vendredi 22 mars 2013

தமிழர் ஒற்றுமை





தமிழர் ஒற்றுமை


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வேநம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே!
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கேது வேண்டும்

சாதிகளால் தமிழர் பிரிந்து நிற்கின்றார். மதங்களால் தமிழர் பிரிந்து வாழ்கின்றார். கட்சிகளால் தமிழர் பிரிந்து செல்கின்றார். ஓர் அணியில் இருந்தும், நானா. நீயா என்று தலைமைக்குச் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் வீழ்த்திடப் பிரிந்து எதிர்கின்றார். எத்தனைப் பிரிவுகள்! எத்தனைச் சரிவுகள்! எத்தனை இழிவுகள்!....

தானே தலைவன்! தானே தொண்டன்! வீட்டுக்கோர் சங்கம்! தன் வீட்டு உறவுகளே செயற்குழு உறுப்பினர்கள். அடிமைத்தமிழன் காணும் மிடிமை வாழ்வு இதுதான்! இழிவை எண்ணாமல், அழிவை நோக்காமல் விரைந்து நடைபோடுகிறான். தன்னலம் பேணி, இனத்தின் பொன்னலத்தைப், புகழ்நலத்தைக், குழிதோண்டிப் புதைப்பதே முதல் வேலை! தற்பெருமை  பேசும் தமிழன் இடத்தில் ஒற்றுமைக்கு இடம் உண்டோ?

சேர சோழ பாண்டியர் மூவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திருந்தால், பகைவரின் கால்கள் தமிழ்மண்ணில் பட்டிருக்குமா? இமயத்தில் பறந்த வில், புலி, கயல் கொடிகள் வீழ்ந்திருக்குமா? ஒற்றுமையின்றி அன்று இறங்கிய தமிழ்க்கொடிகள் இன்றுவரை ஆட்சியைக் பிடிக்கவில்லை.

தமிழுக்கும் தமிழருக்கும் பகை வெளியே உள்ளதா? உள்ளே உள்ளதா? வீரபாண்டியனின் வரலாற்றில் எட்டப்பன், ஈழப்போரில் கருணா! உள்ளிருந்து கொல்லும் நோய்போல் உடனிருந்து, உண்டு, உறவாடிக் காத்திருக்கும் பகைவன்! தமிழனுக்குத் தமிழனே பகைவன்!
தமிழன் தமிழனை அழிக்கின்றான்! தமிழ்ப்பகைவர்களின் கை கால்களைப் பிடித்து வாழ்கின்றான்

தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை
தலைமீது சுமக்கின்றான்
அடிமையெனும் சொல்லை!
தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன்போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

தன்னினம் அழிவதைப் பாhத்து ஏன்? என்ன? என்ற ஒரு கேள்விகூட எழுப்பாமல் தன்னலம் பேணும் தமிழா? உன்னலம் ஒருநாள் பறிக்கப்படும் என்பதை மறந்துவிடாதே? உலகத்தில் எந்த முலையில் தமிழன் ஒருவைனைப் பகைவன் அடிக்கிறான் என்றால், உலகில் வாழும் தமிழர் அனைவருக்கும் அந்த வலி தெரியவேண்டும். உன் உறவு என்ற உணர்வு வரவேண்டும்! தமிழன் என்ற பற்று வரவேண்டும். ஒவ்வொரு தமிழனுக்கம் இனத்தின் மீதும் மொழிமீதும் வெறி வரவேண்டும். தமிழன் அடிப்பட்டு வீழ்வதைப் பார்த்து யாரோ அடிப்படுகிறார் நமக்கென்ன? நம்வாழ்வைப் பார்ப்போம் என்று சொன்றால், நாளை உனக்கும் அதே நிலைதான் என்பதை நன்றாக உணர்ந்துகொள்!

முதல் வகுப்புப் பாடநூலில் படக்கதையாக வரும் நான்கு மாடுகளின் கதை. நான்கு மாடுகளும் ஒற்றுமையாக இருக்கும்பொழுது, வரும் பகையை எதிர்த்துநின்று வெல்லுகின்றன. பின் நரியின் சூழ்ச்சியால் நான்கு மாடுகளும் பிரிந்து இருக்கும்பொழுது பகைக்கு இறையாகின்றன. முதல் வகுப்பில் படித்தோம். வாழ்வு முடியும் வரை ஒருநாள்கூட நினைத்தோம் இல்லை.

