காதல் ஆயிரம் [பகுதி - 50]
491
மாலைவரும் மச்சான் நினைவினில் என்னுள்ளம்
சோலைவரும் வண்டாகச் சொக்குதடா! - சேலைதொடும்
வேலைவரும்! காதல் விளைந்துவரும்! பின்னந்தக்
காலைவரும்! கண்ணில் கசந்து!
492.
மெழுகால் வடித்த மிளிர்மேனி! நெஞ்சைப்
பொழுதெலாம் போட்டுப் புரட்டும்! - அழகே!
தொழுவும் செயலைத் துரத்திடுக! என்னைத்
தழுவும் செயலைத் தரித்து!
493.
காலைவரை கண்ணின் கதவுகள் மூடாமல்
மூளைவரை மோகம் முளைக்குதடி! - கோலமுற
சோலைவரை நான்வந்து சொக்கிக் கிடக்கின்றேன்
மாலைவரை காண்போம் மகிழ்வு!
494.
அந்தவழி போகும் பொழுதெல்லாம் அன்றின்பம்
தந்தவழி என்னுள்ளம் சந்தமிடும்! - செந்தமிழ்
வந்தவழி வந்தவளே! விந்தைவிழி கொண்டவளே!
நிந்தைவழி அத்தனையும் நீக்கு!
495.
செல்லமே என்றுருகும்! சீர்தரும் செந்தமிழ்
இல்லமே என்றுருகும்! இன்பெய்தும்! - நல்லமுத
வெள்ளமே என்றுருகும்! காதல் விளைந்தாடும்
உள்ளமே என்றுருகும் ஓர்ந்து!
496.
செல்லமே! செந்தமிழ்ச் செல்வமே! பொற்கயல்
துள்ளுமே! நற்கவிதை சொல்லுமே! - உள்ளத்தை
அள்ளுமே! பேரழகு கொல்லுமே! ஆசையெனும்
வெள்ளமே பாயும் விரைந்து!
497.
செல்லக் கிளியே! சிரித்தாடும் செம்பகமே!
வல்ல கவியெனை வாட்டுவதேன்? - மல்லிகையே!
மெல்ல நடைநடந்து உள்ளம் புகுந்தவளே!
அல்லல் முழுதும் அகற்று!
498.
கண்வண்ணம் கண்டேன்! கவிவண்ணம் கண்டேன்!உன்
பண்வண்ணம் கண்டேன்! பசுங்கொடியே! - தண்டமிழே!
பொன்வண்ணம் கண்டேன்! முழுவண்ணம் நான்கண்டால்
என்வண்ணம் ஆவேன் எழுது!
499.
முகங்கண்டேன்! முத்து நகைகண்டேன்! வண்ண
நகங்கண்டேன்! அன்னநடை கண்டேன்! - நிகரில்
அகங்கண்டேன்! மின்னும் அணிகண்டேன்! எண்ணிச்
சுகங்கண்டேன் நாளும் சுவைத்து!
500.
மலர்கண்டேன்! இன்ப மணங்கண்டேன்! வாழ்வில்
வளங்கண்டேன்! வல்லதிறங் கண்டேன்! - நலம்சேர்
குலங்கண்டேன்! கோலமுடன் காதல் செழிக்கும்
களம்கண்டேன் நாளும் களித்து!
(தொடரும்)
வண்ணம் படைத்த வரிகளை மிகவும் ரசித்தேன் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சின்ன இடையசையச் சிந்தனைகள் கோடிவரும்!
கன்னல் கனிதரும் கன்னங்கள் - என்னவளின்
வண்ண வடிவழகை உண்ணும் மனத்துள்ளே!
நண்ணும் கவிதை நலம்!
அருமையான கவிதைகள் அய்யா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அருமைக் கவிகளை அள்ளி அளிக்கும்
பெருமை படைத்திட்ட பெண்ணை! - உருகி..நான்
தீட்டும் எழுத்துக்கள்! சிந்தனையில் செந்தேனை
ஊட்டும் எழுத்துக்கள! ஓது!
செல்லமே! செந்தமிழ்ச் செல்வமே! பொற்கயல்
RépondreSupprimerதுள்ளுமே! நற்கவிதை சொல்லுமே! - உள்ளத்தை
அள்ளுமே! பேரழகு கொல்லுமே! ஆசையெனும்
வெள்ளமே பாயும் விரைந்து!///அற்புதம்
Supprimerவணக்கம்!
கற்பனை மின்னும்! கவிபாடச் சொற்களின்
நற்றுணை மின்னும்! நலம்மின்னும்! - பற்பல
அற்புதம் மின்னும் அழகுடையாள்! அன்னவளின்
பொற்பதம் மின்னும் பொலிந்து!
அருங்கவியாக்கும் பெருங்கவியே! நீங்களிங்கு
RépondreSupprimerதரும்வெண்பாக்கள் தேன்சுவையே! தமிழ்மொழியை
விரும்பென வரைந்து தரும்விருந்து எம்மையும்
இரும்பொடு காந்தமென இழுக்குதே இங்கு!
Supprimerவணக்கம்
கண்ணிரண்டும் காந்தம்! கருங்கூந்தல் வான்மேகம்!
விண்திரண்ட விண்மீன் வியனழகி! - பெண்ணவள்
ஒப்பற்ற பேரழகி! ஒண்டொடியைக் காணாநாள்
உப்பற்ற தன்மை உடைத்து!
RépondreSupprimerவண்ணம் பலகண்டும் வாழ்வின் நிலைகண்டும்
எண்ணம் எழகண்(டு) இயற்றினீர்! – பண்புடைய
வெண்கவிகள் ஐநூறால் வீழ்ந்தோம் எனசொன்னார்
பெண்கள் பெருமூச்சு விட்டு!
--
Supprimerவணக்கம்!
வெண்பா விருந்தை விரும்பிப் படைத்திட்டேன்!
தண்பா செழித்துத் தழைத்திடவே! - எண்ணத்துள்
நின்றே எனையியக்கும் நேரிழையாள் பார்வையோ
நன்றே கணைதொடுக்கும் நாண்!
RépondreSupprimerவணக்கம்!
காதல் கமழ்கவியைக் கற்றுக் களிப்பவா்கள்
மாதா் மனம்அமா்ந்து வாழ்ந்திடுவார்! - போதையென
எண்ணம் மணக்க இசைத்த கருத்துக்கள்
வண்ணம் மணக்கும் வகை