samedi 16 mars 2013

உள்ளம் பெருங்கோயில்




உள்ளம் பெருங்கோயில்

ஆரியப் பெண்ணவள்!
ஆனால்
கூரிய விழிகளில்
இரண்டு மீன்களை
வைத்திருக்கிறாள்!

சுத்த சைவம் அவள்
ஆனால்
என் உயிரை உண்ணுகிறாள்!

சாதியைக் கடந்து
நீதியைப் பேசுகிறாள் - காதல்
சோதியை ஏற்றுகிறாள்!

மந்திரம் இன்றி!
தந்திரம் இன்றி!
என்னை மயக்குகிறாள்!

கலைமகள்!
மலைமகள்!
அலைமகள்!
யாரை அவளுக்கு
இணையாய் உரைப்பேன்!

கற்பூர வாசத்தை
அவளின்
கவிதைகள் வீசுகின்றன!

வேத வியாக்கியானம்
பாசுரப் படிகள்
பக்தி உரைகள்
அனைத்தையும் மிஞ்சும்
அவளின் அழகின் விளக்கம்!

அவளின்
புன்னகைப் பூக்கள்
பொழியும்
இன்வகைப் பாக்கள்!

சொர்க்கத்தை
அவள் படைக்கின்றாள்!

அவளோர் தேவதை
தென்றலாய்
என்னைத் தீண்டுகிறாள்!
எங்கோ இருந்து
இன்பத்தைத் தூண்டுகிறாள்!

குங்குமப் பொட்டு
கொள்ளை அழகு!
என்னை
கொள்ளையுறும் அழகு!

அவள்
விழிகளின் சாலம்
விழாக்களின் கோலம்!

தங்கக் கோபுரங்கள்
அங்கம் புகுந்தனவோ?

தேர்போல் வருகிறாள்!
செந்தமிழ் பாட
சீர்பல தருகிறாள்!

ஆண்டவன் போன்றே
அவளிடமும் உள்ளன
வில்படை! வேல்படை!

அவள் அழகில்
ஆழ்வதால்
அவள் அழகைப்
பாடுவதால்
நானும் ஆழ்வார்!

நாளும்
என் இதயத்தில்
அவளுக்கு நடக்கிறது
இன்ப உற்சவம்!

என் நெஞ்சமே
அவள் வாழும் கோயில்!

2 commentaires:

  1. பாவலரையா...
    அழகிய, அற்புதமான, மயங்கவைக்கும் கவிதை!
    கவிபுனைவது கைவந்த கலைதான் உங்களுக்கு!
    வெண்பாக்கள் என்றில்லாமல் புதுக்கவிதை வடிவுதாங்கியும் அருமை! வாழ்த்துக்கள்!!

    ஆண்டவளைப் பாடியதால் ஆழ்வாரென காதல்
    பூண்டவளைப் பாடுகின்றீர் போற்றுகின்றீர்
    மாண்புதரும் மாதோ தமிழணங்கோ மறுபேச்சில்லாமல்
    காண்பதுதானே கவிகளில் கலந்துமே...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதந்து நல்ல கருத்தெழுதி
      மூளும் கவிக்கு முடியணிந்தீா்! - தோளும்
      புடைத்தே உயரும்! புகழ்த்தமிழின் சீரைப்
      படைத்தே உயரும் பணிந்து!

      Supprimer