வலையில் மாட்டிக்கொண்ட புறாக்கள், ஒற்றுமையாக இணைந்து வலையோடு பறந்த கதையும், பகையிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கும் பறவைகளின் உணர்வும், காட்டில் தன் கன்றைக் காக்கப் பகையை எதிர்த்து நிற்கும் தாய்ப்பசுவும், பறவையிடம், விலங்கிடம் உள்ள உணர்வுகூட உன்னிடம் இல்லாமல் போனதேன் தமிழா? இப்படியே தன்னலத்தில் மயங்கி வாழ்ந்தால், தமிழன் என்ற இனம் தரணியிலே தழைத்திருந்த வரலாறு இல்லாமல் அழிந்துவிடும். உறங்கியது போதும்! விழித்தெழு! உறவுகளுக்குக் கைகொடுத்து உயர்த்திவிடு! ஒன்றுபடு! இழந்த வாழ்வை வென்றெடு!

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'  என்ற வள்ளுவரின் குறளை வாழ்க்கை நெறியாக்கிச், சாதிப்போர்வையைத் தீயிட்டெரிப்பாய்! ஒரே சாதி! 'தமிழ்ச்சாதி', 'தமிழ் எங்கள் உயிர்' என்ற ஒரே குரல், பன்னிரண்டு கோடித் தமிழர்களின் மந்திரமாக ஒலிக்கவேண்டும்.

'இறைவன் ஒருவனே'  அனைத்து மதங்களும் அவன் ஒருவனையே காட்டுகின்றன. மனித சமுதாயம் வாழும் நிலத்திற்கேற்ப, கால நிலைக்கேற்ப, பேசும் மொழிக்கேற்ப, விளையும் பொருளுக்கேற்ப பற்பல பெயர்களை இறைவனுக்கு ஈட்டு அழைக்கிறது. அல்லா, யேசு, புத்தன், ஈசன், மாயோன் பெயர்கள் பல! இருப்பது ஒன்றே!

மதங்கள், மனித சமுதாயத்தை மாண்புறச் செய்யத் தோன்றின, உலகில் தோன்றிய மதங்கள் எந்த நெறிகளைத் தலைசூடி வளர்க்கத் தோன்றியதோ, அந்த நெறிகளை மறந்து எதிர்நிலையில் இயங்குகின்றன. மதம் என்பது உருவத்தின் அடையாளம்! மனம் என்பது மனிதத்தின் அடையாளம்! மதத்தால் பிரிந்து நிற்கும் தமிழன் தமிழ்மனத்தால் ஒன்று சேர்க! திருக்குறளைத் தமிழர் மறையாகப் போற்றுக!

சாதி மதமெனம் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!

உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தனின் கவிதை வரியை உரைத்து என்னுரையை நிறைவுசெய்கின்றேன்.

5 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    தமிழர் ஒற்றுமையை நிலை நாட்டவேண்டிய அவசியம் அவசரம்பற்றி அழகான பதிவு தந்தீர்கள்.

    அருமையான குறுங்கதைப் பகிர்வுகளும் சமயோசிதமாக காலத்தின் தேவைக்கேற்ப விரைவாகவும் செயபடல்வேண்டுமெனவும் நல்ல எடுத்துக்காட்டுகள் தந்து கூறியுள்ளீர்கள்.அருமை.

    ஈற்றில் காசி ஆனந்தன் ஐயாவின் கவிவரி மனதில் நிலைத்தது. ஒற்றுமையே பலம். தமிழரின் விடுதலைக்காய் ஒற்றுமையாய் ஓங்கிக் குரல் கொடுப்போம்.
    காலத்திற்கு வேண்டிய நல்ல பதிவு. சிறப்பு.

    ”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
    தனித்தமிழ் தாயகம்.”

    RépondreSupprimer
  2. இனிய தமிழ் உறவுகளே!
    தமிழரில் ஒற்றுமை நீங்கியதால் தமிழினமே தாழ்வடைந்ததை மறப்பீரா?
    வாருங்கள் தமிழ் உறவுகளே!
    கவிஞா் கி. பாரதிதாசன் அவர்கள் தொட்டுக்காட்டியதைப் பின்பற்றுவோம்.

    RépondreSupprimer
  3. ஐயா! ஒற்றுமையை வலியுறுத்தி தாங்கள் எழுதியுள்ள இப் பதிவு தமிழர் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளாகும்! எக்காலத்திலும் பின்பற்றப் படவேண்டியவை ஆகும்! நன்றி!

    RépondreSupprimer
  4. ஒவ்வொன்றும் சிறப்பான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்... ஒன்றுபடுவோம்...

    RépondreSupprimer
  5. இந்த பதிவை மீள் பதிவாக அடிக்கடி வெளியிடுங்கள். நமக்குள் அப்போதாவது ஒற்றுமை ஏற்படட்டும்!

    RépondreSupprimer