samedi 9 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 47]





காதல் ஆயிரம் [பகுதி - 47]

461.
கற்கள் தவமெனக் காலடியைக் கண்டனவே!
சொற்கள் குவிந்தென்முன் சொக்கினவே! - பொற்சிலையே!
நற்..கள் தரும்சுவையாய்க் கற்பனைகள் நாடிவரப்
புற்கள் அரித்தனவே போந்து!

462.
வருவாய் எனநான் மகிழ்ந்திருந்தேன்! இன்பம்
தருவாய் எனநான் தவித்தேன்! - கரும்பே!
திருவாய் மலர்ந்தே ஒருவாய் கொடுத்தால்
கருவாய் வளரும் கவி!

463.
உன்னை நினைத்திரவில் உள்ளம் உருகுதடி!
பொன்னை நிகர்த்தவளே! பூந்தமிழே! - என்னுயிரே!
மண்ணைச் சுகமியக்க மங்கை எனையியக்கக்
கண்ணை இயக்கும் கனவு!

464.
அப்படிப் பார்க்கதே! என்றன் அகப்பெயர்வை
எப்படி நானிங்(கு) எழுதுவேன்! - இப்புவியில்
எப்பொடி சேர்த்தான் இறைவன் உனைப்படைக்க!
ஒப்புமை யில்லா உரு!

465.
என்விழிகள் என்றும் ஒளிர்ந்திடுமே! உன்மனத்துள்
என்மொழிகள் என்றும் இனித்திடுமே! - என்னவளே!
என்வழிகள் உன்னால் செழித்திடுமே! நற்காதல்
பொன்மொழிகள் பூக்கும் பொலிந்து!

466.
சொல்லாறு பாயுதடி! சொக்கும் மனநிலையை
நல்லாறு பாக்கள் நவிலுமடி! - செல்லமே
தள்ளாடும் போதையினைத் தந்தவளே! என்னுள்ளே
எள்ளாட உண்டோ இடம்?

467.
சொல்லடா கண்சொருகும் பாட்டொன்று! நான்ஏங்க
நில்லடா என்மலர் நெஞ்சினிலே! - வெல்லடா!
மெல்லடா பூமேனி! மேலும் எனைவாட்ட
இல்லடா என்னுள் இடம்!

468.
வாய்வலிக்கும்! வல்லவன் கவ்விக் கடித்திட்ட
காயினிக்கும்! காதற் கவிபிறக்கும்! - நோய்பறக்கும்!
சேய்சிரிக்கும் வண்ணம் செயல்விளைக்கும்! நாள்முழுதும்
பாய்விரிக்கும் ஆசை படர்ந்து!

469
நான்சொல்லும் வண்ணம் நடந்திடுவாள்! எந்நாளும்
தேன்சொல்லும் வண்ணம் சுவைதருவாள்! - மேன்மைமிகு
மான்சொல்லும் வண்ணம் மருண்டிடுவாள்! மண்ணிலவாம்
வான்சொல்லும் வண்ணம் வடிவு!

470.
கெஞ்சிடக் கெஞ்சிட மிஞ்சிடுவாள்! மஞ்சத்தில்
கொஞ்சிடக் கொஞ்சிடக் கூத்திடுவாள்! - நெஞ்சுருக
விஞ்சிட விஞ்சிட வேண்டி விருந்திடுவாள்!
வஞ்சியே என்வள வாழ்வு!

(தொடரும்)

6 commentaires:

  1. வண்ண வண்ண வரிகள் ஐயா... ரசித்தேன்....

    RépondreSupprimer
  2. ///உன்னை நினைத்திரவில் உள்ளம் உருகுதடி!/// அழகிய கவிதைகள்.

    RépondreSupprimer
  3. என்விழிகள் என்றும் ஒளிர்ந்திடுமே! உன்மனத்துள்
    என்மொழிகள் என்றும் இனித்திடுமே! - என்னவளே!
    என்வழிகள் உன்னால் செழித்திடுமே! நற்காதல்
    பொன்மொழிகள் பூக்கும் பொலிந்து!

    இனிமை அருமை தேன் சிந்தும் கவிதை வரிகள்!...
    தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  4. மனதில் மகிழ்ச்சி மிஞ்சி நிற்கும் வரிகள் நன்றி ஐயா.

    RépondreSupprimer
  5. ஐயா... வியக்கவைக்கும் சொற்கள், வரிகள்.
    அத்தனையும் அற்புதம். வாழ்த்துகிறேன்!

    நல்ல தமிழ்ச் சொல்லாலே
    மெல்லனபாயும் கவிதந்து
    செல்லமாய்க் கொஞ்சும் உங்கள்
    வல்லமை விளம்பலேலாதையா...

    RépondreSupprimer
  6. கவிதையில் ஒரு காப்பியமே உங்கள் காதல் ஆயிரம் காதலின் கூடலில் வஞ்சியின் வாழ்வே கவிதையாக காத்திருந்து பகிர்ந்தீர்கள் தொடருங்கள் ஐயா!

    RépondreSupprimer