காதல் ஆயிரம் [பகுதி - 40]
391.
பாக்கள் அனைத்தும் பலாச்சுளையாம்! கற்கண்டாம்!
பூக்கள் தரும்மதுவாம்! தேன்பொழிவாம்!
- ஈக்களென
எண்ணங்கள் உன்னெழிலை எண்ணிச் சுவைத்திட
வண்ணங்கள் மின்னும் வளர்ந்து!
392.
அன்பே! அருந்தமிழே! உன்னழகுக் காவியத்தை
இன்தேன் குழைத்தே எழுதுகிறேன்! - என்னே
பெருகிவரும் கற்பனைகள்! பேணிவரும் சொற்கள்!
உருகிவரும் என்றன் உயிர்!
393.
பொன்னவள்! பூங்கவிதைப் பெண்ணவள்! மின்னிடும்
சின்னவள்! சிந்தனைச் செல்வியவள்! - என்றெண்ணி
என்னவளுக் காட்பட்டேன்! ஏமாற்றும் வன்கலையுள்
அன்னவளுக் கில்லை அலுப்பு!
394
கண்டாய் இனிக்கின்ற காரிகையே! காலமெல்லாம்
வண்டாய் உனைச்சுற்றி வாழ்கின்றேன் - மென்வாழைத்
தண்டாய் மிளிர்பவளே! தாமரையே! என்மனத்தைத்
துண்டாய் உடைப்பதே னோ?
395.
பாட்டொன்று கேட்டாய்! பசுந்தமிழ்ப் பாவையுன்
கூட்டொன்று சேர்ந்தால் கவிகொழிக்கும்!
- மாட்டேன்று
சென்றபின் சிந்தனை சிந்திச் சிதறுதடி!
குன்றுமென் உள்ளம் குடித்து!
396.
ஆடினாள்! பாடினாள்! அத்தான் எனவுயிர்
கூடினாள்! இன்னமுதைச் சூடினாள்! - மாடியிலே
கோடிநாள் தந்ததெனக் கொஞ்சினாள்! பின்மறந்து
ஓடினாள் என்னை ஒடித்து!
397.
பூட்டொன்று போட்டுப் பொருளைப் புதைப்பதுபோல்
காட்டொன்று காட்டிக் கவிஞனெனை - வாட்டுவதேன்?
பாட்டொன்று பாடிப் பறந்திடலாம்! வா!கண்ணே!
கூட்டொன்று கொள்வோம் குளிர்ந்து!
398.
நொடியுறக்கம் இன்றி நுடங்குதடி நெஞ்சம்!
பிடியிரக்கம் காட்டுப் பிழைப்பேன்! - நடித்துக்
குடியிறக்கம் செய்யும் குறுவிழிகள்! பாட
அடிசிறக்கும் தேனை அளித்து!
399.
என்னுள் அமர்ந்தே இயக்கும் இளையவளைப்
பொன்னுள் பதித்தே புனைகின்றேன்! - நன்றே
சுவைத்தே தொடுக்கும் சுடர்கவிகள் யாவும்
சுவை..தேன்! சுவைத்தேன் தொடர்ந்து!
400.
அன்பே நலமா? அடியவன் நெஞ்சத்துள்
துன்பே பெருகித் துளைக்குதடி! - - உன்பேர்
உரைத்தே உயிர்துடிக்கும்! உண்மை உணர்ந்து
மரைத்தேன் அளிப்பாய் மலர்ந்து!
(தொடரும்)
தேனுண்ட வண்டாக
RépondreSupprimerமயங்கிப் போனேன் ஐயா..
உங்கள் கவி கண்டு...
Supprimerவணக்கம்!
வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி
பாக்கள் அனைத்தும் பலாச் சுளைதான்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி
இனிமையான ஏமாற்றத்தையும் ரசித்தேன்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி
ஐயா... சோகம், ஏமாற்றம் இவையிலும் தமிழின் சுவையுண்டென அருமையாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவான்மழை பொய்த்திட்ட வாடிய பயிரோ
தேன் தமிழில் யாத்திட்ட உம்கவிதைதானின்று
கோன் இல்லாக் குடிகளென கோலங்காட்டி எம்
ஊனினையும் உருக்குகிறதே உள்ளிருந்து...
Supprimerவணக்கம்!
வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி