dimanche 3 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 41]






காதல் ஆயிரம் [பகுதி - 41]


401.
நானூறு பாட்டென்ன? நானூறும் பேரழகே!
தேனூறும் தீங்கனியே! தென்னவளே! - ஊணுயிரே!
மீனூரும் கண்ணழகில் வானூரும் கற்பனைகள்
தானூறும் தங்கத் தமிழ்!

402.
ஒருநாள் முழுவதும் உன்னுடன் கூடித்
திருநாள் பொழுதாய்த் திளைக்க! - வருநாள்
பெருநாள் எனவெண்ணிப் பேரின்பத் தோடே
அருநாள் எனயெண்ணி ஆடு!

403.
ஆங்கில முத்தத்தில் ஆழ்ந்தாய்! அமிழ்தூற
வாங்கிநீ சென்றாய் வகையாக! - தீங்கின்றி
வீங்கிய மென்னிதழில் வித்திட்ட இன்வலியைத்
தாங்கி மகிழ்ந்தேன் தனித்து!

404.
ஊக்கம் கொடுக்கும் ஒருமுத்தம் போதாதோ? 
தேக்கம் தெளிந்து செயற்படவே! - பூக்கின்ற
ஆக்கம் அமுதூற ஆருயிரே என்துயரைப்
போக்கும் வழியைப் புகல்!

405.
தருங்கவிதை நாளும் தனிமையில் பார்த்து
வருஞ்சுவையை என்னென வாழ்த்த - விரும்பும்
அருங்கவியாய் வந்த தமிழழகி! என்னுள்
பெருங்கடலாம் இன்பம் பெருக்கு!

406.
அன்புடை நெஞ்சத்திள் ஆசைகள் போர்தொடுத்து
வன்படை கொண்டு வழிநடத்த! - என்னுடை
மென்னிடை பின்னி விளைத்திடும் இன்பத்தை
உன்னடைப் பாட்டில் உணர்த்து!

407.
நாளை விடுமுறை! நல்ல கவிபாடும்
காளை அவனைக் கலந்திடவே - வேளையுடன்
சோலை மரத்தருகே சூடேற்ற வாவாவென்று
ஓலை வடித்தேன் ஒளிந்து!

408.
அலைபேசி தந்த அமுத மொழிகள்
கலைபேசி இன்கவி பேசி - மலரும்!
சிலைபேசும் பெண்ணழகே! சின்னவிழி மின்கள்
வலைவீசும் என்னை வளைத்து!

409.
பாவாடை கட்டிய!வெண் பாலாடைக் குட்டி!இன்
பூவாடை கூட்டிப் புலவனுக்குத் - தேவாரப்
பாஆடை தந்தாள்! பசியேற்றி மஞ்சத்துள்
மாவாடை தந்தாள் மலர்ந்து!

410.
மானோடை தேடும்! மயிலாடக் கண்மின்னும்!
வானோடை வந்து மதிநீந்தும்! - வீணாக
ஏனாடை என்றுயிர் எண்ணும்! பசிதீர்க்கும்
தேனோடை ஒன்று திரண்டு!

(தொடரும்)

7 commentaires:

  1. ரசிக்க வைக்கும் வாடைகள் ஐயா...

    RépondreSupprimer
  2. வருங்கால சந்ததிக்கு காதல் செய்ய நேரமிருக்காது என்பதால் எல்லாருக்காகவும் நீங்களே காதல் காதல் என எழுதி வந்து காதல் சேவை செய்வது அருமை பாராட்டுக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பிறக்கும் பிறவிகளில் பெண்ணவளைப் பாடிச்
      சிறக்கும் கவியாய்ச் செழிப்பேன்! - மறக்குமா
      நெஞ்சம் அவளழகை! நித்தம் நிலைத்தென்னுள்
      கொஞ்சும் அவளழகைக் கோர்த்து!

      Supprimer
  3. வணக்கம் ஐயா¨!

    தருங்கவிதை நாளும் தனிமையில் பார்த்து
    வருஞ்சுவையை என்னென வாழ்த்த - விரும்பும்
    அருங்கவியாய் வந்த தமிழழகி! என்னுள்
    பெருங்கடலாம் இன்பம் பெருக்கு!

    அருமை ! வாழ்த்துக்கள் ஐயா மேலும்
    கவி தரும் இன்பம் பெருகட்டும் ......

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பம் பெருக்கெடுக்கும்! இன்றமிழ்ப் பா..வகைகள்
      என்முன் அணிவகுக்கும் என்னென்பேன்? - பொன்னழகுப்
      போதை நிலைத்திருக்கும்! பூங்கொடியாள் வந்தாடும்
      பாதை பனபளக்கும் பார்!

      Supprimer
  4. உள்ளத்தின் ஏக்கமதை உணர்த்த உருகிச்சொல்லிணைத்து
    கள்ளமில்லா நல்மனத்தொடு கவிநன்றாய்தான் தொடுத்தீர்
    வெள்ளைக்கார முத்தந்தந்த விண்ணகத்து தேவதையும் உம்
    பிள்ளைத்தமிழ் கேட்டிங்கு பின்தொடர்ந்திவாளே...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெண்ணவளைப் பின்தொடா்ந்து பெற்ற இனிமையெலாம்
      விண்ணளவைத் தாண்டி விரிந்திடுமே! - பண்..அவளைச்
      சூடிச் சுடா்ந்தொளிரும்! கோடி மலா்ச்சரங்கள்
      கூடிப் படா்ந்தொளிரும் கோர்த்து!

      Supprimer