காதல் ஆயிரம் [பகுதி - 45]
441.
தேமா புளிமா திகட்டாச் செழுந்தமிழ்போல்
ஆமா அருந்சுவை நீயென்பான்! - ஊமையாய்க்
கோமா நிலைக்குக் குமரிநான் சென்றிடவே
மாமன் குடிப்பான் மது!
442.
தூய ஒளிச்சுடரோ! தூண்டா மணிவிளக்கோ!
மாய மொழிபேசும் மல்லிகையோ! - நேயமுடன்
ஆய கலைகள் அளிக்கும் அருள்வடிவோ!
தாயம் விழுந்ததுபோல் தாங்கு!
443.
பாயும் நதியெனப் பாவையின் உள்ளத்துள்
தோயும் சுவையுணர்வை என்சொல்ல? - நீயந்த
மேயன் உறவோ? இனிதே விளையாடும்
நேயன் உறவோ நிலத்து!
444.
எத்தனை சென்மம் எடுத்தாலும் நீயிருந்தால்
அத்தனை சென்மமும் ஆனந்தம் - தித்திக்கும்
முக்கனியே! முல்லை மலர்க்காடே! முத்தமிழே!
எக்கணமும் எனனுள் இரு!
445.
காதல் திருநாள்! கனிக்குவியல்! தேன்கடன்!
ஈதல் பெருவிழா! இன்கவிதை! - மோதல்
விழிகளின் வெற்றிப் பெருக்கு! மனத்துள்
அழிவிலா தோங்கும் அது!
446.
காதலே வாழ்க! கவிதை மழைபொழியும்
ஆதலால் வாழ்க! அருண்மொழியே! - மாதவன்
மார்பில் மலர்மகள் வாழ்வதைப்போல் என்னுயிர்க்குள்
கூர்வேல் விழிகளின் கூடு!
447.
காதலே வாழ்க! கடும்கொடிய சாதியாம்
மோதல் வெறியடங்கி முற்றெய்தும்! - மாதுளச்
செம்மணிகள் முற்றிச் சிவப்பதுபோல் சிந்தனைச்
செம்மணிகள் சேர்க்கும் சிரிப்பு!
448.
காதலே வாழ்க! கனிந்த கவியமுதை
பூதலம் உண்டு பொலிந்திடவே - கோதலர்ந்த
வண்ணங்கள் வாடும்! வளர்வஞ்சி பொன்னழகில்
எண்ணங்கள் வாடும் எழுந்து!
449.
காதலே வாழ்க! வருங்காலம் அன்பருளை
ஓதி உணர்ந்திங்கு உவந்திடவே - பாதி..நீ
மீதிநான்! என்றே விருந்தூட்டி இன்பமுறும்
சாதிநாம் என்று..நீ சாற்று!
450.
காதலே வாழ்க! கணக்காய்ப் பிரித்தாண்டு
தூதிடும் வன்மதம் தூள்பட - மாதிடம்
யாவும் மணம்வீசும்! ஈடிலா இன்கவிபோல்
நாவும் மணம்வீசும் நன்கு!
(தொடரும்)
இறுதிவரை இனித்திடவே
RépondreSupprimerஉறுதியாகக் கவிபாடும்
அருமை நண்பரின்
அருவியான காதல்
கவிதை நன்று
Supprimerவணக்கம்!
இறுதிவரை என்னுள் இருப்பவளை எண்ணி
உறுதியுடன் ஓங்கிவரும் பாக்கள்! - பறக்கும்
குருவியென நெஞ்சம் குதித்தாடும்! பொங்கும்
அருவியெனக் காதல் அலை!
மாதுரம்பழம்போல்-
RépondreSupprimerஅடுக்கிடீங்க அய்யா....!
வரிகளை...!
Supprimerவணக்கம்!
மதுரம் அளிக்கின்ற மங்கை!இன் முத்தப்
பதிகம் படைக்கின்ற பாவை! - அதிரசப்
பாக்கள் படைக்கின்ற பைங்கிளி! என்எண்ண
ஈக்கள் எடுக்கின்ற தேன்
முக்கனியும்! முல்லை மலர்க்காடும்! முத்தமிழும்!
RépondreSupprimerஎக்கணமும் உம்முள் இருக்கும்!
Supprimerவணக்கம்!
என்னுள் இருக்கும் இணையிலா ஆற்றலினைப்
பொன்னுள் பதித்துப் புகழ்கொடுத்தாள்! - என்னவள்
உற்ற வடிவழகை முற்றும் சுவைத்துநான்
கற்றேன் கவிதைக் கலை!
காதலே வாழ்க... அனைத்தும் வாழ்க...
RépondreSupprimerஐயா.. உங்கள் கவிகளில் நல்ல பல சொற்பிரயோகங்களை காண்கின்றேன். அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerகாதலை வாழ்த்திக் கவிமணம்தான் பரப்பி
ஓதல் நன்றென்று இன்தமிழை நல்கவியால் எமக்கு
ஈதல்செய்யுமும் இடையறாத பணி கண்டு எங்குமினி
போதல் தேவையில்லையென்றே ஆயினோமே.
RépondreSupprimerவணக்கம்!
நாளும் வருகைதரும் நண்பா்களே! உம்மனத்துள்
மூளும் கருத்தை மொழிகின்றீா்! - தேளெனக்
கொட்டும் அவள்விழிமேல் கட்டும் கவிமலா்கள்
சொட்டும் அமுதைச் சுரந்து!
காதல் ஆயிரம் படித்ததும் உதித்த வெண்பா:
RépondreSupprimerஇளமை திரும்ப இதயம் நிரம்ப
வளமாய் கவிகள் வழிந்து - குளமாய்
பெருகிக் கிடக்க , பருகிப் பருகி
உருகித் தொலைக்கும் உளம்
காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்
RépondreSupprimerஎன மனதில் இன்பம் பொங்க தினமும்
வடிக்கும் காதல் கவிதை வரிகள் ஒவ்வொன்றும்
அருமை அருமை அருமை ஐயா !.......வாழ்த்துக்கள்.