வா!நாக்களித்துக் காதல் நடத்து!//
    நாக்கிலிலே நவரசமும் உள்ளதை
    பாட்டிலே சொன்னமை நன்று.
    பங்கு கெனக்கும் கிடைக்குமா ?
    பரவசமடைவேன் நானும்
    நுங்கு தின்ற சிறுவன் போல்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எங்கும் அவளுருவம்! எப்பொருளும் எச்செயலும்
      பொங்கும் அவள்நினைவை! பொன்மகளைச் - செங்கவிஞன்
      தங்கு தடையின்றித் தண்டமிழில் தந்துவந்தேன்
      நுங்குக் குளிரை நுவன்று!

      Supprimer
  2. இனிமையான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய கனிவகைகள் எல்லாம் இளைக்கும்!
      கனியக் கொடுத்த கவி..முன்! - பனிப்பொழிவாய்
      நெஞ்சைக் குளிர்விக்கும்! நேரிழையின் பொன்மேனி
      பஞ்சை நினைவிக்கும் பார்!

      Supprimer
  3. ஐயா... என் வணக்கமும் வாழ்த்துக்களும்.!

    இன்னமுதம் எனவே இலகுமிகு சொல்லால்
    மென்னழகாம் தமிழை மிகவாக பாபுனைந்து
    பண்ணெடுத்து பலவித்தை பாட்டில் கூறுமும்புகழ்
    விண்ணதிரக் கேட்கிறதே விந்தையிது விழிக்கின்றேன்.

    த ம.3

    RépondreSupprimer
  4. கவிதை எழுதுவது போதாதென்று கவிதைகளில் பதிலும் அளிக்கிறீர்களே அருமை ஐயா!!

    RépondreSupprimer